Friday, January 11, 2008

கடவுளைத் தேடி...

விவேகானந்தரின் பிறந்த தினம் - ஜனவரி 12.

சுவாமி விவேகானந்தர் என்றவுடனேயே நம் எல்லோருடைய நினைவுக்கும் வருவது அவரது சிகாகோ சொற்பொழிவுகள்தான்! மேலும் அவரை மகான் என்றும், தேசபக்தர் என்று மட்டுமே தெரியும். ஆனால் அவர் ஒரு கவிஞராகவும் இயங்கியிருக்கிறார் என்பது அவரை அறிந்த ஒரு சிலருக்கே தெரியும்.

சுவாமி விவேகானந்தரின் கவிதைகளை ‘கடவுளைத் தேடி‘ என அழகுதமிழில் ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ளது. சுவாமி விவேகானந்தரின் கவிதைகளை அழகுதமிழில் சுவைபட மொழிமாற்றம் செய்திருப்பவர் திருமதி. சௌந்தரா கைலாசம் அவர்கள்.

சுவாமி விவேகானந்தரின் வேதாந்தச் சொற்பொழிவுகளையும் வாழ்க்கை வரலாறையும் படித்தவர்கள் ஒரு மாறுதலுக்கு அவரது கவிதைகளையும் அறிந்துகொள்ளட்டுமே என்று அவரது இந்த பிறந்த தினத்தில் தோன்றியதால், உங்கள் பார்வைக்கு ஒரு சில கவிதைகளை மட்டும் அப்புத்தகத்தில் இருந்து எடுத்துத் தந்திருக்கிறேன்.


என் ஆன்மாவுக்கு!

நிகழ்காலம் பெருங்கேடு
நிறைந்தது வாய்த் தெரிந்தாலும்
வகையற்ற வல்லிருளாய்
வருங்காலம் தோன்றிடினும்

உளஉறுதி கொண்டவனே!
உன்வாழ்நாள் பிணைப்பதனை
விலக்கிவிட்டுப் போகாமல்
விரும்பித் தொடர்ந்திடுக!

உன்னோடு நான்முன்னம்
உயர்மலையும் பள்ளத்தும்
நன்று நடைதொடங்கும்
நாளில்யுகம் தோன்றியது!

வற்றாப் பெருங்கடலில்
வழக்கத்தின் மாறாக
உற்ற இழைவுடனே
ஒரு பயணம் நீசெய்து

முன்னர் மனப்போக்கை
முறையாய் அறிவித்தாய்
என்னில் எனக்கருகே
இருந்திட்டாய் பலமுறைகள்!

என் துடிப்பை அப்படியே
எதிரொலிப்பாய் - உன்னுடைய
எண்ணங்கள் துல்லியமாய்
எழில்விரித்து நின்றாலும்

இப்போது பிரிவுற்று
இருவருமே செல்வதுவோ?
செப்பிடுக என்பால்நீ
சிறந்த பதிவாளா!

உயர்நட்பு நம்பிக்கை
உன்னிடத்தில் உள்ளனவே!
துயர்நல்கும் எண்ணங்கள்
தோன்றுங்கால் நீதோன்றி

எச்சரிக்கை செய்கின்றாய்
என்றாலும் நானதனைத்
துச்சமென எறிந்தன்றோ,
தொடர்கின்றேன் வழக்கம்போல்!



கிருஷ்ணா... என்னை விட்டுவிடு!

அன்பு நண்பனே கிருஷ்ணனே!
ஆற்றுக் கென்றனைப் போகவிடு!
இன்றுநான் நிச்சயம் செல்லவேண்டும்;
என்னைநீ உடனே விட்டுவிடு!

ஏற்கென வேநான் உனக்கடிமை
என்னிடம் ஏனோ உன் குறும்பு!
என்றன் தோழனே என்னைவிடு
இன்று நான் உறுதியாய்ச் செல்லவேண்டும்.

என்றன் குடத்தில் யமுனையின்நீர்
எடுத்து நிரப்பி வரவேண்டும்.
இருகரம் கூப்பி வேண்டுகிறேன்!
இனிய நண்பனே! என்னைவிடு!



சமாதி

சூரியன் இல்லை சந்திரன் இல்லை
சுடரும் ஒளியும் மறைந்ததுவே!
பாருல கத்தின் சாயலை ஒத்துப்
பரந்த வெளியில் மிதந்ததுவே!

உள்முக மொடுங்கிய உளத்தின் வெறுமையில்
ஓடும் அகிலம் மிதக்கிறதே!
துள்ளி எழும்பிடும்; மிதக்கும்; அமிழ்வுறும்;
தொடரும் மறுபடி ‘நான்‘ அதனில்!

மெல்லவே மெல்லவே சாயைகள் பற்பல
மீண்டன மூலக் கருப்பையுளே!
‘உள்ளேன் நான், உள்ளேன் நான்‘ எனும் நீர் ஓட்டமே
ஓடிய தேதொரு முடிவின்றி!

ஒழுகலும் நின்றிட வெறுமையுள் வெறுமையாய்
உலகம் அடங்கிக் கலந்ததுவே!
மொழிவதும் இல்லை, நினைப்பதும் இல்லை
முற்றும் உணர்பவன் செயல்புரிவான்.

No comments: