Friday, February 25, 2011

காதலர் தினத்தன்று காதலோடு (கிழக்கு அதிரடி புத்தகத் திருவிழா)

ஒரு பத்து தினங்களுக்கு முன்பு நண்பர் முத்துராமனிடமிருந்து ஒரு போன் வந்தது. எப்படியிருக்கிறீர்கள் என்ற குசல விசாரிப்புகளுக்குப் பிறகு, கிழக்கு பதிப்பகத்தின் க்ளியரன்ஸ் ஸேல் (அதிரடி புத்தகத் திருவிழா) நடக்கிறது சென்று பார்த்தீர்களா என்று விசாரித்துவிட்டு, உங்கள் புத்தகங்களும் அதில் உள்ளன, தேவையானதைச் சென்று வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறினார். அன்று மாலையே தி.நகர் சிவா விஷ்ணு கோயில் எதிரில் எல்.ஆர்.ஸ்வாமி ஹாலில் நடைபெறும் புத்தக விற்பனை இடத்துக்குச் சென்றேன்.

அன்று என் கையில் இருந்த தொகை வெறும் ரூ.150 மட்டுமே. அந்தத் தொகைக்கு மட்டும் முதலில் புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்தேன். காதலர் தினத்தன்றும் காதலோடு சென்று சில புத்தகங்களை வாங்கி வந்தேன். அதன்பின் விசாரித்ததில் 21-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்றார்கள். இதன்பின் இரண்டு முறை நண்பர்களிடம் பணம் கடன் வாங்கிக்கொண்டு ரூ900 வரை புத்தகங்கள் வாங்கிவந்தேன். பின்னர் 28-ஆம் தேதிவரை என்றார்கள். நேற்றும் ரூபாய் 150-க்குள் புத்தகங்கள் நண்பருடன் சென்று வாங்கினேன்.

நண்பருக்கு நான் பலமுறை, கிழக்கின் பல புத்தகங்களை அலுவலக ஊழியன் என்ற முறையில் அதற்கான சலுகை விலையில் வாங்கித் தந்திருக்கிறேன். அவரோ இப்போது விற்கும் அதிரடிக் குறைப்பு விலையைப் பார்த்துவிட்டு, முன்னரே இப்படி வரும் என்று தெரியாமல் கிழக்கின் 70 சதவிகிதப் புத்தகங்களை வாங்கிவிட்டேனே என்று வருத்தப்பட்டார். முன்னரே இப்படி வரும் என்று சொல்லக்கூடாதா என்று என்னிடம் வேறு கோபித்துக்கொண்டார். யாருக்குத் தெரியும், கிழக்கு இப்படி ஒரு அதிரடி புத்தகத் திருவிழாவைக் கொண்டாடுமென்று?புத்தகம் வாங்க வந்திருந்த ஒரு சிலரும், கிழக்கு இப்படி விற்பதைப் பார்த்து பல பதிப்பாளர்கள் கோபம் கொண்டாலும் கொள்ளலாம் பாருங்கள் என்றனர். உடன் நான், இதைப் பார்த்து பல பதிப்பகங்களும் ஏன் இப்படிக் கொண்டுவரக் கூடாது? அப்படிக் கொண்டுவந்தால் நல்லதுதானே? அதற்கு முன்னுதாரணமாக இதைக் கொள்ளுங்களேன் என்றேன். இதற்குப் பதிலாக அந்த நபர், இரண்டு மூன்று முறை பதிப்புகள் போட்டு நன்றாக விற்பனையாகி, அதன்பின் விற்பனையாகாமல் தேங்குபவற்றை வேண்டுமானால் இப்படிப் போடலாம். முதல் பதிப்பு போட்டவற்றையே இப்படிப் போடும்போதுதான் சங்கடமாக இருக்கிறது என்றார். இப்படிச் சொன்னபோதுதான் எனக்கும் ஓர் எண்ணம் தோன்றியது.
சமீபத்திய புத்தகக் கண்காட்சியில் ஜெயமோகனின் ஒரு நூலை ரூ100 விலையில் 600 பிரதிகள் போட்டு அவை விற்றுத் தீர்ந்த வேகத்தைப் பார்த்து, மேலும் ஐயாயிரம் பிரதிகளை பாதிக்குப் பாதி விலையான ரூ50 விலையில் அச்சிட்டிருக்கிறோம் என பத்ரி அவர்கள் குறிப்பிட்டிருந்தார். இதுபோன்று, முதலில் அச்சிடும் ஒவ்வொரு புத்தகத்தையுமே அவற்றின் தரத்துக்கேற்ப குறைந்த விலையில் அச்சிட்டால், இப்படி ஒரு நிலை பின்னர் ஏற்படாதிருக்குமே என்ற எண்ணமே அது.
எது எப்படியோ, அச்சடித்தவைகளையெல்லாம் அவை விற்கும்போது விற்கட்டும் என்ற காத்திருப்பில் செல்லரிக்க விடாமல், குறைந்த விலையிலாவது (எண்பது சதவிகிதம் வரை தள்ளுபடி - புத்தகங்களுக்குத் தகுந்தாற்போல்) அவற்றை மக்கள் வாங்கிச் சென்று படிக்கட்டும் என்ற பத்ரியின் உண்மையான அக்கறைக்கு ஒரு ராயல் சல்யூட் வைத்தே ஆக வேண்டும். அவர் கடை விரித்திருக்கிறார், நீங்கள் கொள்ளத் தயாராகுங்கள். தி.நகரில் என் கேமராவில் க்ளிக்கியவையே இங்கு உங்கள் பார்வைக்கு விருந்தாக்கியிருக்கிறேன். இதனுடன் என் வீட்டு லைப்ரரி படங்களும் உண்டு.

இன்றோடு சேர்த்து இன்னும் மூன்றே நாட்கள்தான் இந்த விற்பனை. விற்பனை நடைபெறும் இடங்கள் கீழே.

இடம் 1:
மைலாப்பூர் குளம் எதிரில்.
தொலைபேசி எண் : 9500045643

இடம் 2:

L.R. சுவாமி ஹால்
சிவா விஷ்ணு கோயில் எதிரில்
சங்கர பாண்டியன் ஸ்டோர் அருகில்
தி. நகர்,சென்னை
தொலைபேசி எண் : 9500045608

தேதி:
பிப்ரவரி 28 வரை.

-சைதை முரளி.

Tuesday, February 01, 2011

சேலையூர் அபிராமி திருக்கோயில்அபிராமி என்றாலே, சட்டென்று எல்லோருக்கும் நினைவுக்கு வரும் ஊர் திருக்கடவூர். இவ்வூர் மாயவரத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும்வழியில் அமைந்துள்ளது. அன்னையின் திருவிளையாடல் மட்டுமல்ல, ஈசனின் திருவிளையாடலும் நிகழ்ந்த ஊர் இது. அதுவும் வீரட்டானத் திருவிளையாடல். சிவபெருமான் வீரச்செயல் புரிந்த இடங்களை ‘வீரட்டானங்கள்’ என்றழைப்பர்.மார்க்கண்டேயரைத் தெரியாதவர்கள் பக்தியுலகில் எவரும் இருக்க இயலாது. ‘என்றும் பதினாறு’ மார்க்கண்டேயர் என்றால், ஒருசிலருக்கு உடனே புரியும். சிவபக்தியில் சிறந்து விளங்கியவர் மார்க்கண்டேயர். இவர் மிருகண்டு முனிவரின் புதல்வர். பதினாறு வயதில் மார்க்கண்டேயருக்கு மரணம் என்பது பிரமன் விதித்த விதி. இதையறிந்த மார்க்கண்டேயர் இறையருள் பெற 108 தலங்களுக்கும் சென்று வழிபட்டார். 108-வது தலமாக திருக்கடவூர் சென்று அமிர்தகடேஸ்வரரைத் தஞ்சமடைந்து மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்திரத்தால் அவரை வழிபட, இறைவன் ம்ருத்யுவாகிய யமன் வரும் வேளையில் காலனைத் தன் காலால் சம்ஹாரம் செய்து, வீரச்செயல் புரிந்து மார்க்கண்டேயரைக் காப்பாற்றியருளினார். இது ஈசன், தன் பக்தரான மார்க்கண்டேயருக்காகச் செய்த திருவிளையாடல்.

அமிர்தகடேஸ்வரரின் திருவிளையாடல் ஒருபுறமெனில், அன்னை அபிராமியின் அருள் விளையாடலோ இன்னொரு புறம். அதியற்புதமான விளையாடல் அது! ‘தான் வேறு, தன் பக்தன் வேறல்ல’ என்பதை, உலகுக்கு உணர்த்தத் திருவுள்ளம் கொண்ட அன்னையின் பரவச விளையாடல் அது. இந்த விளையாடலின் விளைவாக விளைந்ததுதான் ‘அபிராமி அந்தாதி’ என்கிற அந்த அருந்தவ பொக்கிஷம்.சுப்பிரமணியன் என்ற அபிராமி பட்டருக்காக அபிராமி அன்னை அருட்காட்சி தந்து, அமாவாசை நாளை பௌர்ணமியாக்கிக் காட்டிய நிகழ்வு நடந்தது ஒரு தை அமாவாசையில்தான். இந்த வரலாறை அனைவருமே அறிந்திருப்போம். இவ்விரு திருவிளையாடல்களையும் கவனிக்கும்போது பக்தியையும் மீறி இரு கேள்விகள் அனைவரிடமும் எழும். அவை:

1. இறைவன் வகுத்த விதியை இறைவனே மீறலாமா?

2. பக்தனை வெளிக்காட்ட வேண்டிய அவசியம்தான் என்ன?

முதற்கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.ஒருவன் நிரபராதி. சந்தர்ப்ப சூழ்நிலையால் அவனைக் குற்றவாளியாகக் கருதி, அவனுக்குத் தூக்கு தண்டனை விதிக்கிறார்கள். தூக்கு தண்டனைக்காகக் காத்திருக்கும் அவன், ஜனாதிபதிக்குத் தன் உண்மை நிலைகளை விளக்கி மேல்முறையீடு செய்கிறான். அந்த மேல் முறையீட்டில் ஏதோ ஓர் உண்மை அவர் கண்ணைத் திறந்து மறு விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவிடுகிறார். அந்த மறு விசாரணையில் அவன் குற்றமற்றவன் என்பது தெரியவருகிறது. எனவே, அவனது தூக்கு தண்டணை தீர்ப்பு ரத்தாகிறது.

மனிதனுக்கு ஜனாதிபதி இறைவன் எனில், பக்தனுக்கு ஜனாதிபதியாகத் திகழ்பவன் சாட்சாத் அந்த இறைவன்தானே! சட்டத்தைப் படைத்தவன் மனிதன்; சட்ட திருத்தங்களைப் படைத்தவனும் மனிதன்; அந்த சட்டத்தையே கையில் எடுப்பவனும் மனிதன்.

மனிதனைப் படைத்தவன் இறைவன்; அவனின் விதியை நிர்ணயிப்பவனும் இறைவன்; அந்த விதியையே மாற்றுபவன் - அதாவது கையில் எடுப்பவனும் - இறைவன் என்று கொண்டால், முதல் கேள்வி எழுந்த சுவடே தெரியாமல் மறைந்துவிடும்.அடுத்து, இரண்டாவது கேள்விக்கான பதிலையும் பார்ப்போம்.

பித்தம் தலைக்கேறினால் பைத்தியம் பிடிக்குமென்பர். ஒருவருக்கு சினிமாமீது அதீத நாட்டம் இருந்தால், அவரை ‘சினிமா பைத்தியம்’ என்கிறோம். இசையின்மீது பித்து அதிகமானால், ‘இசைப் பைத்தியம்’ என்கிறோம். அதுவே புத்தகத்தின்மீது எனில், ‘புத்தகப் பைத்தியம்’ என்கிறோம்.

அதாவது, ஒன்றின்மீது பைத்தியம் என்பது, அளவுகடந்த அன்பு, ஆர்வம் அதில் இருப்பதையே தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. ‘உள்ளே அன்பிலாது வெளியே அன்பு காட்டுகிறேன் பேர்வழி’ என்று நடிப்பவர்களால், உண்மை அன்பைப் புரிந்துகொள்ள இயலாது. பட்டருக்கு இருந்ததோ ‘அபிராமி’ பைத்தியம். பக்தன் தன்மேல் வைத்திருக்கும் அந்த உண்மை அன்பை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்ட அன்னை விரும்பியதன் விளைவே, சமயம் பார்த்து சுப்பிரமணியனை அபிராமி பட்டராக்கினாள்.வரும் தை அமாவாசை நாளில் திருக்கடவூர் சென்று அன்னையைத் தரிசிக்க இயலாதவர்கள், இங்கு சென்னை அடையாறில் அமைந்திருக்கும் மத்ய கைலாஸ் என்றறியப்படும் நடுக்கயிலாயத்தில் சென்று அன்னையைத் தரிசிக்கலாம். இங்கு அன்னை அபிராமிக்கு தனிச் சந்திதி அமைத்துள்ளார்கள். இச்சந்நிதியில் அபிராமி பட்டர் மற்றும் மகாகவி பாரதி இருவருக்கும் உத்ஸவ சிலைகள் அமைத்திருப்பதும் தனிச் சிறப்பாகும். இங்கு சென்று அன்னையைத் தரிசிக்கலாம். அன்றைய நாள் மாலை அபிராமி அந்தாதி பாராயணம் இத்திருக்கோயிலில் நடைபெறுகிறது.

இதேபோன்று சைதை காரணீஸ்வரர் கோயிலில் அன்னை சொர்ணாம்பிகையையே அபிராமியாக அன்றைய நாளில் அலங்கரித்து, அபிராமி அந்தாதி பாராயணமும், நிலவுக் காட்சியும் காட்டுவார்கள். சைதை செட்டித் தெருவிலுள்ள காமாட்சி அம்மன் கோயிலிலும் நிலவுக்காட்சி காட்டப்படுகிறது.

மேலும், சென்னையின் திருக்கடவூர் என்றே அறியப்படும் அன்னை அபிராமியின் திருக்கோயில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இரண்டரை கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சேலையூர் கேம்ப் ரோடில் அமைந்துள்ள அபிராமி கோயிலுக்கும் சென்று தரிசிக்கலாம்.சேலையூரில் அமைந்திருக்கும் இந்தத் திருக்கோயில் மிகவும் புராதனமானது. 1970-ல் காஞ்சி மகா பெரியவர் சென்னை விஜயம் செய்தபோது, இவ்வூரில் பழங்காலச் சிலைகள் புதைந்துள்ளன. அவற்றைக் கண்டுபிடித்துக் கோயில் கட்டுங்கள் என்று அருளாசி வழங்கக் கிடைத்ததுதான் இந்த அன்னையின் திருக்கோயில்.

இக்கோயில் இருந்த இடம் முன்னர் மண்மேடாக இருந்தது. மண்மேடை அகற்றும்போது அமிர்தகடேஸ்வரர் மூல விக்கிரகம் கிடைத்தது. அருகில் இருக்கும் முத்தாலம்மன் கோயிலிலும் அச்சமயம் பல சிலைகள் கிடைத்தன. அதில் அன்னை அபிராமியின் விக்கிரகமும் கிடைத்தது. சிலைகள் பல கிடைத்தமையால் சிலையூர் என வழங்கப்பட்டுவந்த இந்த ஊர் நாளடைவில் சேலையூராக மாறிவிட்டது.

பழங்காலத் தமிழ் மன்னர்களான பல்லவர் காலத்தில், திருக்கடையூர் அபிராமி அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலைப் போலவே கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கோயில் அதன்பின்னர் மன்னர்களிடையே ஏற்பட்ட சண்டையின் காரணமாக நிறுத்தப்பட்டு அப்படியே மண்மேடாக மாறியிருக்கலாம் என்றும், படையெடுக்கும் காலத்தில் இந்தச் சிலைகள் இங்கே கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இங்கிருக்கும் ஆதி கேசவப் பெருமாள் கோயில் போன்ற சுற்றுப்புறக் கோயில்களின் கூரைச் சுவரில் மீன் சின்னமும் வில் சின்னமும் வடிக்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, பாண்டிய, பல்லவ மன்னர்களின் காலத்தில் கோயிலாக இருந்து மண்மேடாகி, பின் அந்த மண்மேடை அகற்றி இக்கோயில் சிலைகள் கிடைத்திருப்பதையும் வைத்துப் பார்க்கும்போது கிட்டத்தட்ட ஆயிரம் வருடப் பழைமை வாய்ந்த கோயிலாக இதைக் கொள்ளலாம் என்கிறார் கோயிலின் செயலாளர் ராமலிங்கம்.

மண்மேடாக இருந்த இந்த இடத்தில் ஒரு காலத்தில் வறட்டி தட்டியும், மாடு கட்டியும், சிலைகளின் மேலேயே உட்கார்ந்தும் இருந்திருக்கிறார்கள். இதன்பின்னர் மண்மேடை அகற்றும்போதுதான் இந்தச் சிலைகள் இருப்பதை அறிந்து கோயில் கட்டும் பணியைத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தக் கோயிலின் திருப்பணி ஆரம்பிக்கப்பட்டு படிப்படியாகப் புதுப்பிக்கப்பட்டு வருவது கடந்த ஐம்பது வருடங்களுக்குள் நிகழ்ந்துவரும் நிகழ்வுதான்.

1972-ஆம் ஆண்டு கிராமப் பெரியோர்களால் முதலில் அபிராமி அம்மன் கோயிலும், அமிர்தகடேஸ்வரர் கோயிலும் புதுப்பிக்கப்பட்டு, காஞ்சிப்பெரியவர் நல்லாசியுடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.1994 முதல் பிரதோஷ பூஜை நடைபெற்று வருகிறது. 1996-ல் பதினாறு கால் மண்டபம் எனப்படும் ஷோடச லக்ஷ்மி மஹா மண்டபம் ஷோடச லக்ஷ்மியுடன் அந்தந்த லக்ஷ்மியின் யந்திரங்கள் பதிப்பிக்கப்பட்டு, மண்டபத்தைக் கட்டி முடித்தோம். 1998-99ல் நடராஜர் சிலையை வைக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதன்படியே நடராஜர் சிலையும் அமைக்கப்பட்டு வருடத்தில் ஆறுமுறை அவருக்கு அபிஷேகம் நடத்துகிறோம். இதன்பின் அபிராமி அமிர்தகடேஸ்வரருக்கு ஐம்பொன் சிலைகளை உருவாக்கினோம். அபிராமி அந்தாதி பாடியவாறே பொற்குழம்பை ஊற்றி அபிராமி ஐம்பொன் சிலையை உருவாக்கினார்கள். அதேபோன்று தேவாரம் பாடியவாறே அமிர்தகடேஸ்வரர் சிலையை உருவாக்கினார்கள். பங்குனி உத்திரத்தன்று அபிராமி அமிர்தகடேஸ்வரரின் திருக்கல்யாண வைபவத்தை ஆரம்பித்தோம். திருக்கல்யாண வைபவத்துக்குப்பின் அபிராமி அமிர்தகடேஸ்வரர் திருவீதி உலா வருவார்கள். நடராஜர் ஆருத்ரா தரிசனத்தன்று திருவீதி உலா வருவார்.

இதற்குப்பின்னர் கோயில் அருகில் அபிராமி அமிர்த புஷ்கரிணியை (திருக்குளம்) அமைக்க முடிவு செய்தனர். மக்களின் நன்கொடையால் திருக்குளப் பணிகள் இனிதே நடைபெற்றது. திருக்குளத்தைச் சுற்றிவர நடைபாதை அமைத்து, சுற்றுச்சுவர்களில் வடக்கே கங்கை முதல் தெற்கே காவிரி வரை 18 நதிகளின் பெயர்களுடன் சிலைகளை அமைத்து, அந்த நதிச் சிலைகளிலிருந்து நீர் கொட்டுவது போல அமைத்துள்ளார்கள். வருடந்தோறும் மாசி மகத்தன்று சிறப்பாக இந்த நதிகளுக்கு விழாவும் கொண்டாடுகிறார்கள்.

மாசி மகத்தன்று 18 நதிகளின் புனித நீர் கொணரப்பட்டு, ஹோமங்கள் வளர்த்து, 18 குடங்களில் உள்ள தீர்த்தத்தால், 18 நதி தேவதைகளுக்கும் தனித்தனியாக பூஜை செய்து, பின்னர் இந்த 18 நதி தீர்த்த நீரை திருக்குளத்தில் கலக்கிறார்கள். இதன்பின்னரே பக்தர்கள் 18 நதிகளிலும் தனித்தனியாக கொட்டும் தீர்த்தத்தில் வரிசையாக குளத்தைச் சுற்றி நீராடுகிறார்கள். நிறைவாக 18 நதி நீரும் கலந்துள்ள இந்த அபிராமி அமிர்த புஷ்கரணியில் (திருக்குளத்தில்) நீராடுகிறார்கள். பின்னர் சிவனையும் அம்பாளையும் வணங்கி அர்ச்சனை செய்தல் சிறப்பு. புனித நதிகளில் நீராட முடியாதவர்கள் இதில் நீராடிப் புனிதமடைகிறார்கள். ஸ்நானம் செய்ய இயலாத பக்தர்கள் தலையில் இந்த நதி நீரை ப்ரோக்ஷித்தும் கொள்ளலாம்.

2006-ல் ராஜ கோபுரம் கட்ட ஆரம்பித்து, 2009-ல் கட்டி முடித்து கும்பாபிஷேகம் செய்தோம். இதன்பிறகு சுற்றுப்புற மதில் சுவர்களை எழுப்பினோம். இதன்பின் சஷ்டியப்த பூர்த்தி ஹோமத்தை இங்கும் பண்ணலாமே எனும் எண்ணம் வந்தது. மாதத்துக்கு நான்கு ஐந்து சஷ்டியப்த பூர்த்தி ஹோமங்கள் பண்ண ஆரம்பித்தோம். சஷ்டியப்த பூர்த்தியை திருக்கடையூரிலிருந்து வந்து பண்ணுகிறார்கள். விஸ்வநாத குருக்களுடைய புதல்வர்களில் யாராவது ஒருவர் ஏற்பாடு பண்ணி, இங்கு இரண்டுபேர் வந்து பண்ணி வைக்கிறார்கள். எப்படிப் பண்ணுகிறார்கள் என்றால், ருத்ர ஹோமம் பண்ணி மறுநாள் தொடர்ந்து பண்ணணும்னால் சஷ்டியப்த பூர்த்தி ஹோமம் இரண்டு நாளைக்கு இருவேளைகளில் இருக்கும். ஒருநாள்ல பண்ணணும்னா ஒருவேளை ஹோமம் இருக்கும்.சஷ்டியப்த பூர்த்தியை வசதியில்லாதவர்களும் எளிமையா பண்ணிக்கணும்கிறதுக்காக ஒரு விதி பண்ணியிருக்கோம். நூறு ரூபாய் கட்டினாலும் சஷ்டியப்த பூர்த்தி, அறுநூறு ரூபாய் கட்டினாலும் சஷ்டியப்த பூர்த்தி. ஆயிரக்கணக்கிலே செலவு பண்ணி பண்ணணும்னு விருப்பப்படறவங்களுக்கும் அதற்கேற்றாற்போல் சஷ்டியப்த பூர்த்தியை நடத்திவைப்பதுன்னு முடிவு செய்து நடத்தி வருகிறோம். 100 ரூபாய் கட்டினா அர்ச்சனை பண்ணி மாலையை மாத்தி சஷ்டியப்த பூர்த்தி. 600 ரூபாய் கட்டினா அபிஷேகம் பண்ணிவைச்சு மாலையை மாத்தி மாங்கல்ய தாரணமே பண்ணிக்கலாம். வசதியுள்ளவங்க ஹோமமும் பண்ணிக்கணும்னா ரெண்டு வேளையும் பண்ணிக்கலாம், ஒருவேளையும் பண்ணிக்கலாம்.

அபிராமிக்குச் சிறப்பான தை அமாவாசையன்று, மாலை 4.30-5க்குள் அபிராமி அந்தாதி பாட ஆரம்பிப்பார்கள். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ஒரு கூடை புஷ்பம் அம்பாளுக்கு அபிஷேகமாகச் சமர்ப்பிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். இந்த புஷ்பாஞ்சலியில் உதாரணத்துக்கு 300 பேர் பங்குபெறுகிறார்கள் எனில், ஒரு பாடலுக்கு 3 கூடை புஷ்பங்களை அம்பாளுக்குச் சமர்ப்பிப்பார்கள். இவ்விதம் புஷ்பாஞ்சலியுடன் நடைபெறும் அபிராமி அந்தாதி பாராயணம் முடிய இரவு 8.30 அல்லது 9 மணியாகிவிடும். அபிராமி அந்தாதி பாராயண நிறைவில் அம்மனுக்கு 9 வகையான பிரசாதங்கள் நைவேத்யம் செய்விக்கப்பட்டு, பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.2001-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தை அமாவாசை வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதல் வருடத்தில் அம்மனே நடத்திய திருவிளையாடல் ஒன்று மறக்க முடியாதது. 78-வது பாடல் பாடும்போது கரெண்ட் போய்விட்டது. 79-வது பாடல் ஆரம்பித்தபோது கரெண்ட் வந்தது. அதாவது, அபிராமி பட்டர் ‘விழிக்கே அருளுண்டு’ என 79-வது பாடல் பாடியபோது தன் தாடங்கத்தைக் கழற்றியெறிந்து நிலவொளி வீச வைத்தாளல்லவா! அதுபோன்று 79-வது பாடலின்போது நிலவொளியை நினைவூட்டும்விதமான அன்னை செய்த திருவிளையாடல். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் 78-வது பாடல் வரும்போது நாங்களே கரெண்டை ஆஃப் செய்து, 79-வது பாடலின் போது கரெண்டைப் போடும் முறையைக் கையாண்டு வருகிறோம்.

99-ல் தீர்மானித்த ராஜகோபுரம், திருக்குளம் மற்றும் சஷ்டியப்த பூர்த்தி மண்டப திட்டங்களில் இரண்டு நிறைவேறிவிட்டது. இப்போது சஷ்டியப்த பூர்த்தி மண்டபப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எந்தத் திருப்பணியை ஆரம்பித்தாலும் அன்னையின் அருளால், பக்தர்களின் பேருதவியுடன் அவை இனிதே நிறைவேறிவிடும். அன்னை மிகச்சிறந்த வரப்பிரசாதி என்கிறார்கள் செயலாளர் ராமலிங்கமும், துணைச் செயலாளர் விஜயகுமாரும்.

இங்க இருக்கற அம்பாள் ஒரு அடியை முன்னே எடுத்துவைத்து நமக்கு அருள்வதுபோல் இருக்கும் காட்சி ஒரு சிறப்பம்சம். இது மட்டுமில்லாம, அம்பாளின் பீடத்திலிருந்து எப்போதும் நீர்க்கசிவு இருந்துண்டே இருக்கும். மழைக்காலங்களில் இது தெளிவா தெரியும். கும்பாபிஷேகம் பண்ண சமயத்துல பீடத்திலேயிருந்து அதிகளவில் நீர்க்கசிவு இருந்தது. அதைக் கட்டுப்படுத்தியவர் சமயபுரம் உஜ்ஜயினி ஓம் காளி ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீராமநாத சுவாமிகள். அம்பாளை ஒருதரம் பிரதக்ஷிணம் வந்தாலே, ஷோடச மண்டபத்தில் அமைத்திருக்கும் ஷோடச லக்ஷ்மிகளையும் வலம் வந்த பலன். வெள்ளிக்கிழமைகளில் இந்த ஷோடச லக்ஷ்மிக்கு சிறப்பு அர்ச்சனையும் உண்டு என்கிறார் அம்பாள் அர்ச்சகர் சாம்பமூர்த்தி குருக்கள்.ஆசைதான் எல்லா மயக்கங்களுக்கும் காரணம். அதன்வழியே ஈர்க்கப்பட்டுதான் வினைகள் புரிகிறோம். அந்த வினை வழியே நமக்கு இன்பதுன்பங்கள் நிகழ்கின்றன. அதிலிருந்து மீள்வதெப்படி என்பதை அபிராமி பட்டர் பின்வரும் பாடல்களில் தெரிவிக்கிறார்.

ஆசைக் கடலில் அகப்பட்(டு) அருளற்ற அந்தகன்கைப்
பாசத்தில் அல்லல் படஇருந் தேனைநின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலைமேல் வலியவைத்(து) ஆண்டுகொண்ட
நேசத்தை என்சொல்லு வேன்ஈசர் பாகத்து நேரிழையே.

இழைக்கும் வினைவழி யேஅடும் காலன் எனைநடுங்க
அழைக்கும் பொழுதுவந்(து) அஞ்சல்என் பாய்அத்தர் சித்தம்எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே
உழைக்கும் பொழு(து)உன்னை யேஅன்னை யேஎன்பன் ஓடிவந்தே.

இந்த இரு பாடல்களையும் பாராயணம் செய்துவந்தால் அகால, துர்மரணங்கள் ஏற்படாது என்பதுடன், உயிர் பிரியும் நேரத்திலும் அம்பிகையின் நினைவு அகலாதிருக்கும்.நம் எல்லா மன மயக்கங்களுக்கும் மாயைதான் காரணம் என்பார்கள். அந்த மாயை அகலவேண்டுமெனில்,இந்தப் பாடலைப் படித்து அன்னையைத் தியானித்தால் போதும்.

சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்
பென்னம் பெரிய முலையும்முத் தாரமும் பிச்சிமொய்த்த
கன்னங் கரிய குழலும்கண் மூன்றும் கருத்தில்வைத்துத்
தன்னஞ் தனியிருப் பார்க்கிது போலும் தவமில்லையே.

அவசியம் ஒருமுறையேனும் அன்னையைச் சென்று தரிசியுங்கள்.

நன்றே வருகினும் தீதே விளைகினும் நான்அறிவ(து)
ஒன்றேயு மில்லை உனக்கே பரம்எனக்(கு) உள்ளஎல்லாம்
அன்றே உனதென்(று) அளித்துவிட் டேன்அழி யாதகுணக்
குன்றே அருட்கட லேஇம வான்பெற்ற கோமளமே

என்று அன்னையிடம் மனமுருகித் தெரித்தவாறே நம் கவலைகளையெல்லாம் அவள்முன் இறக்கிவைத்து, அவள் எழிற்கோலத்திலே மனத்தை ஈடுபடுத்துகிறோம். அவளின் கோலமே நம்முள் அமிர்தமாகப் புத்துணர்வைப் பாய்ச்சுகிறது. அவளிடமிருந்து பிரிய மனமில்லாமலே கோயிலை விட்டு வெளியில் வருகிறோம். அன்னை நம்மைப் பின்தொடர்ந்து வருவது போன்ற ஓர் உணர்வில் சாந்தி கொள்கிறோம்.

Monday, October 11, 2010

நவராத்திரியில் நவதுர்கா தேவியின் மஹிமை...நவராத்திரியில் நவதுர்கா தேவியின் மஹிமை...

எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில். அத்தனை பேருக்கும் நம் வணக்கங்கள். அப்படிப்பட்ட மகான்களில் ஒருவர்தான் பகவான் ஸ்ரீ ஹரி ஸ்வாமிஜி அவர்கள். கிருஷ்ண பக்தரான ஹரி ஸ்வாமிகள் பகவத்கீதையைக் குறித்த விளக்கத்தை பல்லாண்டு காலமாக மேத்தா நகரில் இருக்கும் அவரது பிருந்தாவனத்தில் நிகழ்த்தி வருகிறார். இது மட்டுமல்லாமல், ஆண்டாளின் திருப்பாவைக்கு விளக்கவுரை நூலும், நவ துர்கா மந்திர ஸ்லோகம், ஸ்ரீலக்ஷ்மி ஸ்லோகம், பகவத்கீதை விளக்கவுரை நூல் என பல்வேறு நூல்களும் எழுதி, அதை பக்தி சிரத்தையுடன் படிக்கும் பக்தர்களுக்கு இலவச வெளியீடாகவும் தந்து தொண்டாற்றி வருகிறார். அண்மையில் 8.10.2010 நவராத்திரி முதல் நாளன்று மாலை, மயிலை வெங்கடேச அக்ரஹாரத்திலுள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகா ஹாலில் ‘நவராத்ரி நவதுர்கா தேவியின் மஹோத்ஸவ மஹிமை’ என்ற தலைப்பில் அருளுரை ஆற்றினார். இந்த அருளுரை நிகழ்ச்சி 2 மணி நேரத்துக்கு நடந்தது. சுவாமிஜி அவர்கள் ஒவ்வொரு துர்கையைப் பற்றி விளக்கிக் கூறும்போதும், அந்தந்த துர்கைக்கு உரிய கோலத்தில் சிறுமிகளை அலங்கரித்து மேடைக்கு அனுப்பிவைத்த நிகழ்வு பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது. இனி, நவதுர்கைகள் குறித்து சுருக்கமாகப் பார்ப்போம்:

உலக உற்பத்தியின் காரணியான ஜெகன்மாதா துர்காதேவியின் அவதார லீலா விநோதமே நவதுர்கா வெளிப்பாடு. வருஷ ருது காலத்தில், புரட்டாசி மாத சுக்லபட்சத்தில் முதல் ஒன்பது நாட்களில், ஓங்கார நாதத்வனியாக அனைத்திலும் வ்யாபித்து அருள்பாலிக்க, வன துர்கா, சூலினி துர்கா, ஜாதேவதோ துர்கா, சாந்தி துர்கா, சபரி துர்கா, ஜ்வாலா துர்கா, லவண துர்கா, தீப துர்கா, அஸுரி துர்கா என ஒன்பது சக்திகளாகப் பிரிந்து, விஜயதசமியன்று ஜெயம் கொண்டு, அந்த ஜெயத்தை நமக்கும் தருவதற்காக நம் இல்லம்தோறும் விஜயம் செய்பவளான அன்னையை பூஜிப்பதனால், ஸர்வ பாப நிவர்த்தி, க்ரஹ தோஷ நிவர்த்தி, தீராத ரோஹ நிவர்த்தி, விவாஹ ப்ராப்தி, குடும்ப க்ஷேமம், தாம்பத்திய ஒற்றுமை, ஆயுள் ஆரோக்கிய ப்ராப்தி, புத்ர ப்ராப்தி, வித்யா ப்ராப்தி, உத்யோக ப்ராப்தி, அஷ்ட ஐஸ்வர்ய ப்ராப்தி மற்றும் ஸகல காரிய சித்திகளும், ஸகல சௌபாக்கியங்களும் இகபர சுகங்களும் ஏற்படும்.

நவராத்திரியில் மட்டுமல்லாது, ஒவ்வொரு அமாவாசையை அடுத்துவரும் ஒன்பது தினங்களிலுமே மாலையில் இந்த நவதுர்கையரை வழிபட்டு பலன் பெறலாம். தசமி திதியான பத்தாம் நாளன்று சாமுண்டி துர்கையை வழிபட்டு பேரின்பப் பெருவாழ்வை அடையலாம்.

அந்த நவதுர்கா தேவியரின் லகு பூஜா முறைகளை இமேஜ் வடிவத்தில் தந்துள்ளேன். படித்துப் பயன்பெறுங்கள். மேலும் விவரங்கள் தேவையெனில், சந்தோஷ் 98849 79899 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Friday, July 23, 2010

பிருந்தாவனங்களும் அதிஷ்டானங்களும்...மஹா பெரியவாளின் பிடி அரிசி திட்ட சேவையில் பங்கேற்று, கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக அதைச் செய்து வருகிறேன். கடந்த சில மாதங்களாக பிடி அரிசி திட்டத்தில் தானும் பங்களித்து, பெரியவாளின் மஹிமைகள் பலவற்றை அவ்வப்போது என்னுடன் பகிர்ந்தும் வந்தார் பரமாச்சார்யாளின் பரம பக்தரான பெரியவர் மஹேந்திரவாடி உமாசங்கரன் அவர்கள். அவர் ‘ஜகத்குரு’ பத்திரிகையில் ஸ்ரீகாஞ்சிப் பெரியவர் மஹிமைகள் பற்றி எழுதி வந்ததையும் குறிப்பிட்டுப் பேசினார். அப்படியென்றால் சமீபத்திய இதழ் ஒன்றைப் படிக்கத் தாருங்களேன் எனக் கேட்டேன். ஜூன் 2010 இதழைத் தந்தார். அதில் பிருந்தாவனங்களும் அதிஷ்டானங்களும் என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகியிருந்தது. பெயர் பிரசுரிக்க விடுபட்டிருந்ததுடன், குறிப்பிட்ட சில தகவல்களும் விடுபட்டுவிட்டது எனக் குறிப்பிட்டார். படித்துப் பார்த்த எனக்கு, இதனை அப்படியே பிளாக்கில் படிக்கத் தந்தால் என்ன என்று தோன்றியது. அந்தப் பெரியவரிடம் விடுபட்டவைகளையும் எழுதித் தாருங்கள் எனக் கேட்டேன். தந்ததை அப்படியே தந்திருக்கிறேன். இதுவும் ஒருவித சேவைதான் அல்லவா! வடதிருநாரையூர் என்றழைக்கப்படும் சென்னை சைதாப்பேட்டை சௌந்தரேஸ்வரர் சமேத திரிபுரசுந்தரி கோயிலில் சமீபத்தில் நடைபெற்ற அனுஷ பஜனையின்போது எடுத்த சில புகைப்படங்களையும் கட்டுரையின் இடையே தந்திருக்கிறேன். கண்டு களிப்பதுடன் நில்லாமல் உங்கள் கருத்துகளையும் தெரிவித்தால் மகிழ்வேன்.


ஸ்ரீகாஞ்சிப் பெரியவர் மஹிமைகள்...
பிருந்தாவனங்களும் அதிஷ்டானங்களும்

-மஹேந்திரவாடி உமாசங்கரன்
ஸ்ரீஆதிசங்கரரின் மறு அவதாரமாகவும், ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியின் சொரூபமாகவும் போற்றப்பட்டவர் நம் சுவாமிகள். நம் வேதங்களைக் காப்பாற்றவும் வளர்க்கவும் அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் சொல்லில் அடங்கா. நம்முடைய தர்ம சாஸ்திரங்களில் சொல்லியபடி, ஒவ்வொருவரும் நடக்க வேண்டும் என்பதில் மிகவும் அக்கறை எடுத்துக்கொண்டார். தனக்கு முன்பு மடத்தை அலங்கரித்த ஆசார்யர்களிடம் அவர் மிகவும் பக்தி கொண்டிருந்தார்.அவர் நாடெங்கும் விஜயம் செய்திருந்தாலும், தன்னுடைய ஆசார்யர்கள் பிருந்தாவனம் அமைந்த பகுதிகளில் பெரும்பாலும் தங்குவது வழக்கம். குறிப்பாக காஞ்சி, சிவாத்தானம், கீழம்பி, கலவை, இளையாற்றங்குடி போன்ற இடங்களில் அவர் மாதக்கணக்கில் தங்கியிருந்திருக்கிறார்.

மஹான்களின் பிருந்தாவனங்கள், அதிஷ்டானங்களில் என்றும் அதிர்வலைகள் இருக்கும். வந்து வணங்கும் அடியார்களுக்கு அதனால் க்ஷேமங்கள் ஏற்படும். சென்னையை அடுத்த திருவொற்றியூரில், காஞ்சி மடாதிபதிகளின் 3 ஆசார்யர்களின் பிருந்தாவனங்களும், பட்டினத்தார், பாடகச்சேரி ஸ்வாமிகள் அதிஷ்டானங்களும் உள்ளன.திருவான்மியூரில் பாம்பன் ஸ்வாமிகள், பறவை அம்மா அதிஷ்டானங்கள் உள்ளன. ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளின் பிருந்தாவனம் அமைந்திருக்கும் மந்திராலயம் எவ்வளவு புகழ்பெற்று விளங்குகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஸ்ரீரகோத்தம ஸ்வாமிகள், ஸ்ரீஞானாநந்த ஸ்வாமிகள் பிருந்தாவனங்கள் திருக்கோயிலூரில் அமைந்திருக்கின்றன. சென்னையிலும் பாண்டிச்சேரியிலும் நிறைய மஹான்களின், சித்தர்களின் அதிஷ்டானங்கள் உள்ளன.நம்முடைய காஞ்சிப் பெரியவரின் பிருந்தாவனம், காஞ்சி சங்கரமடத்துக்குள் அமைந்திருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் சமயங்களில் கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்வதுபோல், மஹான்களின் பிருந்தாவனங்களுக்கும் சென்று தரிசனம் செய்யவேண்டும்.

விழுப்புரத்துக்குத் தெற்கே சேந்தலூர் என்ற ரயில் நிலையம் இருக்கிறது. அதற்கு அருகாமையில் வடவாம்பலம் என்ற சிற்றூர் இருக்கிறது. காமகோடி மடத்தின் 58-வது பீடாதிபதியாக இருந்த ஆத்ம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவ்வூரில் சித்தி அடைந்திருப்பதாக மடத்தின் குரு பரம்பரை கூறியதாக வந்த செய்தியை வைத்து அவ்வூருக்குச் சென்று, கிராமத்திலுள்ள பல இடங்களில் சுற்றிவந்த நம் பெரியவர்கள், கடைசியாக ஒரு இடத்தைக் காட்டி அங்கே தோண்டிப் பார்க்கும்படி சொன்னார். பின்தொடர்ந்துவந்த கிராம மக்கள் தாங்கள் பல காரணங்களுக்காக அங்கே தோண்டிப் பார்த்திருப்பதாகவும், அங்கே எந்த மஹானும் சித்தி அடைந்திருப்பதற்கான அடையாளங்கள் ஏதும் இல்லை என்றும் கூறினார்கள். ஆனால், அந்த இடத்தில் ஓர் கிணறு மட்டும் தென்பட்டதாக கிராம மக்கள் பெரியவர்களிடம் கூறினார்கள்.நம் பெரியவர்கள் கிராம மக்களை வற்புறுத்தி, அதே இடத்தில் மேலும் ஆழமாகத் தோண்டிப் பார்க்கும்படி கட்டளையிட்டார்கள். சிறிது ஆழத்தில் ஓர் கபாலம் தென்பட்டதாம். அங்கே இருந்த மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டிருந்த ஸ்ரீகுமாரமங்கலம் சாம்பமூர்த்தி சாஸ்திரி என்பவர் மூர்ச்சையாகி கீழே சாய்ந்துவிட்டார். அவர் மற்றவர்களைப் பார்த்து, ‘நிறுத்து நிறுத்து’ என்று உரக்கக் கூறினார். சிறிது நேரம் கழித்து அவருக்கு மயக்கம் தெளிந்து சுயநினைவு வந்தது. தான் கண்ட காட்சியை அவர் கீழ்க்கண்டவாறு விவரித்தார்:

‘காஷாய வஸ்திரம் உடுத்தி, கையில் தண்டம் ஏந்தி, நெற்றியில் விபூதியணிந்து, கழுத்தில் ருத்திராக்ஷ மாலையுடன் ஆகாயத்தை அளாவி நிற்கும் துறவியின் உருவம் ஒன்று என் கண்முன் தோற்றமளித்தது. அந்த உருவத்தின்முன் ஆயிரக்கணக்கான அந்தணர்கள் உபநிஷத் பாராயணம் செய்வதைக் கண்டேன். அந்தப் பெரிய ஸ்வரூபம், அந்தப் பாராயணத்தை நிறுத்தும்படி உத்தரவிட, நானும் வேகமாகத் தாவி நிறுத்தும்படிக் கூறினேன். மேலும் தோண்டாதே, தோண்டாதே என்று மெல்லிய குரலில் அவ்வுருவம் சொல்லிக்கொண்டிருந்ததை நான் கேட்டேன். பிறகு அந்த உருவம் வரவரச் சிறிதாகிக்கொண்டே என் கண்களிலிருந்து மறைந்துவிட்டது. அதன்பின், ‘சதாசிவம், சதாசிவம்’ என்று யாரோ ஜபித்துக்கொண்டிருந்த ஒலி மட்டும் காதில் விழுந்துகொண்டிருந்தது. அதுவும் சற்று நேரத்தில் நின்றுவிட்டது’ என்றார்.பெரியவர்கள் விரும்பியபடி அந்த நிலம் மடத்துக்கு சாசனம் செய்விக்கப்பட்டு, அந்த ஊர் ரெட்டியார் ஒருவரின் மேற்பார்வையில் அங்கே பிருந்தாவனமும் கட்டுவிக்கப்பட்டது. 1927-ஆம் வருடம் ஜனவரி மாதம் 17-ஆம் தேதி, பெரியவர்களால் அந்த பிருந்தாவனம் பிரதிஷ்டை செய்விக்கப்பட்டது.

65-வது பீடாதிபதியாக இருந்த மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் பிருந்தாவனம் இளையாற்றங்குடியில் இருக்கிறது. அங்கு 1925-ஆம் ஆண்டும் அதற்கு முன்பு 1922-ஆம் ஆண்டும் நம் பெரியவர்கள் அந்த அதிஷ்டானத்தைத் தரிசனம் செய்தார்கள். 1920-ஆம் ஆண்டு 57-வது பீடாதிபதியாக இருந்த பரமசிவேந்திர ஸ்வாமிகளின் அதிஷ்டானம் உள்ள திருவெண்காட்டிற்குச் சென்று அங்கே தரிசனம் செய்தார்கள்.

இந்த மஹான் ஸ்ரீசதாசிவ பிரும்மத்தின் ஞான குருவாக விளங்கியவர்கள். நெரூரில் ஒருவார காலம் தங்கியிருந்து ஸ்ரீசதாசிவ பிரும்மத்தின் அதிஷ்டானத்தைத் தரிசனம் செய்தார்கள் பெரியவர்கள்.1919-ஆம் ஆண்டு கும்பகோணத்திலுள்ள மடத்தில் பெரியவர்கள் முகாமிட்டிருந்தார்கள். அப்பொழுது அந்த மடத்தின் தோட்டத்திலுள்ள மூன்று ஆசார்யர்களின் பிருந்தாவனங்களைத் தரிசித்த பிறகு, தன்னுடைய விஜய யாத்திரையை ஆரம்பித்தார்கள். ஏறத்தாழ 21 ஆண்டுகாலம் அந்த யாத்திரை நடந்து 1939-ஆம் ஆண்டு முடிவு பெற்றதாக அறியப்படுகிறது. இந்த யாத்திரையில் சுமார் 200 சிப்பந்திகளும், 30 மாட்டு வண்டிகளும் மற்றும் யானை, குதிரை, ஒட்டகம், பசு முதலிய கால்நடைகளும், தங்கச்சிவிகை முதலான விருதுகளும் பெரியவர்களைப் பின்தொடர்ந்தன.

காமகோடி மடத்தின் 59-வது பீடாதிபதியாக விளங்கிய ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் பிருந்தாவனம், திருவிடைமருதூரையடுத்த கோவிநதபுரத்தில் அமைந்துள்ளது.54-வது பீடாதிபதியாக இருந்த வியாசாசல மஹாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் பிருந்தாவனம், படப்பையையடுத்த எழிச்சூரிலுள்ள சிவன் கோயிலில் இருப்பதை சமீபத்தில் கண்டுபிடித்து திருப்பணிகள் நடந்து வருகின்றன. பிருந்தாவனத்தின்மீது துளசிக்குப் பதிலாக சிவலிங்கம் இருப்பதால், இது அதிஷ்டானம் என்றழைக்கப்படுகிறது.

காஞ்சிப் பெரியவர்கள் பட்டத்துக்கு வந்தபிறகு முதலில் தரிசித்த வருடங்களையே மேலே குறிப்பிட்டுள்ளேன். அதற்குப் பிறகு, பலமுறை அவர் தன்னுடைய ஆசார்யர்களின் பிருந்தாவனங்களைத் தரிசித்துள்ளார்.முஸ்லிம் மதகுருக்கள் அடக்கம் செய்த இடங்கள் தர்க்காக்கள் என்றழைக்கப்படுகின்றன. முஸ்லிம் இனத்தவர்கள் தர்க்காக்களைப் போற்றிப் பாதுகாக்கின்றனர். மிக விமரிசையாக வழிபாடுகளும் செய்கின்றனர். இந்து மதத்தின் ஒரு பிரிவான மாத்வ இனத்தினர், பிருந்தாவனங்களை நன்கு பராமரிக்கின்றனர். அந்த வேகம் அத்வைதிகளுக்கு இல்லாதது மிகவும் வருத்தமளிக்கிறது.

இந்தக் கட்டுரையைப் படித்தபிறகாவது, நமக்குள் ஒரு எழுச்சி ஏற்பட்டு பிருந்தாவனங்களை வழிபட வேண்டும் என்ற எண்ணம் வளரட்டும்.