Monday, October 30, 2006

அருணாசல ரமணா!

பின்வரும் பாடல்களை பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி தன் தாய் முக்தி பெறவேண்டி ஸ்ரீ அருணாசலர்மீது மனமுருகிப் பாடினார்.

நீங்களும் உங்கள் தாயோ மற்ற தாய்மார்களோ உடல்நலம் குன்றியிருக்கும் சமயத்தில், இந்தப் பாடல்களை ரமணரையும் அருணாசலரையும் நினைந்து மனமுருகிப் பாடினால் உங்கள் தாயின் உடல்நலம் நிச்சயம் சீராகும்.

அலையாய் வரும் பிறவி அத்தனையும் மாற்ற
மலையாய் எழுந்த மருந்தே - தலைவா நின்
தாள்கதியாய் வாழும் என் தாய் தாபமாற்றியே
ஆள்வதுவும் உன் கடனேயாம்!

காலகாலா உன் கமல பதம் சார்ந்த
பாலன் என் ஈன்றாள்பால் அந்தக் காலன்தான்
வாராவகை உன் கால் வாரிசமே காட்டுவா-
யாராயிற் காலனுமே யார்?

ஞானாங்கியாய் ஓங்கு நல்ல குணவோங்கலே!
ஞானாங்கியாய் அன்னை நல்லுடலை - ஞானாங்கமாகச்
செய்து உன் பதத்தில் ஐக்கியமாக்கிக் கொள்வாய்
சாகத்தீ மூட்டுவதேன் சாற்று.

மாயா மயக்கமதை மாற்று அருணமாமலை
என் தாயார் மயக்ககற்ற தாமதமேன் தாயாகித்
தன்னை அடைந்தார் வினையின் தாக்கறுத்து ஆள்வார்
உலகில் உன்னையல்லால் உண்டோ உரை.

Friday, October 27, 2006

மாங்காடு காமாட்சி...

மாங்காடு காமாட்சி...
- பாடல்: சைதை முரளி.

மாங்காடு காமாட்சி மனவானில் அவளாட்சி
பாங்கோடு துதிப்போர்க்கு பரிவோடு அருளாசி
(மாங்காடு)

ஸ்ரீசக்ரம்தான் அவளின் ச்ருங்கார இருப்பிடம்
சிவனது இடப்பாகமோ மங்காத மணிமகுடம்
(மாங்காடு)

சங்கரர் துதிகேட்க சங்கரன் கண் பொத்தினாள்
சடுதியில் காத்திட மாங்காட்டில் நின்றாள்
மனத்துயர் போக்கிட மாறன் வில்லை ஏந்தினாள்
மன்மதனை எரித்திட்ட மணாளனின் சுந்தரியே!
(மாங்காடு)

எலுமிச்சை கனி ஏற்றே எழும் இச்சை தீர்ப்பவள்
முக்கனியில் முதல் கனியாம் வனத்தில் வசிப்பவள்
ஒருக்காலும் கைவிடாள் ஓடோடி வருவாள்
ஒருகாலில் தவம் புரியும் காமாட்சி உமையவள்!
(மாங்காடு)