Monday, October 11, 2010

நவராத்திரியில் நவதுர்கா தேவியின் மஹிமை...



நவராத்திரியில் நவதுர்கா தேவியின் மஹிமை...

எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில். அத்தனை பேருக்கும் நம் வணக்கங்கள். அப்படிப்பட்ட மகான்களில் ஒருவர்தான் பகவான் ஸ்ரீ ஹரி ஸ்வாமிஜி அவர்கள். கிருஷ்ண பக்தரான ஹரி ஸ்வாமிகள் பகவத்கீதையைக் குறித்த விளக்கத்தை பல்லாண்டு காலமாக மேத்தா நகரில் இருக்கும் அவரது பிருந்தாவனத்தில் நிகழ்த்தி வருகிறார். இது மட்டுமல்லாமல், ஆண்டாளின் திருப்பாவைக்கு விளக்கவுரை நூலும், நவ துர்கா மந்திர ஸ்லோகம், ஸ்ரீலக்ஷ்மி ஸ்லோகம், பகவத்கீதை விளக்கவுரை நூல் என பல்வேறு நூல்களும் எழுதி, அதை பக்தி சிரத்தையுடன் படிக்கும் பக்தர்களுக்கு இலவச வெளியீடாகவும் தந்து தொண்டாற்றி வருகிறார். அண்மையில் 8.10.2010 நவராத்திரி முதல் நாளன்று மாலை, மயிலை வெங்கடேச அக்ரஹாரத்திலுள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகா ஹாலில் ‘நவராத்ரி நவதுர்கா தேவியின் மஹோத்ஸவ மஹிமை’ என்ற தலைப்பில் அருளுரை ஆற்றினார். இந்த அருளுரை நிகழ்ச்சி 2 மணி நேரத்துக்கு நடந்தது. சுவாமிஜி அவர்கள் ஒவ்வொரு துர்கையைப் பற்றி விளக்கிக் கூறும்போதும், அந்தந்த துர்கைக்கு உரிய கோலத்தில் சிறுமிகளை அலங்கரித்து மேடைக்கு அனுப்பிவைத்த நிகழ்வு பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது. இனி, நவதுர்கைகள் குறித்து சுருக்கமாகப் பார்ப்போம்:





உலக உற்பத்தியின் காரணியான ஜெகன்மாதா துர்காதேவியின் அவதார லீலா விநோதமே நவதுர்கா வெளிப்பாடு. வருஷ ருது காலத்தில், புரட்டாசி மாத சுக்லபட்சத்தில் முதல் ஒன்பது நாட்களில், ஓங்கார நாதத்வனியாக அனைத்திலும் வ்யாபித்து அருள்பாலிக்க, வன துர்கா, சூலினி துர்கா, ஜாதேவதோ துர்கா, சாந்தி துர்கா, சபரி துர்கா, ஜ்வாலா துர்கா, லவண துர்கா, தீப துர்கா, அஸுரி துர்கா என ஒன்பது சக்திகளாகப் பிரிந்து, விஜயதசமியன்று ஜெயம் கொண்டு, அந்த ஜெயத்தை நமக்கும் தருவதற்காக நம் இல்லம்தோறும் விஜயம் செய்பவளான அன்னையை பூஜிப்பதனால், ஸர்வ பாப நிவர்த்தி, க்ரஹ தோஷ நிவர்த்தி, தீராத ரோஹ நிவர்த்தி, விவாஹ ப்ராப்தி, குடும்ப க்ஷேமம், தாம்பத்திய ஒற்றுமை, ஆயுள் ஆரோக்கிய ப்ராப்தி, புத்ர ப்ராப்தி, வித்யா ப்ராப்தி, உத்யோக ப்ராப்தி, அஷ்ட ஐஸ்வர்ய ப்ராப்தி மற்றும் ஸகல காரிய சித்திகளும், ஸகல சௌபாக்கியங்களும் இகபர சுகங்களும் ஏற்படும்.









நவராத்திரியில் மட்டுமல்லாது, ஒவ்வொரு அமாவாசையை அடுத்துவரும் ஒன்பது தினங்களிலுமே மாலையில் இந்த நவதுர்கையரை வழிபட்டு பலன் பெறலாம். தசமி திதியான பத்தாம் நாளன்று சாமுண்டி துர்கையை வழிபட்டு பேரின்பப் பெருவாழ்வை அடையலாம்.

அந்த நவதுர்கா தேவியரின் லகு பூஜா முறைகளை இமேஜ் வடிவத்தில் தந்துள்ளேன். படித்துப் பயன்பெறுங்கள். மேலும் விவரங்கள் தேவையெனில், சந்தோஷ் 98849 79899 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Friday, July 23, 2010

பிருந்தாவனங்களும் அதிஷ்டானங்களும்...



மஹா பெரியவாளின் பிடி அரிசி திட்ட சேவையில் பங்கேற்று, கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக அதைச் செய்து வருகிறேன். கடந்த சில மாதங்களாக பிடி அரிசி திட்டத்தில் தானும் பங்களித்து, பெரியவாளின் மஹிமைகள் பலவற்றை அவ்வப்போது என்னுடன் பகிர்ந்தும் வந்தார் பரமாச்சார்யாளின் பரம பக்தரான பெரியவர் மஹேந்திரவாடி உமாசங்கரன் அவர்கள். அவர் ‘ஜகத்குரு’ பத்திரிகையில் ஸ்ரீகாஞ்சிப் பெரியவர் மஹிமைகள் பற்றி எழுதி வந்ததையும் குறிப்பிட்டுப் பேசினார். அப்படியென்றால் சமீபத்திய இதழ் ஒன்றைப் படிக்கத் தாருங்களேன் எனக் கேட்டேன். ஜூன் 2010 இதழைத் தந்தார். அதில் பிருந்தாவனங்களும் அதிஷ்டானங்களும் என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகியிருந்தது. பெயர் பிரசுரிக்க விடுபட்டிருந்ததுடன், குறிப்பிட்ட சில தகவல்களும் விடுபட்டுவிட்டது எனக் குறிப்பிட்டார். படித்துப் பார்த்த எனக்கு, இதனை அப்படியே பிளாக்கில் படிக்கத் தந்தால் என்ன என்று தோன்றியது. அந்தப் பெரியவரிடம் விடுபட்டவைகளையும் எழுதித் தாருங்கள் எனக் கேட்டேன். தந்ததை அப்படியே தந்திருக்கிறேன். இதுவும் ஒருவித சேவைதான் அல்லவா! வடதிருநாரையூர் என்றழைக்கப்படும் சென்னை சைதாப்பேட்டை சௌந்தரேஸ்வரர் சமேத திரிபுரசுந்தரி கோயிலில் சமீபத்தில் நடைபெற்ற அனுஷ பஜனையின்போது எடுத்த சில புகைப்படங்களையும் கட்டுரையின் இடையே தந்திருக்கிறேன். கண்டு களிப்பதுடன் நில்லாமல் உங்கள் கருத்துகளையும் தெரிவித்தால் மகிழ்வேன்.


ஸ்ரீகாஞ்சிப் பெரியவர் மஹிமைகள்...
பிருந்தாவனங்களும் அதிஷ்டானங்களும்

-மஹேந்திரவாடி உமாசங்கரன்
ஸ்ரீஆதிசங்கரரின் மறு அவதாரமாகவும், ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியின் சொரூபமாகவும் போற்றப்பட்டவர் நம் சுவாமிகள். நம் வேதங்களைக் காப்பாற்றவும் வளர்க்கவும் அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் சொல்லில் அடங்கா. நம்முடைய தர்ம சாஸ்திரங்களில் சொல்லியபடி, ஒவ்வொருவரும் நடக்க வேண்டும் என்பதில் மிகவும் அக்கறை எடுத்துக்கொண்டார். தனக்கு முன்பு மடத்தை அலங்கரித்த ஆசார்யர்களிடம் அவர் மிகவும் பக்தி கொண்டிருந்தார்.



அவர் நாடெங்கும் விஜயம் செய்திருந்தாலும், தன்னுடைய ஆசார்யர்கள் பிருந்தாவனம் அமைந்த பகுதிகளில் பெரும்பாலும் தங்குவது வழக்கம். குறிப்பாக காஞ்சி, சிவாத்தானம், கீழம்பி, கலவை, இளையாற்றங்குடி போன்ற இடங்களில் அவர் மாதக்கணக்கில் தங்கியிருந்திருக்கிறார்.

மஹான்களின் பிருந்தாவனங்கள், அதிஷ்டானங்களில் என்றும் அதிர்வலைகள் இருக்கும். வந்து வணங்கும் அடியார்களுக்கு அதனால் க்ஷேமங்கள் ஏற்படும். சென்னையை அடுத்த திருவொற்றியூரில், காஞ்சி மடாதிபதிகளின் 3 ஆசார்யர்களின் பிருந்தாவனங்களும், பட்டினத்தார், பாடகச்சேரி ஸ்வாமிகள் அதிஷ்டானங்களும் உள்ளன.



திருவான்மியூரில் பாம்பன் ஸ்வாமிகள், பறவை அம்மா அதிஷ்டானங்கள் உள்ளன. ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளின் பிருந்தாவனம் அமைந்திருக்கும் மந்திராலயம் எவ்வளவு புகழ்பெற்று விளங்குகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஸ்ரீரகோத்தம ஸ்வாமிகள், ஸ்ரீஞானாநந்த ஸ்வாமிகள் பிருந்தாவனங்கள் திருக்கோயிலூரில் அமைந்திருக்கின்றன. சென்னையிலும் பாண்டிச்சேரியிலும் நிறைய மஹான்களின், சித்தர்களின் அதிஷ்டானங்கள் உள்ளன.



நம்முடைய காஞ்சிப் பெரியவரின் பிருந்தாவனம், காஞ்சி சங்கரமடத்துக்குள் அமைந்திருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் சமயங்களில் கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்வதுபோல், மஹான்களின் பிருந்தாவனங்களுக்கும் சென்று தரிசனம் செய்யவேண்டும்.

விழுப்புரத்துக்குத் தெற்கே சேந்தலூர் என்ற ரயில் நிலையம் இருக்கிறது. அதற்கு அருகாமையில் வடவாம்பலம் என்ற சிற்றூர் இருக்கிறது. காமகோடி மடத்தின் 58-வது பீடாதிபதியாக இருந்த ஆத்ம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவ்வூரில் சித்தி அடைந்திருப்பதாக மடத்தின் குரு பரம்பரை கூறியதாக வந்த செய்தியை வைத்து அவ்வூருக்குச் சென்று, கிராமத்திலுள்ள பல இடங்களில் சுற்றிவந்த நம் பெரியவர்கள், கடைசியாக ஒரு இடத்தைக் காட்டி அங்கே தோண்டிப் பார்க்கும்படி சொன்னார். பின்தொடர்ந்துவந்த கிராம மக்கள் தாங்கள் பல காரணங்களுக்காக அங்கே தோண்டிப் பார்த்திருப்பதாகவும், அங்கே எந்த மஹானும் சித்தி அடைந்திருப்பதற்கான அடையாளங்கள் ஏதும் இல்லை என்றும் கூறினார்கள். ஆனால், அந்த இடத்தில் ஓர் கிணறு மட்டும் தென்பட்டதாக கிராம மக்கள் பெரியவர்களிடம் கூறினார்கள்.



நம் பெரியவர்கள் கிராம மக்களை வற்புறுத்தி, அதே இடத்தில் மேலும் ஆழமாகத் தோண்டிப் பார்க்கும்படி கட்டளையிட்டார்கள். சிறிது ஆழத்தில் ஓர் கபாலம் தென்பட்டதாம். அங்கே இருந்த மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டிருந்த ஸ்ரீகுமாரமங்கலம் சாம்பமூர்த்தி சாஸ்திரி என்பவர் மூர்ச்சையாகி கீழே சாய்ந்துவிட்டார். அவர் மற்றவர்களைப் பார்த்து, ‘நிறுத்து நிறுத்து’ என்று உரக்கக் கூறினார். சிறிது நேரம் கழித்து அவருக்கு மயக்கம் தெளிந்து சுயநினைவு வந்தது. தான் கண்ட காட்சியை அவர் கீழ்க்கண்டவாறு விவரித்தார்:

‘காஷாய வஸ்திரம் உடுத்தி, கையில் தண்டம் ஏந்தி, நெற்றியில் விபூதியணிந்து, கழுத்தில் ருத்திராக்ஷ மாலையுடன் ஆகாயத்தை அளாவி நிற்கும் துறவியின் உருவம் ஒன்று என் கண்முன் தோற்றமளித்தது. அந்த உருவத்தின்முன் ஆயிரக்கணக்கான அந்தணர்கள் உபநிஷத் பாராயணம் செய்வதைக் கண்டேன். அந்தப் பெரிய ஸ்வரூபம், அந்தப் பாராயணத்தை நிறுத்தும்படி உத்தரவிட, நானும் வேகமாகத் தாவி நிறுத்தும்படிக் கூறினேன். மேலும் தோண்டாதே, தோண்டாதே என்று மெல்லிய குரலில் அவ்வுருவம் சொல்லிக்கொண்டிருந்ததை நான் கேட்டேன். பிறகு அந்த உருவம் வரவரச் சிறிதாகிக்கொண்டே என் கண்களிலிருந்து மறைந்துவிட்டது. அதன்பின், ‘சதாசிவம், சதாசிவம்’ என்று யாரோ ஜபித்துக்கொண்டிருந்த ஒலி மட்டும் காதில் விழுந்துகொண்டிருந்தது. அதுவும் சற்று நேரத்தில் நின்றுவிட்டது’ என்றார்.



பெரியவர்கள் விரும்பியபடி அந்த நிலம் மடத்துக்கு சாசனம் செய்விக்கப்பட்டு, அந்த ஊர் ரெட்டியார் ஒருவரின் மேற்பார்வையில் அங்கே பிருந்தாவனமும் கட்டுவிக்கப்பட்டது. 1927-ஆம் வருடம் ஜனவரி மாதம் 17-ஆம் தேதி, பெரியவர்களால் அந்த பிருந்தாவனம் பிரதிஷ்டை செய்விக்கப்பட்டது.

65-வது பீடாதிபதியாக இருந்த மகாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் பிருந்தாவனம் இளையாற்றங்குடியில் இருக்கிறது. அங்கு 1925-ஆம் ஆண்டும் அதற்கு முன்பு 1922-ஆம் ஆண்டும் நம் பெரியவர்கள் அந்த அதிஷ்டானத்தைத் தரிசனம் செய்தார்கள். 1920-ஆம் ஆண்டு 57-வது பீடாதிபதியாக இருந்த பரமசிவேந்திர ஸ்வாமிகளின் அதிஷ்டானம் உள்ள திருவெண்காட்டிற்குச் சென்று அங்கே தரிசனம் செய்தார்கள்.

இந்த மஹான் ஸ்ரீசதாசிவ பிரும்மத்தின் ஞான குருவாக விளங்கியவர்கள். நெரூரில் ஒருவார காலம் தங்கியிருந்து ஸ்ரீசதாசிவ பிரும்மத்தின் அதிஷ்டானத்தைத் தரிசனம் செய்தார்கள் பெரியவர்கள்.



1919-ஆம் ஆண்டு கும்பகோணத்திலுள்ள மடத்தில் பெரியவர்கள் முகாமிட்டிருந்தார்கள். அப்பொழுது அந்த மடத்தின் தோட்டத்திலுள்ள மூன்று ஆசார்யர்களின் பிருந்தாவனங்களைத் தரிசித்த பிறகு, தன்னுடைய விஜய யாத்திரையை ஆரம்பித்தார்கள். ஏறத்தாழ 21 ஆண்டுகாலம் அந்த யாத்திரை நடந்து 1939-ஆம் ஆண்டு முடிவு பெற்றதாக அறியப்படுகிறது. இந்த யாத்திரையில் சுமார் 200 சிப்பந்திகளும், 30 மாட்டு வண்டிகளும் மற்றும் யானை, குதிரை, ஒட்டகம், பசு முதலிய கால்நடைகளும், தங்கச்சிவிகை முதலான விருதுகளும் பெரியவர்களைப் பின்தொடர்ந்தன.

காமகோடி மடத்தின் 59-வது பீடாதிபதியாக விளங்கிய ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் பிருந்தாவனம், திருவிடைமருதூரையடுத்த கோவிநதபுரத்தில் அமைந்துள்ளது.



54-வது பீடாதிபதியாக இருந்த வியாசாசல மஹாதேவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் பிருந்தாவனம், படப்பையையடுத்த எழிச்சூரிலுள்ள சிவன் கோயிலில் இருப்பதை சமீபத்தில் கண்டுபிடித்து திருப்பணிகள் நடந்து வருகின்றன. பிருந்தாவனத்தின்மீது துளசிக்குப் பதிலாக சிவலிங்கம் இருப்பதால், இது அதிஷ்டானம் என்றழைக்கப்படுகிறது.

காஞ்சிப் பெரியவர்கள் பட்டத்துக்கு வந்தபிறகு முதலில் தரிசித்த வருடங்களையே மேலே குறிப்பிட்டுள்ளேன். அதற்குப் பிறகு, பலமுறை அவர் தன்னுடைய ஆசார்யர்களின் பிருந்தாவனங்களைத் தரிசித்துள்ளார்.



முஸ்லிம் மதகுருக்கள் அடக்கம் செய்த இடங்கள் தர்க்காக்கள் என்றழைக்கப்படுகின்றன. முஸ்லிம் இனத்தவர்கள் தர்க்காக்களைப் போற்றிப் பாதுகாக்கின்றனர். மிக விமரிசையாக வழிபாடுகளும் செய்கின்றனர். இந்து மதத்தின் ஒரு பிரிவான மாத்வ இனத்தினர், பிருந்தாவனங்களை நன்கு பராமரிக்கின்றனர். அந்த வேகம் அத்வைதிகளுக்கு இல்லாதது மிகவும் வருத்தமளிக்கிறது.

இந்தக் கட்டுரையைப் படித்தபிறகாவது, நமக்குள் ஒரு எழுச்சி ஏற்பட்டு பிருந்தாவனங்களை வழிபட வேண்டும் என்ற எண்ணம் வளரட்டும்.