Thursday, May 17, 2007

அவன் வருவானா? - ஒரு தாயின் ஏக்கம்!

இன்று (18/ 05/ 2007) எங்களின் 52-வது திருமணநாள் முடிந்து 53-வது திருமணநாள் ஆரம்பிக்கிறது.
எங்கள் திருமணம் நடந்தது 1955-ஆம் வருடம் மே மாதம் 18-ஆம் தேதியில். திருமணத்துக்கு முந்தைய நிகழ்வான மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியே ஒரு சுவாரஸ்யமான நிகழ்வுதான்.

லால்குடியில் நிகழ்ந்த இந்தத் திருமண விழாவில், மாப்பிள்ளை அழைப்புக்கு மாப்பிள்ளை வந்து சேர்ந்த நேரத்தைக் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். நள்ளிரவைத் தாண்டி 2 மணி அளவுக்கு மாப்பிள்ளையாகிய என் கணவரை லால்குடிக்கு முந்தைய ஸ்டேஷனான வாலாடியில், ரயில் நின்றதும் மாப்பிள்ளை யார், மாப்பிள்ளை யார்? என என் சித்தப்பா கேட்டு அழைத்து வந்தார். காரணம், அப்போது வீசிய புயல். அப்போது அடித்த புயல்போல இதுவரையில் என் வாழ்நாளில் வேறு புயலைப் பார்த்ததில்லை.

மாப்பிள்ளை அழைப்பு தினத்தன்று காலையிலேயே அவர்கள் வந்துவிடுவார்கள் என்று சாப்பாடெல்லாம் செய்துவைத்திருக்க, மறுநாள் காலைதான் வந்துசேர்ந்தனர். என் அப்பாவோ அதற்குள் முருகனிடம், 'முருகா! என் பொண்ணு கல்யாணத்தை தடங்கலில்லாம நடத்தி வை. தாலி கட்டியவுடன், பொண்ணு மாப்பிள்ளையை பழனிக்கு அழைச்சுட்டு வர்றேன்' என வேண்டியதுடன், முன்னரே பிள்ளையாருக்கு சதுர் தேங்காய் விட்டு, குலதெய்வமான பழநி முருகனுக்கு மஞ்சள் துணியில் எசஞ்சு முடிந்துவைத்தார். அதன்படியே முருகனின் கருணையால் மழை நின்றுவிட, திருமணம் இனிதே நடைபெற்றது.

திருமணம் முடிந்தவுடன் பழநி தண்டாயுதபாணியைத் தரிசித்து பிரார்த்தனையை நிறைவேற்றினோம். அதன்பின்னர் ஒரு வருடத்தில், 1956-ஆம் வருடம் டிசம்பர் திங்கள் 14-ஆம் நாள் எங்களுக்கு மகன் பிறந்தான். கார்த்திகேயன் எனப் பெயரிட்டோம். அவனுக்கு பரணி நட்சத்திரம். அவன் பிறந்து ஒரு வருடம் நிறைவதற்குள் எட்டு மாதத்திலேயே என் கணவருக்கு டி.பி. எனக் கேள்வியுற்ற என் அப்பா, அப்போதைய அந்த அதிர்ச்சியிலேயே மூளையில் ரத்தக்குழாய் வெடித்து இவ்வுலக வாழ்வினின்று விடைபெற்றார். அப்போது நான் என் தந்தையின் பக்கத்தில் இல்லை. புகுந்த வீட்டில் இருந்தேன். நான் செல்வதற்குள் எல்லாம் முடிந்து, கடைசியாக முகத்தை மட்டும் பார்த்து வந்தேன்.என் தந்தையைப் பற்றி எப்போது நினைத்தாலும், இந்நிகழ்ச்சியை என்னால் மறக்க இயலாது. தீவிர முருக பக்தரான அவர், 'நகர்' கிராமத்துக் கோயிலின் டிரஸ்டியாக இருந்தார். நான்கு பெண் குழந்தைகள், நான்கு ஆண் குழந்தைகள். மூத்தவள் நான்தான். வீடு, வாசல், தோட்டங்களுடன் வாழ்ந்த அந்த வாழ்க்கையை எண்ணுகையில், பசுமையான நினைவுகளே மனவெளியில் பட்டாம்பூச்சியாகின்றன.

03.05.1960-ல் இரண்டாவது மகன் மகாலிங்கம் பிறந்தான். இவன் பிறந்த சில மாதங்களுக்குப் பின்னரே, நாங்கள் சென்னைக்குக் குடிபெயர்ந்தோம். என் கணவருக்கு, தேனாம்பேட்டையிலுள்ள டைரக்டர் ஆஃப் மெடிக்கல் சர்வீஸில் வேலை. வேலை காரணமாக, அடிக்கடி அவர் வெளியூர்களுக்குச் சென்றுவிடுவார்.

சென்னைக்கு வந்தபின்னர் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். என் கணவருக்கு வந்த சம்பளத்தில், என் வீட்டை மட்டும் கவனிப்பது என்றால் பரவாயில்லை. அப்போது வேலையில்லாத உறவினர்கள் வீட்டுக்கும் உதவவேண்டி இருந்ததால், மிகவும் சிரமப்பட்டோ ம். இது சில ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நீடித்தது. பொதுவாகவே உறவினர்களுக்கு உதவும் இரக்க சுபாவம் எங்கள் கூடவே பிறந்தது என்பதால், குடும்பம் நடத்துவதற்கு பட்ட அவஸ்தையை தனியே சொல்லவேண்டியதில்லை. ஆனால், என்னதான் உதவி செய்தாலும் உதவி பெறுபவர்கள் அதை நினைத்துப் பார்ப்பதில்லையே! உயர்நிலைக்கு வந்தவுடன், ஒரு காலகட்டத்தில் எல்லாவற்றையும் சுலபமாகத் துடைத்தெறிந்துவிடுகிறார்கள்.

இந்நிலையில் மூன்றாவது மகனின் ஜனனம், சென்னையில் 20.11.1968-ல் நிகழ்ந்தது. மூன்றாவதும் மகனாகப் பிறக்க, என் கணவரைப் பொறுத்தவரையில், அவர் இதை விரும்பவில்லை. எனவே, ஆஸ்பிடலுக்கு வந்து எட்டிப் பார்க்கக்கூட இல்லை. பெண்ணாகப் பிறந்தால் நன்றாக இருக்கும் என அவர் ஆசைப்பட்டார். நாம் ஆசைப்பட்டபடியா எல்லாம் நடக்கிறது?

மூன்றாவதும் மகனாகப் பிறந்ததைக் கண்டு பொறுக்காமல் உறவில் ஒருவர், 'உனக்கு என்னடி! கொடுத்து வச்சவ நீ. மூணும் பிள்ளையா பிறந்திருக்கு. யோகம்தான் போ!' எனக் கூறினார். எந்த வேளையில், என்ன நினைத்து அவர் அப்படிக் கூறினாரோ! ஆனால், எப்போது இதை நினைத்தாலும் கோபம்தான் வருகிறது. என்ன செய்ய? காலச் சுழற்சியில், வாழ்க்கை வெள்ளத்தில் என்னவெல்லாம் நிகழ்ந்துவிடுகிறது?

இரண்டாமவனுக்குத் திருமணம் நடந்து, அவனுக்கு ஒரு பெண் குழந்தையும் ஆண் குழந்தையும் உள்ளனர். கடைசி மகனும் ஏதோ வாழ்ந்து வருகிறான். ஆனால், எனது எண்ணமெல்லாம் மூத்தவனைச் சுற்றியேதான். அவன் தீவிர ஆஞ்சநேய பக்தன்.

இரண்டாமவன் படித்துக்கொண்டே பள்ளியின் இடைவேளையில் இட்லி, வடை என செய்துகொடுத்ததை விற்று வாழ்க்கை நடத்த உதவினான். இதனாலேயே, அவன் பள்ளிப்படிப்பு பாழாகிப் போயிற்று. ஆனாலும், வாழ்க்கையில் அவனை அதுவே காப்பாற்றி வருகிறது. என்றாலும், அவனுக்கு இந்த வேலை கிடைக்க காரணமானவன் மூத்தவனே. மூத்தவன் அவனது நண்பர் மூலமாக, அப்போது தற்காலிகமாகச் சேர்த்துவைத்த வேலையே கடைசியில் இரண்டாமவனுக்கு நிரந்தரமாகிப் போனது.

மூத்தவன் வீட்டிலிருந்த சமயங்களில் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். அப்போதெல்லாம் ஆழாக்கு பால் நாலணாதான். அந்தக் காசைக் கொடுத்து பால் வாங்குவதற்கே அப்போதெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறோம். சமயத்தில் காபி நான் குடிக்கும்போது, 'அம்மா! இன்னும் கொஞ்சம்மா எனக்கு!' என மென்னியைப் பிடிக்காத குறையாகக் கேட்பான் மூத்தவன். நானும் கொடுத்தவாறே, 'எப்போதடா கார்த்தி, நம்ம கஷ்டமெல்லாம் விடியும்?' என ஆற்றாமையோடு கேட்பேன். அதற்கு அவன், 'நான் போனதுக்கப்புறம் எல்லோரும் நல்லா இருப்பீங்க!' என்பான். வேதவாக்குதானோ அது என இப்போது எண்ணத் தோன்றுகிறது.

13-10-1980-ல் திங்கட்கிழமை பர்ஸ்ட் ஷிப்ட் வேலையை முடித்துவிட்டு வந்தவனுக்கு, தட்டை எடுத்துவைத்து சாதம் போடப் போக, 'இப்பப் போடாதம்மா. பக்கத்துல என் நண்பனைப் பார்க்கப்போறேன். வந்தப்புறம் போடு!' எனச் சொல்லிச் சென்றவன்தான். அதன்பின்னர் வரவேயில்லை. காணாமல் போய்விட்டான். நாங்களும் பல இடங்களில், பலவிதங்களில் முயற்சி செய்தோம். பலன்தான் இல்லை. உறவினர் ஒருவர் இன்னொரு உறவினர் வீட்டில் நான் கார்த்தியைப் பார்த்தேன் எனக்கூற, அங்கு சென்று விசாரித்தால், அவர்கள் வரவே இல்லை எனக் கைவிரித்தாலும் அவர்கள் வீட்டுக் குழந்தை ஒன்று, 'அண்ணா வந்துட்டுப் போனானே!' எனக்கூற, அவர்கள் வேறுவிதமாக மழுப்பி
அனுப்பினார்கள். உறவுகளே இப்படியென்றால் வேறு எங்குபோய் முட்டிக்கொள்ள?அவன் காணாமல் சென்று 26 வருடங்கள் ஓடிவிட்டன. இந்த 26 வருடத்தில் எத்தனையோ நிகழ்வுகள் நிகழ்ந்துவிட்டன. என்றாலும், தாயுள்ளம் தவிக்கத்தான் செய்கிறது. எனது தம்பிகளில் இருவரும், தங்கை மகனும் இவ்வுலக வாழ்விலிருந்து விடைபெற, அவர்களுக்கான கடைசி காரியங்களையும் என் கணவர்தான் மூன்னின்று செய்தார். இந்நிகழ்வுகளையெல்லாம் எண்ணுகையில், 'நாம் உயிரோடு கொடுத்திருக்கிறோமே! அவன் எங்கிருக்கிறான்? நம் நினைவுகள் அவனுக்கு அறவே இல்லையா? என்னதான் ஆயிற்று அவனுக்கு?' என்ற கேள்விகள் நெஞ்சக்குகையை குத்திக் கிளறிக்கொண்டுதான் உள்ளன. அவன் பம்பாயில் இருக்கிறான், நான் அவனை அங்கு பார்த்தேன் என்றும் சிலர் கூறுகிறார்கள். எங்கள் வீட்டுக்கு வந்துசெல்லும் குருஜியும் அவன் பம்பாயில்தான் இருக்கிறார் என்கிறார். அவன் எங்கு வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். இந்தத் தாயை வந்து பார்த்துச் செல்லக் கூடாதா? என்றுதான் என் மனம் ஏங்குகிறது.

இக்கட்டுரையை இந்த பிளாக்கில் படிக்கும் அன்பு உள்ளங்களில் எவருக்காவது விவரம் தெரியவந்தால், அவசியம் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

- நாகலெக்ஷ்மி ராமகிருஷ்ணன், சென்னை.