Friday, May 09, 2008

ஹெல்த் பிட்ஸ் . . .

சிறுநீர் சுய பரிசோதனை . . .

உங்கள் சிறுநீரை நீங்களே பரிசோதித்தறிவது என்பது நல்ல விஷயமாகப் படவில்லையென்றாலும், உங்கள் உடல்நிலையில் வறட்சி உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கு உண்மையிலேயே இது உதவக்கூடியது.
பிரிட்டிஷ் பேராசிரியர் ஒருவரின் கூற்றுப்படி நீங்கள் காலையில் முதலில் வெளியேற்றும் சிறுநீரானது மங்கலான வெளிறிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதன்பின்னரும் நீங்கள் வெளியேற்றும் சிறுநீர் தொடர்ந்து அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் இருந்தால், நீங்கள் தண்ணீரை அருந்தவேண்டும்.
உங்கள் உடல்நிலையில் சிறிதளவேதான் வறட்சி என்றாலும், இது உங்களுடைய மன ஒருமையைச் சிதறடிப்பதுடன், தலைவலியையும் சோர்வையும் உண்டாக்கவல்லது. மேலும், இது குடல் சம்பந்தமான மலச்சிக்கலையும் ஏற்படுத்த வல்லது. கோடை காலத்திலோ மலச்சிக்கல் பிரச்னை குறித்து சொல்லவேண்டியதே இல்லை. நன்கு குளிரூட்டப்பட்ட அலுவலகங்களில் பணிபுரிபவர்களாக இருந்தாலும்கூட!
சாதாரணமாகவே நாளொன்றுக்கு இரண்டு லிட்டர் நீர் அருந்தி வந்தாலும், நல்ல கோடையிலோ அல்லது உடல் வெப்பம் அதிகமாக இருக்கும்போதோ இதற்கு மேலும் நீரை அருந்தவேண்டும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அதிலும் உணவு உட்கொள்கையில் நீரையும் கட்டாயம் அருந்தவேண்டும். உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு முன்பு சிறிதும், பயிற்சியை முடித்த பிறகு நிறைய தண்ணீரும் குடிப்பது நல்லது.
தர்பூசணி, வெள்ளரிக்காய், எலுமிச்சை மற்றும் உலர்ந்த விதைப் பழங்களில் இருக்கும் நீர்கூட வறட்சியைப் போக்கும்.

மரங்களோடு வாழ்பவர்களுக்கு ஆரோக்கியம் அதிகம்!

பச்சைக் காய்கறிகளை உண்பதால்தான் நான் உடல்நலத்துடன் இருக்கிறேன் என எண்ணுபவரா நீங்கள்?
ஒரு ஆராய்ச்சியோ இன்னும் வேறுசில காரணங்களையும் பட்டியலிடுகிறது. அந்த ஆராய்ச்சியின்படி மரங்களுக்கு அருகாமையில் நீங்கள் வாழ்பவர்களாக இருந்தால் - நகரங்களில் இருந்தாலும்கூட - உங்கள் உடல்நலம் நன்றாக இருக்குமாம்.
ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் டோக்கியோ நகரைச் சேர்ந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களிடம் அவர்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பதற்கான காரணங்களை ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். அதில் பூங்கா அருகிலும், மரங்கள் சூழ்ந்த தெருக்களிலும் அவர்கள் வசித்ததால் - வயது, பாலுறவு, திருமணம் மற்றும் சமூக பொருளாதாரச் சூழல்கள் அவ்வளவாக அவர்களைப் பாதிக்கவில்லையாம். அதனாலேய அவர்கள் நீண்ட ஆயுளோடு இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்தனர்.
இவ்விதச் சூழல்களை அதிகரித்தால், நல்ல உடல்நலத்தைப் பெறுவதுடன் மேலும் சிறப்பாகச் செயல்படலாமே என்று ஆராய்ச்சியாளர்களும் சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். நாமும் சற்றே சிந்திப்போமா?

டை கட்டுபவர்களே, உஷார்!


“என் கால்களே என்னைக் கொன்றுவிடும் போலிருக்கிறது’ எனக் கூறும் பெண்களில் பலர் ஹை-ஹீல் செருப்புகளை அணிபவர்களாக இருக்கிறார்கள். இது சற்றே மிகைப்படுத்தப்பட்ட கூற்றாகத் தென்படலாம். பொதுவாகவே நாகரிகம் வளர வளர நோய்களும் வளரும்தான் போலிருக்கிறது. பிரச்னை தரும் சில பொதுக்கூறுகளைப் பார்ப்போம்.
கழுத்தில் மிக நெருக்கமாக டை அணிபவர்களுக்கு, கண்களில் அழுத்தம் அதிகரிப்பதுடன், கண்விழி விறைப்பு நோய்க்கும் அடிகோலுகிறது என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
ஹை-ஹீல் ஷூ அணிபவர்களுக்கு முழங்காலில் எலும்பு மூட்டு வீக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகம் என்கிறார்கள்.
இறுக்கமாகப் பேண்ட் அணிபவர்களுக்கோ நெஞ்செரிச்சலில் கொண்டுபோய் விடுமாம். ஆனால் நாமோ, செரிமானப் பிரச்னையால் நெஞ்செரிச்சல் என எண்ணுவோம்.

விரும்பிச் செய்யும் செயலால் வாதம் வருவது குறைவு!

தோட்டப் பராமரிப்பு, அஞ்சல் தலை சேகரிப்பு போன்று பல வித்தியாசமான விருப்பவேலைகளில் ஓய்வுநேரத்தில் ஈடுபடுபவரா நீங்கள்? உங்கள் பதில் ஆம் எனும் பட்சத்தில், அதை விட்டுவிடாமல் தொடர்ந்து செய்யுங்கள். இவ்வித விருப்பவேலைகள் கூட நம் உடல்நலத்தையும் மனவளத்தையும் பேணிக் காக்கிறது என்றால் ஆச்சரியமாக இல்லை!
டெபி பேகர் என்பவர், 3000-க்கும் மேற்பட்ட பர்ஃபி பொம்மைகளை - கடைசியாக எண்ணியபோது சேர்த்திருக்கிறாராம். இது என்ன இப்படியும் ஒரு பழக்கமா? என நம்மில் பலர் வித்தியாசமாக நினைக்கலாம். இருந்தாலும் இம்மாதிரியான தனிப்பட்ட உற்சாகங்களே வாழ்வில் நன்மை பயக்கவல்லவை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
விரும்பிச் செய்யும் செயல்களால் ஒருவரது மன அழுத்தம் பெருமளவில் குறைகிறது என்கிறார் ஹார்வர்டு மருத்துவப் பள்ளியில் பெண்கள் நலத்திற்கான மன/உடல்நல மையத்தின் இயக்குநர் டோமர். இச்செயல்களால் அன்றாடக் கவலைகளிலிருந்து விடுதலை கிடைப்பதுடன், அமைதித் தன்மையும் நம்மில் குடியேறுகிறது என்கிறார் இவர்.
ஜப்பானில் 12,000 மனிதர்களிடையே நடத்திய ஆய்வில், விரும்பிச் செய்யும் வேலையிலோ சமூக சேவைகளிலோ தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளவர்களுக்கு ஸ்ட்ரோக் மற்றும் ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் - மற்ற மனிதர்களைக் காட்டிலும் மிகக் குறைவாகவே வருவதாகக் கண்டுள்ளார்கள்.
எனவே, எந்த வேலையாயினும் ஒன்று அதை விருப்பவேலையாக மாற்றிக்கொள்வோம். வாழ்வுக்கு அர்த்தம் தரக்கூடிய வகையில் நமக்கு மிகவும் விருப்பமான விஷயங்களுக்கு ஓய்வுநேரத்தை ஒதுக்குவோம்.


சரியான நேரத்துக்கு சரியான மருத்துவம் தேவை!

சரியான நேரத்துக்கு ஓர் உதவி கிடைக்கிறதெனில், காலத்தினால் செய்த இந்த உதவியை காலத்துக்கும் மறக்கமாட்டேன் எனக் கூறுவது நம் வழக்கம்.
நாம் நோய்களுக்காக உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளுக்கும்கூட நேரம் காலங்களைப் பார்க்கவேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த ஆய்வின்படி ஒருவரது உயிரியல் கூறுகளுக்கு ஏற்றாற்போல், நோயாளிக்கு தகுந்த நேரத்தில் உட்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படும் மருந்து மாத்திரைகள் பலவிதங்களில் பயனளிக்கின்றன என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஹைபர்டென்ஷன் எனப்படும் உயர் ரத்த அழுத்தம் உச்சநிலையை அடைவது நாம் எழும் காலை நேரங்களில்தானாம். இதனால்தான் மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் போன்றவை காலை வேளையில் 6 மணிக்கும் மற்றும் பகல் வேளைகளிலும் நோயாளியைத் தாக்குகிறது.
இதற்கு மருத்துவரிடம் கலந்தாலோசித்து புதிய ரத்த அழுத்த மருந்துகளை இரவு வேளையில் எடுத்துக்கொண்டால், குறிப்பாக இதுபோன்ற காலைவேளைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
ஆஸ்துமா அறிகுறிகள் அதிகம் தென்படுவது அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரையில்தானாம். அட்ரீனலின் மற்றும் கார்டிசால் ஹார்மோன்களின் அளவு உடலில் இந்நேரங்களில் குறைவதாலேயே இவ்விதம் நேருகிறதாம். இந்நேரங்களில் காற்று வரும் வழிகளைத் திறந்து வைத்திருத்தல் நலம் பயக்கும். இதற்குரிய மாத்திரைகளை மதியம் 3 மணி அளவில் எடுத்துக்கொண்டால் நோயின் தீவிரம் குறையும்.
எலும்பு சார்ந்த மூட்டுவீக்கம் உடையவர்களுக்கு பொறுக்கமுடியாத வலியானது, சிலருக்கு காலையில்தான் ஏற்படுமாம். இதற்கு மாத்திரைகளை இரவிலேயே எடுத்துக்கொள்வது நல்லது. மாலையில் வலி உள்ளவர்கள், பகலிலேயே மாத்திரைகளை உட்கொள்வது நலம் பயக்கும்.