Tuesday, January 22, 2008

நான் பேச்சிலர் இல்லை, பிரம்மச்சாரி!

நான் பேச்சிலர் இல்லை, பிரம்மச்சாரி!
- டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம்

நேற்று மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை சென்னை நாரத கான சபாவில் இணைந்து நாம் 99 என்ற அமைப்பு, சிறகு பவுண்டேஷன் (SIRAKU – Skills and Income for Rural Aspirants and Knowledge Unlimited) மற்றும் சியோஸாவுடன் ((CIOSA – Confederation of Indian Organizations for Service & Advocacy) இணைந்து தனது தொடக்க விழாவைக் கொண்டாடியது.

இவ்விழாவின் முக்கிய ஹைலைட்டே முன்னாள் ஜனாதிபதி, விஞ்ஞானி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறை ஒரு மணிநேர குறும்படமாக எடுத்து அதை குறுந்தகடாக வெளியிட்ட நிகழ்வுதான்.

இந்த ஒரு மணிநேர குறும்படம் இரண்டரை ஆண்டுகள் உழைப்பின் விளைவு என்று அதை இயக்கிய இயக்குநர் பி. தனபால் பேசுகையில் குறிப்பிட்டார்.

`100 இளைஞர்களை என் வசம் தாருங்கள். எழுச்சிமிக்க இந்தியாவை உருவாக்கிக் காட்டுகிறேன்' என சுவாமி விவேகானந்தர் கூறியது அனைவருக்கும் நினைவு இருக்கும். அதேபோன்று `வளமான பாரதம் காண அனைவரும் கனவு காணுங்கள்’ என அப்துல் கலாம் கூறியதை செயல்படுத்தும் முகமாக இந்த இணைந்து நாம் 99 அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதை இந்த விழாவின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.

இந்த விழாவுக்கு திரையுலகப் பிதாமகரான இயக்குநர் திலகம் கே. பாலச்சந்தரும் வந்திருந்து குறுந்தகடை வெளியிட்டுப் பேசினார். அப்போது அவர் பேச்சின் நிறைவாக அப்தும் கலாமை பேச்சிலர் என்று கூறி பேசி முடித்தார்.

அடுத்துப் பேசிய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் “நான் பேச்சிலர் அல்ல, பிரம்மச்சாரி’ என ஆரம்பித்து, “இரண்டுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருக்கிறது’ எனக்கூறி தொடர்ந்து பேசினார்.

`எ லிட்டில் ட்ரீம்’ என்ற அந்தக் குறுந்தகட்டில் இருந்து ஒரு பகுதியை நிகழ்ச்சியின் இடையே காண்பித்தார்கள். டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறைக் காணவிரும்புவர்களுக்கு இந்த சிடி (குறுந்தகடு) உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதம்தான்.

இந்தக் குறுந்தகடு `A Little Dream’ – A Life Documentary Film on Dr. APJ Abdul Kalam என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இந்த சிடி அனைத்து முன்னணி கடைகளிலும் கிடைக்கிறது.

No comments: