Sunday, April 13, 2008

ஸ்ரீராம நவமி - ஸ்ரீராமர் ஜாதகத்துடன்...

ஸ்ரீராம நவமி - ஸ்ரீராமர் ஜாதகத்துடன்...

14/04/2008.

ததஸ்ச த்வாதஸே மாஸே சைத்ரே நாவமிகே திதௌ

நக்ஷத்ரே(அ)திதி தைவத்யே ஸ்வோச்ச ஸம்ஸ்த்தேஷு பஞ்சஸு க்ரஹேஷு கர்க்கடே லக்நே வாக்யதா விந்துநா ஸஹ
ப்ரோத்யமாதே ஜகந்நாதம் ஸர்வலோக நமஸ்க்ருதம்

கௌஸல்யா(அ)ஜநயத் ராமம் ஸர்வலக்ஷண யம்யுதம்

- ஸ்ரீ வால்மீகி ராமாயணம

ஸ்ரீ ராமர் ஜாதகம்

சுக்கிரன்

சூரியன் புதன்

கேது

ராசிச் சக்கரம்

லக்னம் குரு சந்திரன்

செவ்வாய்

ராகு

சனி

மகிமை வாய்ந்த இந்த ராமர் ஜாதகத்தை பூஜை இடத்தில் எழுந்தருளப்பண்ணி தினமும் பக்தி சிரத்தையுடன் ஆராதித்து வரவேண்டும். இந்தப் புனிதமான ராமர் ஜாதகத்தை பூஜிப்பவர்களுக்கும் வைத்திருப்பவர்களுக்கும் ஜாதகரீதியாக இருக்கும் நவக்கிரக தோஷங்கள் விலகுவதுடன் சகலவிதமான பிணிகளும் நீங்கும். மேலும் ஐசுவரிய அபிவ்ருத்தியும் ஆயுள் அபிவ்ருத்தியும் ரகுகுல நாயகனின் அருளால் உண்டாகும்.

ராமனும் ராமாயணமும்!

மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்குச் சிறந்த உதாரணம் ராம அவதாரம். ராமன் தன் அவதாரம் மூலம், உலகுக்கு உணர்த்தாத பொருளே இல்லை, உரைக்காத உண்மையில்லை. தந்தை சொல் கேட்டல், உடன்பிறப்பு ஒற்றுமை, தாய்க்குச் சிறந்த மகனாக இருத்தல், வாக்குத் தவறாமை, ஒருவனுக்கு ஒருத்தி என்கிற ஏகபத்தினி விரதம் - இப்படி சொல்லிக் கொண்டே செல்லலாம்.

ஓர் இல், ஒரு சொல், ஒரு வில் என வாழ்ந்து வழிகாட்டியவர் ஸ்ரீராமர்.
ஓர் இல் - ஒரு மனைவி.
ஒரு சொல் - வாக்குத் தவறாமை.
ஒரு வில் - குறி தவறாத ராம சரம்.

'ராமன்' என்றாலே தானும் ஆனந்தமாக இருந்து மற்றவர்களுக்கும் ஆனந்தத்தைத் தருகிறவன் என்று அர்த்தம். எத்தனைவிதமான துக்கங்கள் வந்தபோதிலும் மனத்தைத் தளரவிடாமல், ஆனந்தமாக தர்மத்தையே அனுசரித்துவந்தவர்.

சொந்த விருப்பு-வெறுப்புகளுக்கு இலக்காகாமல் வேதம் விதிக்கிற தர்மப்படி வாழ ஆரம்பித்துவிட்டால், தானாகவே மனத்தின் சஞ்சலங்கள் குறைந்து, அது தெளிய ஆரம்பிக்கும். இதனால் மனத்தில் எப்போதும் ஆனந்தம் லேசாக இருக்கும்.

ராமாயணம் முழுக்க எங்கே பார்த்தாலும் தர்மத்தைத்தான் சொல்லியிருக்கிறது. சாஸ்திரத்துக்குக் கட்டுப்படுவது மிகவும் முக்கியம். அது இறைவனாகவே இருந்தாலும், அவன் மனித உருவில் வந்தாலும் என்பதைத்தான் ராமாயணம் வலியுறுத்துகிறது.

ஒரு சமயம் லக்ஷ்மணன் ராமனிடம், 'தர்மம் தர்மம் என்று அதை தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவதால்தானே இத்தனை துன்பப்படுகிறோம்? பேசாமல் அதை விட்டுவிட்டால் என்ன?' என்று கேட்க, ராமன் அதைப் பொருட்படுத்தாது இருந்தான். கடைசியில் அந்தத் தர்மம்தான் அவர்களைக் காத்தது. ராவணனுக்குப் பத்துத் தலைகள் இருந்தும் அவன் தர்ம வழியில் செல்லவில்லை. எனவே, அவனது அத்தனை தலைகளும் உருண்டு விழுந்தன.

ஆதிசங்கரர், சிவவாக்கியர் முதலான மகான்களில் இருந்து சமீப காலக் கவிஞர்கள் வரை அனைவராலும் போற்றப்பட்ட அவதாரம் ஸ்ரீராமாவதாரம். விசிறிச் சாமியார் என்றழைக்கப்படும் யோகி ராம்சுரத்குமாருக்கு அவர் குரு பாபா ராம்தாஸ் 'ஓம் ஸ்ரீராம் ஜெய ராம் ஜெயஜெய ராம்' என்ற ஸ்ரீராம நாம மந்திரத்தைத்தான் உபதேசித்தார்.

மந்திராலய மகான் ஸ்ரீராகவேந்திரரும் மூல ராமரைத்தான் ஆராதித்தார்.
ஸ்ரீராகவேந்திரரிடம் சில பக்தர்கள், 'பல்வேறு கடவுள்கள் இருக்க, நீங்கள் மூல ராமரையே ஏன் துதிக்கிறீர்கள்?' எனக் கேட்டார்கள். அதற்கு ராகவேந்திரர்,
'நிறையக் கடவுள்களைக் கும்பிட்டால் இவரைவிட அவர் உயர்ந்தவரோ என்ற தேவையற்ற பேதங்கள் தோன்றும். எல்லாக் கடவுள்களும் ஒன்றே என்ற உண்மை புரியாமல் போகும். இதைத் தவிர்க்கவே நான் மூல ராமரையே ஆராதிக்கிறேன்' எனச் சிரித்தவாறே பதில் அளித்தார்.

பரதன், லட்சுமணன், சத்ருக்கனன் ஆகிய மூவரிடம் மட்டுமல்லாமல் படகோட்டியான குகன், வானர இனத்தைச் சேர்ந்த சுக்ரீவன் மற்றும் அரக்கர் குலத்தைச் சார்ந்த விபீஷணன் ஆகியோரிடமும் பகைமை பாராட்டாமல் சகோதர பாவத்தில் பழகியவர்.

இந்திய இதிகாசமான வால்மீகி இராமாயணத்தைத் தழுவி பல்வேறு இராமாயணங்கள் பல்வேறு மொழிகளில், பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டுள்ளன.

நாரத மகரிஷி வால்மீகிக்கு சுருக்கமாகச் சொன்ன ராமாயணமே ஸங்க்ஷேப ராமாயணம். ராமாயணம் பல வடிவங்களில் இருக்கிறது. அவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

காயத்ரீ ராமாயணம் - ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் இருபத்து நான்காயிரம் ஸ்லோகங்கள் கொண்டது. இந்த காயத்ரீ ராமாயணமோ இருபத்து நான்கு எழுத்துகள் கொண்ட காயத்ரீ மஹாமந்திரத்தின் ஒவ்வோர் எழுத்தையும் ஒவ்வோர் ஆயிரத்தின் முதல் எழுத்தாக அமைத்து 24 ஸ்லோகங்களில் அமைக்கப்பட்டதாகும். இதைத் தினமும் பாராயணம் செய்தால், வால்மீகி ராமாயணத்தைப் பூர்த்தியாகப் பாராயணம் செய்த பலனுடன், காயத்ரீ மந்திரத்தை ஜபித்த பலனும் கிடைக்கும்.

ஏகஸ்லோகி ராமாயணம் - பின்வரும் இந்த ஒரு ஸ்லோகத்தைப் படித்தாலே ராமாயணம் முழுவதும் பாராயணம் செய்த பலன் உண்டாகும்.

ஆதௌ ராம தபோவநாதி கமநம் ஹத்வா ம்ருகம் காஞ்சநம்
வைதேஹீ ஹரணம் ஜடாயுமரணம் ஸுக்ரீவ ஸம்பாஷணம்
வாலீ நிக்ரஹணம் ஸமுத்ரதரணம் லங்காபுரீ தாஹநம்
பஸ்சாத்ராவண கும்பகர்ண நிதநம் த்வேதத்தி ராமாயணம்

ஸ்ரீ நாம ராமாயணம் - ஸ்ரீ ராமபிரானுடைய புகழைப் பாட உதவும் ராமாயணம். ஒவ்வொரு நாமத்தின் முடிவிலும் ராம என்று முடியும் ராமாயணம். ராம நாமமும் ராமாயணக் கதையும் ஒன்றன்பின் ஒன்றாக வருவதால், ராமாயண பாராயணமும் நாம ஜபமும் ஒருங்கே செய்த திருப்தி கிடைக்கிறது. இந்த ஸ்ரீ நாம பாராயணம் மத்வஸ்ரீ பண்டிட்லக்ஷ்மணாச்சாரியார் என்ற மஹான் இயற்றியதாகும். இதைப் பாராயணம் செய்வதால் சரீர வியாதியும் மனோ வியாதியும் தீரும்.

திவ்யப் பிரபந்த பாசுர ராமாயணம் - ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை என்னும் மாமுனிவர் இந்த ராமாயணத்தை இயற்றி அருளினார். பன்னிரு ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்த பாசுரங்களிலுள்ள பதங்களையே தொகுத்து இவர் ராமாயணமாக அருளியிருக்கிறார். இதை அநுதினமும் பாராயணம் செய்தால் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தையும் ராமாயணத்தையும் பாராயணம் செய்த பலன் ஒருங்கே கிடைக்கும்.

ஸ்ரீ ராமாயண சங்க்ரஹம் - ஸ்ரீ குலசேகர ஆழ்வார் 'பெருமாள் திருமொழி' என்கிற திவ்யப் பிரபந்தத்தை அருளியிருக்கிறார். அதில் பத்தாம் திருமொழியில் ராமாயணத்தைப் பத்துப் பாசுரங்களில் பாடியிருக்கிறார். அந்தப் பகுதியே 'ஸ்ரீ ராமாயண சங்க்ரஹம்' எனப்படுகிறது.

அத்யாத்ம இராமாயணம் - சிவன்-சக்தி இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடலைப் பின்புலமாகக் கொண்டு இந்த ராமாயணம் அமைந்துள்ளது. வால்மீகி ராமாயணத்தில் ராமனின் இறைத்தன்மைக்கு முக்கியத்துவம் தராமல், ராமனை மானுடனாகவே வால்மீகி காட்டியிருப்பார். ஆனால் அத்யாத்ம இராமாயணத்திலோ, ராமர் பரம்பொருளாகவே காட்சி தருவார். பிற்காலத்தில் வந்த துளசிதாசரின் ராமாயணத்தில், அத்யாத்ம ராமாயணத்தின் சாயலைக் காணலாம்.

ராமாயண சாரத்தை சங்கீதத்திலும் ராகமாலிகையாகப் பலர் பாடியிருக்கிறார்கள். ஸ்வாதித் திருநாள் மகாராஜாவின் 'பாவயாமி ரகுராமம்', அருணாசலக் கவிராயரின் 'எனக்குன்னிருபதம் நினைக்க வரமருள்வாய் ஸ்ரீ ராமசந்த்ர' என்ற கீர்த்தனங்கள் குறிப்பிடத்தகுந்தவை. சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான ஸ்ரீ தியாகராஜரும், சௌராஷ்ட்ர ராகத்தில், ராமாயணத்தில் வரும் இருபது முக்கிய நிகழ்ச்சிகளை த(ந)ம் கண்முன் நிறுத்தி, அந்தக் காட்சிகளை நான் என்று காண்பேனோ என்று பாடியிருக்கிறார்.