Tuesday, August 28, 2007

அனந்தங்காடு! - திருவனந்தபுரம் அனந்த பத்மநாப ஸ்வாமி ஆலய வரலாறு...

பிராமணக் குடும்பங்களில் மகளிர் பரம்பரை பரம்பரையாக பாடிக்கொண்டு வரும் அரிய பாடல்கள் பல உண்டு. வேதாந்த பரமாகவும் புராண சம்பந்தமாகவும் உள்ள கதைப்பாட்டுகள் பல இப்படி வாய்மொழியாக வந்துகொண்டே இருக்கின்றன. இந்த வகையில் அமைந்த பாடல்களில் 'அனந்தங்காடு' என்பதுவும் ஒன்று.

திருவனந்தபுரத்தில் அனந்த பத்மநாப ஸ்வாமி கோயில் கொண்டு எழுந்தருளுவதற்குக் காரணமான கதையைச் சொல்வது அது. மிகவும் அற்புதமான அழகான வரலாறு.


ஸ்ரீவாங்கள் என்ற மாமுனிவர் விஜயநகரத்தில் இருந்துகொண்டு கர்மபந்தங்கள் ஒழியும் பொருட்டு தவம் புரிந்து வந்தார். ஜன்ம ஜன்மந்தோறும் கண்ணபிரானையே பூஜித்து வந்ததனால் அவருடைய தவவிரதம் சிறப்பாக அமைந்தது. அஷ்டாக்ஷர மகாமந்திர ஜபம் செய்து அஷ்டாங்கயோகம் பண்ணி, பாலரூப கண்ணபிரானைத் தியானித்து வந்தார் அம்முனிவர்.

அகத்துக்குள்ளே ஒளிமயமான பரப்பில் கண்ணபிரான் திருவுருவத்தைக் கண்டு எல்லாம் மறந்து நிட்டையிலேயே இன்புறவேண்டும் என்பது அவருடைய ஆர்வம்.

கண்ணபிரான் அம்முனிவரைச் சோதித்து விளையாடத் துணிந்துவிட்டான். உலகை மறந்து புறத்தே தோன்றும் உயிர்களைப் புறக்கணித்து நிஷ்டை புரிவதனால் பயன் இல்லை என்று காட்ட எண்ணினானோ என்னவோ! சின்னஞ்சிறு குழந்தையாய் முனிவர் முன் போய் நின்றான்.

ஆஹா! என்ன மனமோகனமான வடிவம்!

கண்ணன் தன் திருவுருவ அழகெல்லாம் குலுங்க, திருமேனி குலுங்க ஆடுகிறான். ஸ்ரீவாங்கள் கண்ணைத் திறக்கவில்லை. கண்ணன் சலிக்கவில்லை. பின்னும் குழந்தைத் திருவிளையாடல்களைக் காட்டத் தொடங்கினான். கனிவாயூறல் சிந்த, சிலம்புகள் ஆர்க்கப் பாதம் சிவக்க, நிருத்தம் செய்தான். யசோதைகூட இத்தனை அழகோடு பாலகோபாலன் நிருத்தம் செய்வதைப் பார்த்திருக்க மாட்டாளே! அடியார்களிடத்தில் அவனுக்கு உள்ள கிருபைதான் என்ன அதிசயமானது! முனிவர் விழி திறப்பதாயில்லை.

முனிவர் முன்னே நின்று ஆடிப்பார்த்தும், அவர் விழி திறவாமல் இருப்பதைக் கண்ட கண்ணனுக்குப் பின்னும் கருணை சுரந்தது.

இப்படிச் சகல லீலையும் காட்டியும் முனிவர் அந்தர்முக தியான பரராகவே அமர்ந்திருந்தார்.

'இருபத்தொரு பிறவி என்னைக் காண்பதற்காக நீ தவம் புரிகிறாய். உன் தவத்தை மெச்சினேன். உன் தியானத்தை நிறுத்து' என்று கண்ணன் வாய் மலர்ந்தான். அந்த வார்த்தை முனிவர் காதில் விழவில்லை. ஊர் வந்தும் வண்டியின் மேலே உள்ள ஆசையால் இறங்காத பிரயாணியைப்போல் அவர் நிஷ்டை கூடியிருந்தார். பின்னரும் அவர் கண் திறவாததால் கண்ணன் பார்த்தான். 'இவர் அகத்தே ஒளி சிறிது இருப்பதால் நம்மைப் பார்க்கவில்லை. அங்கே முழு இருளைப் பரப்பினால் கண் திறப்பார் என்று எண்ணி, அகத்தில் இருளை உண்டாக்கி ஸ்ரீவாங்கள் முனிவரை அப்படியே ஆலிங்கனமாகத் தழுவுகிறார். பின்னர், மடிமேலே ஏறி நிற்கின்றார்.

பலகாலம் தவம் புரிந்து கோபியராகி வந்தவர்களுக்கும்கூட இந்த ஆலிங்கன சுகம் கிடைத்திருக்குமா? சந்தேகம்தான். கண்ணன் கருணையோ வழிந்து பொங்குகிறது. பின்னர் முனிவருடைய கையைப் பிடிக்கிறார்.

பக்தி போதிக்கும் பரமர் அப்போ
பக்தனுடைய கையைப் பிடித்தார்!
பித்தங்கொண் டாற்போல் ஸ்ரீவாங்கனும்
புறங்கையால் தள்ளிப் புறக்கணித்தார்!


அடப் பாவி! செந்தாமரைத் திருக்கரத்தை முத்தமிட்டுக் கண்ணில் ஒத்திக்கொள்ள வேண்டாமோ! மலரெடுத்துப் பூஜிக்கவேண்டாமோ! கண்ணீரால் அபிஷேகம் செய்ய வேண்டாமோ!

நாம் உலகை வெறுத்து உலகப் பொருளைப் பாராமல் கண்ணை மூடித் தவம் செய்கிறோம். புத்தியிலே சிறந்த ஞானி நாம். புத்தியறியாத குழந்தை தவத்தைக் கலைக்கிறது. புனிதமாகிய தீர்த்தத்தைக் கொட்டுகிறது. பூஜா விக்கிரகத்தைத் தொடுகிறது. எச்சில் அறியாத கையால் தூய்மையைக் கெடுக்கிறது என்று அகங்கார முனைப்பினால் எண்ணினார்.

ஜன்ம ஜன்மாந்திரங்களாக யோகத்தாலும் விரதத்தாலும் எந்த மலரடிகளை அவர் தேடிக் கொண்டிருக்கிறாரோ, அந்தத் திருவடிகளே தம்முடைய கமண்டலத்தை உருட்டி உதைத்து, மாயச் சடலத்தையும் உதைக்க வந்திருக்கிறது என்ற உண்மையை உணரவில்லை. தன்னுடைய ஸ்பரிசத்தால் அழுக்கைப் போக்கி நிர்மலமான ஆனந்தத்தை அருளும் பாலகோபாலன் வந்திருக்கிறான் என்று தெரிந்துகொள்ளவில்லை. ஐயோ, பாவமே பாவம்!

நித்தியர் என்று அறியாமல் நின்ற சிறுவரைக் கடிந்துரைப்பார்

புத்தி அறியாத பாலகனே நான் போற்றும் நாதனைத் தொடுவாயோ!
எச்சில் அறியாத கண்மணியே! இங்ஙனே செய்தால் நான் என் செய்குவேன்?
ஒத்தி விளையாடி நின்றாயானால் உசிதமான பழந்தருவேன்.


ஆசை காட்டி ஒத்தி விளையாடும்படியாகச் சொல்லுகிறார். என்ன பேதைமை!

கண்ணன் பொறுமையை இழந்தான். 'நான் குழந்தை உருவத்தோடு வந்தேன். இவன் பார்க்கவில்லை. துளசிமாலை மணம் நாற நின்றேன். இவன் கவனிக்கவில்லை. சிலம்பொலி இன்னிசை தர நடனம் செய்தேன். இவன் கண்ணைத் திறக்கவில்லை. இவனைத் தழுவினேன். இவன் உணரவில்லை. கையைப் பற்றினேன். வேண்டாம் என்று புறங்கையால் தள்ளினான். இவனுக்கு அருகில் வந்து அருள் செய்ய வந்தேன். ஒத்திப் போ என்கிறான். ஆம்! இவனுக்குப் பாக்கியம் இல்லை. நாம் ஒத்திப்போக வேண்டுமாம்! சரி, அப்படியே செய்வோம் என்று திருவுள்ளத்தே எண்ணினான். திடீரென்று மறைந்தான்.

ஸ்ரீவாங்கள் காதில் இடியோசை போல ஓரொலி கேட்டது. 'நீர் சுத்தமுடன் வைத்துப் பஜனை பண்ணும். நான் தொடுவதில்லை உம்ம சிவலிங்கத்தை. எத்தனையோ காலம் வருந்தினீரே! இங்கே வந்து நான் லீலை செய்ய, ஒத்தி இரு என்ற ஸ்ரீவாங்களே உம்முடைய வார்த்தையை மறவேன் நான்!'

கண்ணன் ஆத்திரத்தில் சொல்லிவிட்டான். ஆனாலும் கருணை வள்ளல் அல்லவா? 'உனக்கு உண்மையில் தீவிரமான பக்தி உண்டானால் பின்னே வருவோம். திருவனந்தபுரத்தில் தரிசனம் தருவோம்!' என்று சிறு நம்பிக்கை வார்த்தையையும் அருளினான்.

மத்த ராகிய மனசுள்ளோரே
மலையாளந் தன்னில் அனந்தங்காட்டில்
பக்தி அறிந்து பின்னே வருவோம்
பார்க்கலாம் என்று பரமன் சொல்லி


கண்ணன் உள் ஒளியும் புற ஒளியும் கரந்து மறைந்தான். முனிவர் திடுக்கிட்டுக் கண் விழித்தார். குழந்தையைக் காணவில்லை. கண்ணன் கூறிச்சென்ற வார்த்தைகள் இன்னும் அவர் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தன.

'என்ன இது! கண்ணனையா நாம் புறக்கணித்தோம்! கண்ணனா குழந்தையாக வந்தான்! நான் உன்னை உள்ளே தேடுவதாக அல்லவோ அகங்காரம் நிறைந்து நின்றேன்! இனிமேல் உன்னை வெளியிலே தேடினால் ஒழிய என் கண் குளிராது. ஒரு கணமும் சும்மா இருக்கமாட்டேன். கண்ணா! எனக்கு உன் அழகைக் காட்டாயா!' - புலம்புகிறார். அழுது விழுந்து துடிக்கிறார். அகண்டப் பிரபஞ்சத்தையும் சுற்றி கண்ணனைத் தேடத் துணிந்துவிட்டார்.

கண்ணன் இளந்திரு உருவத்தை நாடி நைந்து கால் போன போக்கிலே நடந்தார். 'கண்ணன் வரமாட்டானா!' என்ற ஆசையினால் திசையெல்லாம் அலைகிறார். வாய்விட்டுக் கதறி அழுகிறார். வேகமாக ஓடுகிறார். நிற்கிறார். கண்ணன் அவருக்கு முன்னே செல்கிறான். ஆனால், தன் உருவத்தைக் காட்டவில்லை. சலன் சலன் என்று அவனது பொற்சலங்கை ஓசையிடுகிறது. அந்த ஓசையையே தாரகமாகப் பற்றிக்கொண்டு முனிவர் நடக்கிறார். 'இந்த ஓசை மட்டும் கேட்கிறதே! என்னிடம் இப்படி வா என்று ஒரு வார்த்தை சொல்லி நடக்க மாட்டாயா கண்ணா? தோன்றி நிற்கமாட்டாயா கிருஷ்ணா?' என்று மறுகுகிறார். மறுகிக்கொண்டே தென் மலையாளப் பிரதேசத்துக்கு வந்துவிட்டார்.

கண்ணா! நான் இனிமேல் கோடி ஜன்மம் தவம் செய்தாலும் அந்த அழகிய கோலத்தைக் காண்பேனா! கருணை பொழியும் மலர் விழிகளைக் காண்பேனா! கண்ணா! உன் கோபத்தை நான் அறியாமல் இருந்துவிட்டேனே! முன்போலவே குழந்தை உருவத்தோடு வந்து நில். நான் செய்த பிழைகளைப் பொறுத்து எனக்குத் தரிசனம் அளித்தருள்!'

ஸ்ரீவாங்கள் முனிவரின் ஓலத்தை காட்டிலுள்ள விலங்குகள் கேட்டன. மரங்கள் கேட்டன. மலைகள் கேட்டன. 'அப்பனே! உலகத்துக்கெல்லாம் தனி உயிராக நிறைந்திலங்கும் உன்னை மறந்தால் உலகமெல்லாம் கலங்காதோ! என் உயிர் இனி நில்லாது. உன்னுடைய தரிசனம் கிடைக்காவிடில், உயிரைப் போக்கிக்கொள்ள வேண்டியதுதான்! என்று கதறினார்.

அவருடைய துயரம் கண்ணபிரானை உருக்கியது. 'இனி இவரை அலைக்கழிக்கக் கூடாது' என்று நினைத்தான் போலும். முனிவர் வேகமாகச் சென்றார். கண்ணபிரானது சிலம்போசை அவருக்கு வழிகாட்டியது. அனந்தங்காடு வந்தவுடன் அப்பெருமான் அங்கு நின்ற ஒரு பெரிய இலுப்பை மரத்தடியில் மறைந்து போனான். அதுகாறும் கேட்டுவந்த கொத்துச் சதங்கையின் ஒலி முனிவர் காதில் விழவில்லை. கிண்கிணியின் அரவம் கேட்கவில்லை. 'வாதாடி வந்த திருநடையும் வண்ணக் கிண்கிணி ஓசைகளும் ஆதாளி அரவமும் கேட்காமல்' முனிவர் நடுங்கினார்.

அனந்தங்காடு வந்தால் நம் கலி தீருமென்று நினைத்தோமே! இங்கே வந்தபிறகு உள்ளதையும் இழந்தோமே! காதிலே கேட்டுவந்த செஞ்சிலம்போசையும் நின்றுவிட்டதே! என்று தவித்தார். 'கண்ணா! நீ மறைந்துவிட்டாயே! இது என்ன மாயம்?' என்று கதறினார். 'என் கண்ணன் மறைந்த இடம் இதுதான். இங்கேதான் அவனைத் தேடிப் பார்க்கவேண்டும்' என்று எண்ணி சுற்றுமுற்றும் பார்த்தார்.

என்ன ஆச்சரியம்! அங்கே நின்றிருந்த பிரும்மாண்டமான இலுப்பை மரம் படபடவென்று கீழே சாய்ந்தது. அதைப் பார்த்தால் சாமானியமான மரமாகத் தோன்றவில்லை. அது ஏதோ தெய்வப் பரிமளம் வீசி நின்றது. தெய்வ தத்துவத்தைப் புலப்படுத்தி நின்றது.

'இதென்ன அதிசயமாக இருக்கிறதே! இதுவரை காணாத காட்சியாகத் தோன்றுகிறதே! வண்ணங் குலுங்கக் குழந்தையாக வந்த கண்ணனே இந்தத் திருக்கோலம் பூண்டானோ? சின்னஞ்சிறிய உருவத்தை அவமதித்த எனக்கு, பெரிய உருவத்தைக் காட்டத் திருவுள்ளம் பூண்டானோ? என்று எண்ணி உருகி அருகிலே சென்று பார்த்தார் முனிவர். அவர் தம் கண்ணையே நம்ப முடியவில்லை. உடம்பிற் புளகம் போர்த்தது. பகவான் பெரிய வடிவு கொண்டு சயனித்த திருக்கோலத்தோடு அவருக்குக் காட்சி அளித்தான். பத்மநாபன் கிடந்த திருக்கோலம் பார்க்கப் பார்க்கக் கண்ணைப் பறிக்கிறது முனிவருக்கு.

அவர் ஆனந்தம் அடைந்தார். கை குவித்தார். விழுந்தார். புரண்டார். அழுதார். தொழுதார். உருகினார். மறுகினார். 'எம்பெருமானே! உன்னைத் தரிசித்தும் அபிஷேகம் செய்யாமல், மலர் கொய்து பூசிக்காமல், நிவேதனம் பண்ணாமல் வீண் பொழுது போக்குகிறேனே!' என்று வேசாறினார். அங்கே பூஜை பண்ண அவரிடம் என்ன இருக்கிறது?

அப்பொழுது அருகிலுள்ள நகரத்திலிருந்து ஒரு வணிகன் 'ஒற்றை உடுத்து கோடித்துணி போர்த்துப் பெற்றெடுத்த தந்தைக்கு 'பிதுர் கர்மம்' செய்வதற்காக வந்தான். அவன் தன் கையில் அந்தக் கர்மத்தின் பொருட்டுப் பச்சரிசியும் மாங்கனியும் வைத்திருந்தான். முனிவருடைய தோற்றத்தைக் கண்டு, பயபக்தியுடன் அவன் அவருக்கு அவற்றைக் கொடுத்தான். 'அந்தணருக்கு இவற்றையளித்து சிராத்தம் செய்ய எண்ணினேன். இவரைக் காட்டிலும் சிறந்தவர் யார் கிடைக்கப்போகிறார்கள்?' என்ற நினைவோடு அவன் ஈந்தான். 'இதுவும் எம்பெருமான் திருவருட் செயலே!' என்று உவந்து, முனிவர் பச்சரிசியையும் மாம்பழத்தையும் பெற்றுக்கொண்டார். அவற்றையே நிவேதனப் பொருளாக வைத்து அனந்த பத்மநாபனுக்குப் பூஜை செய்தார்.

முனிவர் இவ்வாறு பக்தி செய்து பூசை புரிந்து இறுதியில் மாயை நீங்கிப் பத்மநாபன் திருவடியில் ஐக்கியமானார். அவருக்காகத் தோன்றிய பத்மநாபன் இன்றும் திருவனந்தபுரத்திலே எல்லா மக்களும் கண்டு இன்புறும்படி அறிதுயிலில் அமர்ந்து விளங்குகிறான். முன்பு பகவான் 'திருவனந்தூர் முடி தாழ்த்தித் திருப்பாலூர் கால் நீட்டிக் கிடந்தாராம். பிறகு குறுகி மூன்று வாயிற்படியிலிருந்து காணும் உருவத்தோடு காட்சி அளிக்கிறாராம். இன்றும் சந்நியாசி பூசையை நினைத்து பச்சரிசியும் மாங்கனியும் வைத்துப் பத்மநாபனுக்கு நிவேதனம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நடக்கிறது.

No comments: