Tuesday, August 28, 2007

அனந்தங்காடு! - திருவனந்தபுரம் அனந்த பத்மநாப ஸ்வாமி ஆலய வரலாறு...

பிராமணக் குடும்பங்களில் மகளிர் பரம்பரை பரம்பரையாக பாடிக்கொண்டு வரும் அரிய பாடல்கள் பல உண்டு. வேதாந்த பரமாகவும் புராண சம்பந்தமாகவும் உள்ள கதைப்பாட்டுகள் பல இப்படி வாய்மொழியாக வந்துகொண்டே இருக்கின்றன. இந்த வகையில் அமைந்த பாடல்களில் 'அனந்தங்காடு' என்பதுவும் ஒன்று.

திருவனந்தபுரத்தில் அனந்த பத்மநாப ஸ்வாமி கோயில் கொண்டு எழுந்தருளுவதற்குக் காரணமான கதையைச் சொல்வது அது. மிகவும் அற்புதமான அழகான வரலாறு.


ஸ்ரீவாங்கள் என்ற மாமுனிவர் விஜயநகரத்தில் இருந்துகொண்டு கர்மபந்தங்கள் ஒழியும் பொருட்டு தவம் புரிந்து வந்தார். ஜன்ம ஜன்மந்தோறும் கண்ணபிரானையே பூஜித்து வந்ததனால் அவருடைய தவவிரதம் சிறப்பாக அமைந்தது. அஷ்டாக்ஷர மகாமந்திர ஜபம் செய்து அஷ்டாங்கயோகம் பண்ணி, பாலரூப கண்ணபிரானைத் தியானித்து வந்தார் அம்முனிவர்.

அகத்துக்குள்ளே ஒளிமயமான பரப்பில் கண்ணபிரான் திருவுருவத்தைக் கண்டு எல்லாம் மறந்து நிட்டையிலேயே இன்புறவேண்டும் என்பது அவருடைய ஆர்வம்.

கண்ணபிரான் அம்முனிவரைச் சோதித்து விளையாடத் துணிந்துவிட்டான். உலகை மறந்து புறத்தே தோன்றும் உயிர்களைப் புறக்கணித்து நிஷ்டை புரிவதனால் பயன் இல்லை என்று காட்ட எண்ணினானோ என்னவோ! சின்னஞ்சிறு குழந்தையாய் முனிவர் முன் போய் நின்றான்.

ஆஹா! என்ன மனமோகனமான வடிவம்!

கண்ணன் தன் திருவுருவ அழகெல்லாம் குலுங்க, திருமேனி குலுங்க ஆடுகிறான். ஸ்ரீவாங்கள் கண்ணைத் திறக்கவில்லை. கண்ணன் சலிக்கவில்லை. பின்னும் குழந்தைத் திருவிளையாடல்களைக் காட்டத் தொடங்கினான். கனிவாயூறல் சிந்த, சிலம்புகள் ஆர்க்கப் பாதம் சிவக்க, நிருத்தம் செய்தான். யசோதைகூட இத்தனை அழகோடு பாலகோபாலன் நிருத்தம் செய்வதைப் பார்த்திருக்க மாட்டாளே! அடியார்களிடத்தில் அவனுக்கு உள்ள கிருபைதான் என்ன அதிசயமானது! முனிவர் விழி திறப்பதாயில்லை.

முனிவர் முன்னே நின்று ஆடிப்பார்த்தும், அவர் விழி திறவாமல் இருப்பதைக் கண்ட கண்ணனுக்குப் பின்னும் கருணை சுரந்தது.

இப்படிச் சகல லீலையும் காட்டியும் முனிவர் அந்தர்முக தியான பரராகவே அமர்ந்திருந்தார்.

'இருபத்தொரு பிறவி என்னைக் காண்பதற்காக நீ தவம் புரிகிறாய். உன் தவத்தை மெச்சினேன். உன் தியானத்தை நிறுத்து' என்று கண்ணன் வாய் மலர்ந்தான். அந்த வார்த்தை முனிவர் காதில் விழவில்லை. ஊர் வந்தும் வண்டியின் மேலே உள்ள ஆசையால் இறங்காத பிரயாணியைப்போல் அவர் நிஷ்டை கூடியிருந்தார். பின்னரும் அவர் கண் திறவாததால் கண்ணன் பார்த்தான். 'இவர் அகத்தே ஒளி சிறிது இருப்பதால் நம்மைப் பார்க்கவில்லை. அங்கே முழு இருளைப் பரப்பினால் கண் திறப்பார் என்று எண்ணி, அகத்தில் இருளை உண்டாக்கி ஸ்ரீவாங்கள் முனிவரை அப்படியே ஆலிங்கனமாகத் தழுவுகிறார். பின்னர், மடிமேலே ஏறி நிற்கின்றார்.

பலகாலம் தவம் புரிந்து கோபியராகி வந்தவர்களுக்கும்கூட இந்த ஆலிங்கன சுகம் கிடைத்திருக்குமா? சந்தேகம்தான். கண்ணன் கருணையோ வழிந்து பொங்குகிறது. பின்னர் முனிவருடைய கையைப் பிடிக்கிறார்.

பக்தி போதிக்கும் பரமர் அப்போ
பக்தனுடைய கையைப் பிடித்தார்!
பித்தங்கொண் டாற்போல் ஸ்ரீவாங்கனும்
புறங்கையால் தள்ளிப் புறக்கணித்தார்!


அடப் பாவி! செந்தாமரைத் திருக்கரத்தை முத்தமிட்டுக் கண்ணில் ஒத்திக்கொள்ள வேண்டாமோ! மலரெடுத்துப் பூஜிக்கவேண்டாமோ! கண்ணீரால் அபிஷேகம் செய்ய வேண்டாமோ!

நாம் உலகை வெறுத்து உலகப் பொருளைப் பாராமல் கண்ணை மூடித் தவம் செய்கிறோம். புத்தியிலே சிறந்த ஞானி நாம். புத்தியறியாத குழந்தை தவத்தைக் கலைக்கிறது. புனிதமாகிய தீர்த்தத்தைக் கொட்டுகிறது. பூஜா விக்கிரகத்தைத் தொடுகிறது. எச்சில் அறியாத கையால் தூய்மையைக் கெடுக்கிறது என்று அகங்கார முனைப்பினால் எண்ணினார்.

ஜன்ம ஜன்மாந்திரங்களாக யோகத்தாலும் விரதத்தாலும் எந்த மலரடிகளை அவர் தேடிக் கொண்டிருக்கிறாரோ, அந்தத் திருவடிகளே தம்முடைய கமண்டலத்தை உருட்டி உதைத்து, மாயச் சடலத்தையும் உதைக்க வந்திருக்கிறது என்ற உண்மையை உணரவில்லை. தன்னுடைய ஸ்பரிசத்தால் அழுக்கைப் போக்கி நிர்மலமான ஆனந்தத்தை அருளும் பாலகோபாலன் வந்திருக்கிறான் என்று தெரிந்துகொள்ளவில்லை. ஐயோ, பாவமே பாவம்!

நித்தியர் என்று அறியாமல் நின்ற சிறுவரைக் கடிந்துரைப்பார்

புத்தி அறியாத பாலகனே நான் போற்றும் நாதனைத் தொடுவாயோ!
எச்சில் அறியாத கண்மணியே! இங்ஙனே செய்தால் நான் என் செய்குவேன்?
ஒத்தி விளையாடி நின்றாயானால் உசிதமான பழந்தருவேன்.


ஆசை காட்டி ஒத்தி விளையாடும்படியாகச் சொல்லுகிறார். என்ன பேதைமை!

கண்ணன் பொறுமையை இழந்தான். 'நான் குழந்தை உருவத்தோடு வந்தேன். இவன் பார்க்கவில்லை. துளசிமாலை மணம் நாற நின்றேன். இவன் கவனிக்கவில்லை. சிலம்பொலி இன்னிசை தர நடனம் செய்தேன். இவன் கண்ணைத் திறக்கவில்லை. இவனைத் தழுவினேன். இவன் உணரவில்லை. கையைப் பற்றினேன். வேண்டாம் என்று புறங்கையால் தள்ளினான். இவனுக்கு அருகில் வந்து அருள் செய்ய வந்தேன். ஒத்திப் போ என்கிறான். ஆம்! இவனுக்குப் பாக்கியம் இல்லை. நாம் ஒத்திப்போக வேண்டுமாம்! சரி, அப்படியே செய்வோம் என்று திருவுள்ளத்தே எண்ணினான். திடீரென்று மறைந்தான்.

ஸ்ரீவாங்கள் காதில் இடியோசை போல ஓரொலி கேட்டது. 'நீர் சுத்தமுடன் வைத்துப் பஜனை பண்ணும். நான் தொடுவதில்லை உம்ம சிவலிங்கத்தை. எத்தனையோ காலம் வருந்தினீரே! இங்கே வந்து நான் லீலை செய்ய, ஒத்தி இரு என்ற ஸ்ரீவாங்களே உம்முடைய வார்த்தையை மறவேன் நான்!'

கண்ணன் ஆத்திரத்தில் சொல்லிவிட்டான். ஆனாலும் கருணை வள்ளல் அல்லவா? 'உனக்கு உண்மையில் தீவிரமான பக்தி உண்டானால் பின்னே வருவோம். திருவனந்தபுரத்தில் தரிசனம் தருவோம்!' என்று சிறு நம்பிக்கை வார்த்தையையும் அருளினான்.

மத்த ராகிய மனசுள்ளோரே
மலையாளந் தன்னில் அனந்தங்காட்டில்
பக்தி அறிந்து பின்னே வருவோம்
பார்க்கலாம் என்று பரமன் சொல்லி


கண்ணன் உள் ஒளியும் புற ஒளியும் கரந்து மறைந்தான். முனிவர் திடுக்கிட்டுக் கண் விழித்தார். குழந்தையைக் காணவில்லை. கண்ணன் கூறிச்சென்ற வார்த்தைகள் இன்னும் அவர் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தன.

'என்ன இது! கண்ணனையா நாம் புறக்கணித்தோம்! கண்ணனா குழந்தையாக வந்தான்! நான் உன்னை உள்ளே தேடுவதாக அல்லவோ அகங்காரம் நிறைந்து நின்றேன்! இனிமேல் உன்னை வெளியிலே தேடினால் ஒழிய என் கண் குளிராது. ஒரு கணமும் சும்மா இருக்கமாட்டேன். கண்ணா! எனக்கு உன் அழகைக் காட்டாயா!' - புலம்புகிறார். அழுது விழுந்து துடிக்கிறார். அகண்டப் பிரபஞ்சத்தையும் சுற்றி கண்ணனைத் தேடத் துணிந்துவிட்டார்.

கண்ணன் இளந்திரு உருவத்தை நாடி நைந்து கால் போன போக்கிலே நடந்தார். 'கண்ணன் வரமாட்டானா!' என்ற ஆசையினால் திசையெல்லாம் அலைகிறார். வாய்விட்டுக் கதறி அழுகிறார். வேகமாக ஓடுகிறார். நிற்கிறார். கண்ணன் அவருக்கு முன்னே செல்கிறான். ஆனால், தன் உருவத்தைக் காட்டவில்லை. சலன் சலன் என்று அவனது பொற்சலங்கை ஓசையிடுகிறது. அந்த ஓசையையே தாரகமாகப் பற்றிக்கொண்டு முனிவர் நடக்கிறார். 'இந்த ஓசை மட்டும் கேட்கிறதே! என்னிடம் இப்படி வா என்று ஒரு வார்த்தை சொல்லி நடக்க மாட்டாயா கண்ணா? தோன்றி நிற்கமாட்டாயா கிருஷ்ணா?' என்று மறுகுகிறார். மறுகிக்கொண்டே தென் மலையாளப் பிரதேசத்துக்கு வந்துவிட்டார்.

கண்ணா! நான் இனிமேல் கோடி ஜன்மம் தவம் செய்தாலும் அந்த அழகிய கோலத்தைக் காண்பேனா! கருணை பொழியும் மலர் விழிகளைக் காண்பேனா! கண்ணா! உன் கோபத்தை நான் அறியாமல் இருந்துவிட்டேனே! முன்போலவே குழந்தை உருவத்தோடு வந்து நில். நான் செய்த பிழைகளைப் பொறுத்து எனக்குத் தரிசனம் அளித்தருள்!'

ஸ்ரீவாங்கள் முனிவரின் ஓலத்தை காட்டிலுள்ள விலங்குகள் கேட்டன. மரங்கள் கேட்டன. மலைகள் கேட்டன. 'அப்பனே! உலகத்துக்கெல்லாம் தனி உயிராக நிறைந்திலங்கும் உன்னை மறந்தால் உலகமெல்லாம் கலங்காதோ! என் உயிர் இனி நில்லாது. உன்னுடைய தரிசனம் கிடைக்காவிடில், உயிரைப் போக்கிக்கொள்ள வேண்டியதுதான்! என்று கதறினார்.

அவருடைய துயரம் கண்ணபிரானை உருக்கியது. 'இனி இவரை அலைக்கழிக்கக் கூடாது' என்று நினைத்தான் போலும். முனிவர் வேகமாகச் சென்றார். கண்ணபிரானது சிலம்போசை அவருக்கு வழிகாட்டியது. அனந்தங்காடு வந்தவுடன் அப்பெருமான் அங்கு நின்ற ஒரு பெரிய இலுப்பை மரத்தடியில் மறைந்து போனான். அதுகாறும் கேட்டுவந்த கொத்துச் சதங்கையின் ஒலி முனிவர் காதில் விழவில்லை. கிண்கிணியின் அரவம் கேட்கவில்லை. 'வாதாடி வந்த திருநடையும் வண்ணக் கிண்கிணி ஓசைகளும் ஆதாளி அரவமும் கேட்காமல்' முனிவர் நடுங்கினார்.

அனந்தங்காடு வந்தால் நம் கலி தீருமென்று நினைத்தோமே! இங்கே வந்தபிறகு உள்ளதையும் இழந்தோமே! காதிலே கேட்டுவந்த செஞ்சிலம்போசையும் நின்றுவிட்டதே! என்று தவித்தார். 'கண்ணா! நீ மறைந்துவிட்டாயே! இது என்ன மாயம்?' என்று கதறினார். 'என் கண்ணன் மறைந்த இடம் இதுதான். இங்கேதான் அவனைத் தேடிப் பார்க்கவேண்டும்' என்று எண்ணி சுற்றுமுற்றும் பார்த்தார்.

என்ன ஆச்சரியம்! அங்கே நின்றிருந்த பிரும்மாண்டமான இலுப்பை மரம் படபடவென்று கீழே சாய்ந்தது. அதைப் பார்த்தால் சாமானியமான மரமாகத் தோன்றவில்லை. அது ஏதோ தெய்வப் பரிமளம் வீசி நின்றது. தெய்வ தத்துவத்தைப் புலப்படுத்தி நின்றது.

'இதென்ன அதிசயமாக இருக்கிறதே! இதுவரை காணாத காட்சியாகத் தோன்றுகிறதே! வண்ணங் குலுங்கக் குழந்தையாக வந்த கண்ணனே இந்தத் திருக்கோலம் பூண்டானோ? சின்னஞ்சிறிய உருவத்தை அவமதித்த எனக்கு, பெரிய உருவத்தைக் காட்டத் திருவுள்ளம் பூண்டானோ? என்று எண்ணி உருகி அருகிலே சென்று பார்த்தார் முனிவர். அவர் தம் கண்ணையே நம்ப முடியவில்லை. உடம்பிற் புளகம் போர்த்தது. பகவான் பெரிய வடிவு கொண்டு சயனித்த திருக்கோலத்தோடு அவருக்குக் காட்சி அளித்தான். பத்மநாபன் கிடந்த திருக்கோலம் பார்க்கப் பார்க்கக் கண்ணைப் பறிக்கிறது முனிவருக்கு.

அவர் ஆனந்தம் அடைந்தார். கை குவித்தார். விழுந்தார். புரண்டார். அழுதார். தொழுதார். உருகினார். மறுகினார். 'எம்பெருமானே! உன்னைத் தரிசித்தும் அபிஷேகம் செய்யாமல், மலர் கொய்து பூசிக்காமல், நிவேதனம் பண்ணாமல் வீண் பொழுது போக்குகிறேனே!' என்று வேசாறினார். அங்கே பூஜை பண்ண அவரிடம் என்ன இருக்கிறது?

அப்பொழுது அருகிலுள்ள நகரத்திலிருந்து ஒரு வணிகன் 'ஒற்றை உடுத்து கோடித்துணி போர்த்துப் பெற்றெடுத்த தந்தைக்கு 'பிதுர் கர்மம்' செய்வதற்காக வந்தான். அவன் தன் கையில் அந்தக் கர்மத்தின் பொருட்டுப் பச்சரிசியும் மாங்கனியும் வைத்திருந்தான். முனிவருடைய தோற்றத்தைக் கண்டு, பயபக்தியுடன் அவன் அவருக்கு அவற்றைக் கொடுத்தான். 'அந்தணருக்கு இவற்றையளித்து சிராத்தம் செய்ய எண்ணினேன். இவரைக் காட்டிலும் சிறந்தவர் யார் கிடைக்கப்போகிறார்கள்?' என்ற நினைவோடு அவன் ஈந்தான். 'இதுவும் எம்பெருமான் திருவருட் செயலே!' என்று உவந்து, முனிவர் பச்சரிசியையும் மாம்பழத்தையும் பெற்றுக்கொண்டார். அவற்றையே நிவேதனப் பொருளாக வைத்து அனந்த பத்மநாபனுக்குப் பூஜை செய்தார்.

முனிவர் இவ்வாறு பக்தி செய்து பூசை புரிந்து இறுதியில் மாயை நீங்கிப் பத்மநாபன் திருவடியில் ஐக்கியமானார். அவருக்காகத் தோன்றிய பத்மநாபன் இன்றும் திருவனந்தபுரத்திலே எல்லா மக்களும் கண்டு இன்புறும்படி அறிதுயிலில் அமர்ந்து விளங்குகிறான். முன்பு பகவான் 'திருவனந்தூர் முடி தாழ்த்தித் திருப்பாலூர் கால் நீட்டிக் கிடந்தாராம். பிறகு குறுகி மூன்று வாயிற்படியிலிருந்து காணும் உருவத்தோடு காட்சி அளிக்கிறாராம். இன்றும் சந்நியாசி பூசையை நினைத்து பச்சரிசியும் மாங்கனியும் வைத்துப் பத்மநாபனுக்கு நிவேதனம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நடக்கிறது.

Thursday, May 17, 2007

அவன் வருவானா? - ஒரு தாயின் ஏக்கம்!

இன்று (18/ 05/ 2007) எங்களின் 52-வது திருமணநாள் முடிந்து 53-வது திருமணநாள் ஆரம்பிக்கிறது.
எங்கள் திருமணம் நடந்தது 1955-ஆம் வருடம் மே மாதம் 18-ஆம் தேதியில். திருமணத்துக்கு முந்தைய நிகழ்வான மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியே ஒரு சுவாரஸ்யமான நிகழ்வுதான்.

லால்குடியில் நிகழ்ந்த இந்தத் திருமண விழாவில், மாப்பிள்ளை அழைப்புக்கு மாப்பிள்ளை வந்து சேர்ந்த நேரத்தைக் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். நள்ளிரவைத் தாண்டி 2 மணி அளவுக்கு மாப்பிள்ளையாகிய என் கணவரை லால்குடிக்கு முந்தைய ஸ்டேஷனான வாலாடியில், ரயில் நின்றதும் மாப்பிள்ளை யார், மாப்பிள்ளை யார்? என என் சித்தப்பா கேட்டு அழைத்து வந்தார். காரணம், அப்போது வீசிய புயல். அப்போது அடித்த புயல்போல இதுவரையில் என் வாழ்நாளில் வேறு புயலைப் பார்த்ததில்லை.

மாப்பிள்ளை அழைப்பு தினத்தன்று காலையிலேயே அவர்கள் வந்துவிடுவார்கள் என்று சாப்பாடெல்லாம் செய்துவைத்திருக்க, மறுநாள் காலைதான் வந்துசேர்ந்தனர். என் அப்பாவோ அதற்குள் முருகனிடம், 'முருகா! என் பொண்ணு கல்யாணத்தை தடங்கலில்லாம நடத்தி வை. தாலி கட்டியவுடன், பொண்ணு மாப்பிள்ளையை பழனிக்கு அழைச்சுட்டு வர்றேன்' என வேண்டியதுடன், முன்னரே பிள்ளையாருக்கு சதுர் தேங்காய் விட்டு, குலதெய்வமான பழநி முருகனுக்கு மஞ்சள் துணியில் எசஞ்சு முடிந்துவைத்தார். அதன்படியே முருகனின் கருணையால் மழை நின்றுவிட, திருமணம் இனிதே நடைபெற்றது.

திருமணம் முடிந்தவுடன் பழநி தண்டாயுதபாணியைத் தரிசித்து பிரார்த்தனையை நிறைவேற்றினோம். அதன்பின்னர் ஒரு வருடத்தில், 1956-ஆம் வருடம் டிசம்பர் திங்கள் 14-ஆம் நாள் எங்களுக்கு மகன் பிறந்தான். கார்த்திகேயன் எனப் பெயரிட்டோம். அவனுக்கு பரணி நட்சத்திரம். அவன் பிறந்து ஒரு வருடம் நிறைவதற்குள் எட்டு மாதத்திலேயே என் கணவருக்கு டி.பி. எனக் கேள்வியுற்ற என் அப்பா, அப்போதைய அந்த அதிர்ச்சியிலேயே மூளையில் ரத்தக்குழாய் வெடித்து இவ்வுலக வாழ்வினின்று விடைபெற்றார். அப்போது நான் என் தந்தையின் பக்கத்தில் இல்லை. புகுந்த வீட்டில் இருந்தேன். நான் செல்வதற்குள் எல்லாம் முடிந்து, கடைசியாக முகத்தை மட்டும் பார்த்து வந்தேன்.என் தந்தையைப் பற்றி எப்போது நினைத்தாலும், இந்நிகழ்ச்சியை என்னால் மறக்க இயலாது. தீவிர முருக பக்தரான அவர், 'நகர்' கிராமத்துக் கோயிலின் டிரஸ்டியாக இருந்தார். நான்கு பெண் குழந்தைகள், நான்கு ஆண் குழந்தைகள். மூத்தவள் நான்தான். வீடு, வாசல், தோட்டங்களுடன் வாழ்ந்த அந்த வாழ்க்கையை எண்ணுகையில், பசுமையான நினைவுகளே மனவெளியில் பட்டாம்பூச்சியாகின்றன.

03.05.1960-ல் இரண்டாவது மகன் மகாலிங்கம் பிறந்தான். இவன் பிறந்த சில மாதங்களுக்குப் பின்னரே, நாங்கள் சென்னைக்குக் குடிபெயர்ந்தோம். என் கணவருக்கு, தேனாம்பேட்டையிலுள்ள டைரக்டர் ஆஃப் மெடிக்கல் சர்வீஸில் வேலை. வேலை காரணமாக, அடிக்கடி அவர் வெளியூர்களுக்குச் சென்றுவிடுவார்.

சென்னைக்கு வந்தபின்னர் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். என் கணவருக்கு வந்த சம்பளத்தில், என் வீட்டை மட்டும் கவனிப்பது என்றால் பரவாயில்லை. அப்போது வேலையில்லாத உறவினர்கள் வீட்டுக்கும் உதவவேண்டி இருந்ததால், மிகவும் சிரமப்பட்டோ ம். இது சில ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நீடித்தது. பொதுவாகவே உறவினர்களுக்கு உதவும் இரக்க சுபாவம் எங்கள் கூடவே பிறந்தது என்பதால், குடும்பம் நடத்துவதற்கு பட்ட அவஸ்தையை தனியே சொல்லவேண்டியதில்லை. ஆனால், என்னதான் உதவி செய்தாலும் உதவி பெறுபவர்கள் அதை நினைத்துப் பார்ப்பதில்லையே! உயர்நிலைக்கு வந்தவுடன், ஒரு காலகட்டத்தில் எல்லாவற்றையும் சுலபமாகத் துடைத்தெறிந்துவிடுகிறார்கள்.

இந்நிலையில் மூன்றாவது மகனின் ஜனனம், சென்னையில் 20.11.1968-ல் நிகழ்ந்தது. மூன்றாவதும் மகனாகப் பிறக்க, என் கணவரைப் பொறுத்தவரையில், அவர் இதை விரும்பவில்லை. எனவே, ஆஸ்பிடலுக்கு வந்து எட்டிப் பார்க்கக்கூட இல்லை. பெண்ணாகப் பிறந்தால் நன்றாக இருக்கும் என அவர் ஆசைப்பட்டார். நாம் ஆசைப்பட்டபடியா எல்லாம் நடக்கிறது?

மூன்றாவதும் மகனாகப் பிறந்ததைக் கண்டு பொறுக்காமல் உறவில் ஒருவர், 'உனக்கு என்னடி! கொடுத்து வச்சவ நீ. மூணும் பிள்ளையா பிறந்திருக்கு. யோகம்தான் போ!' எனக் கூறினார். எந்த வேளையில், என்ன நினைத்து அவர் அப்படிக் கூறினாரோ! ஆனால், எப்போது இதை நினைத்தாலும் கோபம்தான் வருகிறது. என்ன செய்ய? காலச் சுழற்சியில், வாழ்க்கை வெள்ளத்தில் என்னவெல்லாம் நிகழ்ந்துவிடுகிறது?

இரண்டாமவனுக்குத் திருமணம் நடந்து, அவனுக்கு ஒரு பெண் குழந்தையும் ஆண் குழந்தையும் உள்ளனர். கடைசி மகனும் ஏதோ வாழ்ந்து வருகிறான். ஆனால், எனது எண்ணமெல்லாம் மூத்தவனைச் சுற்றியேதான். அவன் தீவிர ஆஞ்சநேய பக்தன்.

இரண்டாமவன் படித்துக்கொண்டே பள்ளியின் இடைவேளையில் இட்லி, வடை என செய்துகொடுத்ததை விற்று வாழ்க்கை நடத்த உதவினான். இதனாலேயே, அவன் பள்ளிப்படிப்பு பாழாகிப் போயிற்று. ஆனாலும், வாழ்க்கையில் அவனை அதுவே காப்பாற்றி வருகிறது. என்றாலும், அவனுக்கு இந்த வேலை கிடைக்க காரணமானவன் மூத்தவனே. மூத்தவன் அவனது நண்பர் மூலமாக, அப்போது தற்காலிகமாகச் சேர்த்துவைத்த வேலையே கடைசியில் இரண்டாமவனுக்கு நிரந்தரமாகிப் போனது.

மூத்தவன் வீட்டிலிருந்த சமயங்களில் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். அப்போதெல்லாம் ஆழாக்கு பால் நாலணாதான். அந்தக் காசைக் கொடுத்து பால் வாங்குவதற்கே அப்போதெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறோம். சமயத்தில் காபி நான் குடிக்கும்போது, 'அம்மா! இன்னும் கொஞ்சம்மா எனக்கு!' என மென்னியைப் பிடிக்காத குறையாகக் கேட்பான் மூத்தவன். நானும் கொடுத்தவாறே, 'எப்போதடா கார்த்தி, நம்ம கஷ்டமெல்லாம் விடியும்?' என ஆற்றாமையோடு கேட்பேன். அதற்கு அவன், 'நான் போனதுக்கப்புறம் எல்லோரும் நல்லா இருப்பீங்க!' என்பான். வேதவாக்குதானோ அது என இப்போது எண்ணத் தோன்றுகிறது.

13-10-1980-ல் திங்கட்கிழமை பர்ஸ்ட் ஷிப்ட் வேலையை முடித்துவிட்டு வந்தவனுக்கு, தட்டை எடுத்துவைத்து சாதம் போடப் போக, 'இப்பப் போடாதம்மா. பக்கத்துல என் நண்பனைப் பார்க்கப்போறேன். வந்தப்புறம் போடு!' எனச் சொல்லிச் சென்றவன்தான். அதன்பின்னர் வரவேயில்லை. காணாமல் போய்விட்டான். நாங்களும் பல இடங்களில், பலவிதங்களில் முயற்சி செய்தோம். பலன்தான் இல்லை. உறவினர் ஒருவர் இன்னொரு உறவினர் வீட்டில் நான் கார்த்தியைப் பார்த்தேன் எனக்கூற, அங்கு சென்று விசாரித்தால், அவர்கள் வரவே இல்லை எனக் கைவிரித்தாலும் அவர்கள் வீட்டுக் குழந்தை ஒன்று, 'அண்ணா வந்துட்டுப் போனானே!' எனக்கூற, அவர்கள் வேறுவிதமாக மழுப்பி
அனுப்பினார்கள். உறவுகளே இப்படியென்றால் வேறு எங்குபோய் முட்டிக்கொள்ள?அவன் காணாமல் சென்று 26 வருடங்கள் ஓடிவிட்டன. இந்த 26 வருடத்தில் எத்தனையோ நிகழ்வுகள் நிகழ்ந்துவிட்டன. என்றாலும், தாயுள்ளம் தவிக்கத்தான் செய்கிறது. எனது தம்பிகளில் இருவரும், தங்கை மகனும் இவ்வுலக வாழ்விலிருந்து விடைபெற, அவர்களுக்கான கடைசி காரியங்களையும் என் கணவர்தான் மூன்னின்று செய்தார். இந்நிகழ்வுகளையெல்லாம் எண்ணுகையில், 'நாம் உயிரோடு கொடுத்திருக்கிறோமே! அவன் எங்கிருக்கிறான்? நம் நினைவுகள் அவனுக்கு அறவே இல்லையா? என்னதான் ஆயிற்று அவனுக்கு?' என்ற கேள்விகள் நெஞ்சக்குகையை குத்திக் கிளறிக்கொண்டுதான் உள்ளன. அவன் பம்பாயில் இருக்கிறான், நான் அவனை அங்கு பார்த்தேன் என்றும் சிலர் கூறுகிறார்கள். எங்கள் வீட்டுக்கு வந்துசெல்லும் குருஜியும் அவன் பம்பாயில்தான் இருக்கிறார் என்கிறார். அவன் எங்கு வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். இந்தத் தாயை வந்து பார்த்துச் செல்லக் கூடாதா? என்றுதான் என் மனம் ஏங்குகிறது.

இக்கட்டுரையை இந்த பிளாக்கில் படிக்கும் அன்பு உள்ளங்களில் எவருக்காவது விவரம் தெரியவந்தால், அவசியம் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

- நாகலெக்ஷ்மி ராமகிருஷ்ணன், சென்னை.

Saturday, April 21, 2007

கருணை மழை பொழியும் காரணீஸ்வரர்!சித்திரைப் பெருவிழா 22.04.2007 - 01.05.2007

அறுபத்து மூவர் உற்சவம் 29.04.2007 ஞாயிறன்று மாலை நடைபெற உள்ளது.

'தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!' என்ற வாக்கிற்கிணங்க, அந்த காருண்ய ஈசன் திருக்காரணி என அழைக்கப்படும் ஸ்தலத்திலே, ஜீவர்களாகிய நம்மை சிவமேயாக்கும் பொருட்டு, தொண்டை நாட்டில் சைதாப்பேட்டை என்றழைக்கப்பெறும் சைதை எனும் ஊரிலே நடுநாயகமாக காரணீஸ்வரர் என்ற நாமம் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இறைவனின் ஒவ்வொரு நாமங்களும் ஒவ்வொரு தனிச்சிறப்பைக் கொண்டவை. 'காரணீஸ்வரர்' என்ற நாமத்திற்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. அச்சிறப்பை இக்கோயிலின் ஸ்தல வரலாறு விளக்குவதுடன், மேலும் சில சுவையான புராணச் செய்திகளையும் சொல்கிறது. அதனைக் காண்போம்.

காமதேனு என்ற தெய்வப் பசுவை, இந்திரன் வசிஷ்டருக்காக ஒரு மண்டல காலத்திற்கு அதை அவருடன் அனுப்பிவைத்திருந்தான். ஒரு மண்டலம் கடந்தும் அப்பசு வரவில்லை. எனவே, இந்திரன் வருத்தமுற்றான். தன் சபையிலுள்ள மூத்தோர்களிடம் தன் வருத்தத்தைக் கூற, அதில் ஒரு முனிவர் இந்திரனை நோக்கி, 'மன்னா! உமது காமதேனு வசிஷ்டரின் பூஜைக்கு இடையூறு விளைவித்ததால், அவர் கோபமுற்று நீ காட்டிற் சென்று சஞ்சரித்து என் பூஜைக்கு இடையூறு விளைவித்ததால், நீ காட்டுப் பசுவாகப் போ!' எனச் சபித்துவிட்டார். அதனால்தான் காமதேனு இங்கு திரும்பவில்லை. அது இப்போது, காட்டுப் பசுவாக சஞ்சரித்து வருகிறது எனத் தெரிவிக்க, இந்திரன் அம்முனிவரிடமே அதை தான் மீண்டும் அடைவதற்கான வழிமுறைகளைக் கேட்டான்.அம்முனிவரும் இந்திரனிடம், பூலோகத்தில் வெகுவாகக் கொண்டாடத்தக்க தொண்டை மண்டலத்துள், மயிலை மாநகர எல்லைக்கும் திருவான்மியூர் எல்லைக்கும் நடுமத்தியில், மேற்கே சில கடிகை தூரத்தில் 'நீ சோலை ஒன்றை உண்டாக்கி அச்சோலைக்குள் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருவாயானால் உனது காமதேனுவை அடையலாம்!' என்று வழிகூறி அருளினார்.

அம்முனிவர் கூறியவாறே, இந்திரன் தன் வாகனமாகிய மேகங்களை அழைத்து, அவற்றிடம் அந்த முனிவர் குறிப்பிட்ட இடத்திலே அணிதிரண்டு மழையைப் பெய்வித்து அந்த இடத்தை குளுமைப்படுத்துமாறு கட்டளையிட்டான். மேகங்கள் (கார் - மேகம்) அணி (அணி - ஒன்றுதிரண்டு) திரண்டு, அக்குறிப்பிட்ட இடத்திலே மழையைப் பெய்வித்து அவ்விடத்தைச் சோலையாக்கின. அதன்பின்னர், இந்திரன் அச்சோலைக்குள் தங்கி சிவலிங்கத்தை நிறுவி, அதற்கு மேற்குப் புறத்திலே தடாகம் ஒன்றை உண்டாக்கி, நாள்தோறும் காலம் தவறாமல் பூஜை செய்துவந்தான். அப்பூஜையில் நெகிழ்ந்த ஈசன், இந்திரன் முன் தோன்றி, 'நீ விரும்பியவண்ணமே காட்டுப் பசுவாக மாறியுள்ள காமதேனுவை, காமதேனுவாக மாற்றி உம்மிடம் அனுப்பி வைப்போம்' என்று கூற, பரவசப்பட்ட இந்திரன் அவரைப் பலவாறாகத் தோத்தரித்து வணங்கினான்.

ஈசன் இந்திரனிடம், 'மேகங்களைத் திரளச்செய்து இங்கு என்னைப் பிரதிஷ்டித்து வணங்கியபடியால், இத்தலம் 'காரணி' என எக்காலத்தும் வழங்கப்படும். நீ நிர்மாணித்த இந்த தீர்த்தத்திற்கு 'கோபதி சரஸ்' என்ற பெயரால் சிறப்பு பெறும்!' என ஆசீர்வதிக்க, மனமகிழ்ந்த
இந்திரன்இறைவனிடம், 'இத்தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, கிரமப்படி உன்னை அர்ச்சித்து வணங்குபவர்களுக்கு அஷ்ட ஐஸ்வரியங்களையும் தந்து நித்தியானந்த வாழ்க்கையை அருளவேண்டும்!' என வேண்டினான். 'அவ்விதமே தருகிறோம்!' என ஈசன் வரமளித்தார்.காரணீஸ்வரரிடம், பிரம்மா தனது சிருஷ்டி தண்டத்தைப் பெற்ற கதையையும் இத்தல வரலாறு விவரிக்கிறது. அதையும் காண்போம்.


முன்பொரு சமயம், ஸ்ரீதேவிக்கும் சரஸ்வதி தேவிக்கும் இடையில் உலகத்தில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் அதிகம் கருணை புரிபவர்கள் யார் என்ற வாக்குவாதம் நிகழ்ந்தது. இதற்குத் தீர்வு காண இருவரும் தேவர் தலைவன் இந்திரனிடம் செல்ல, தேவேந்திரனோ 'ஸ்ரீதேவிதான் கருணை புரிவதில் சிறந்தவர்!' என்று கூறினான். இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி இந்திரனை நோக்கி, 'உன்னிடமிருக்கும் சங்கநிதி பதுமநிதி எல்லாவற்றையும் இழந்து மதயானையாக மாறித் திரிவாய்!' என்று சபித்தாள். இதனால் மனம் நொந்த இந்திரன் ஸ்ரீதேவியிடம், 'உம்மைப் புகழ்ந்ததனால் அல்லவோ எனக்கு இந்த நிலை!' என்று வேதனைப்பட்டான். அதற்கு ஸ்ரீதேவி இந்திரனிடம், 'நீ, பூலோகத்திலுள்ள காஞ்சி நகருக்குச்
சென்று தவம் செய்! ஸ்ரீமந் நாராயணமூர்த்தியின் அருளால், இழந்த எல்லாவற்றையும் நீ திரும்பப் பெறுவாய்! என திருவாய் மலர்ந்தருளினாள்.

இந்திரன் தந்த தீர்ப்பில் நிறைவுறாத சரஸ்வதி, 'வா, சத்தியலோகம் போவோம்! அங்கு என்ன தீர்ப்பு கிடைக்கிறது எனப் பார்ப்போம்!' எனக் கூறி, சத்தியலோகத்திலிருக்கும் பிரம்மதேவரின் தீர்ப்பை நாடிச் சென்றாள். அங்கும் பிரம்மதேவர், 'ஸ்ரீதேவிதான், கருணை புரிவதில் தலைசிறந்தவள்!' என்று கூறிவிட, மீண்டும் கோபம் கொண்டாள் சரஸ்வதி. பிரம்மன் அவள் கணவன். ஆதலால், 'உம்மை யான் சபிக்க நியாயமில்லை!' என்று கூறி,
படைப்பின் அம்ஸமான பிரம்மாவின் சிருஷ்டி தண்டத்தைப் பிடுங்கிக்கொண்டு பூலோகத்துக்குச் சென்றுவிட்டாள்.

பிரம்மா ஸ்ரீதேவியிடம், 'உண்மையை எடுத்துரைத்ததால், நான் என் தண்டத்தை இழக்க நேர்ந்தது. எனவே, நீங்களே அதைப் பெறுவதற்கான வழியைக் கூறி அருளவேண்டும்!' எனத் திருமகளிடம் வேண்டினார். ஸ்ரீதேவியும் பிரம்மாவிடம், 'இந்திரனால் ஸ்தாபித்து பூஜிக்கப்பட்ட காரணீஸ்வரரை, நீங்கள் பூலோகத்துக்குச் சென்று பூஜித்து வாருங்கள். உமது சிருஷ்டி தண்டம் மீண்டும் உங்களுக்குக் கிடைக்கும்!' எனக் கூற, அதன்படியே பிரம்மாவும் இத்தலத்திற்கு வந்து நிலத்தை சீர்ப்படுத்தி, காரணீஸ்வரருக்கு கிரமப்படி பத்து நாள் உற்சவ கைங்கரியம் செய்தார். பிரம்மாவின் வழிபாட்டில் மனம் மகிழ்ந்த காரணீஸ்வரர் அவர்முன் தோன்றி, 'நீவீர், காஞ்சி நதி தீரத்தை அடைந்து யாகம் ஒன்றை செய்தீர்களானால், ஸ்ரீமந்
நாராயணமூர்த்தியின் அருளால் உங்களது சிருஷ்டி தண்டத்தைப் பெறுவீர்கள்!' என வரமருளினார்.

பிரம்மனால் பூஜிக்கப்பட்ட அந்த பத்து நாள் உற்சவ கைங்கர்யமே, பிரதி வருடம் சித்திரை மாத சுக்கில பட்ச பஞ்சமி திதியில் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் உற்சவம் ஆரம்பித்து, சதுர்த்தசி திதியில் பூர்த்தியாகும்.
இவ்வருட சித்திரைப் பெருவிழா 22.04.2007 அன்று கொடியேற்றத்தோடு தொடங்குகிறது. இவ்விழாவில் மிக முக்கியமாகப் பார்க்கவேண்டியவை வெள்ளி ரிஷப வாகனக் காட்சியும், அறுபத்து மூவர் உற்சவமும். வெள்ளி ரிஷப வாகனக் காட்சியை 26.04.2007 அன்று இரவு 12 மணி வாக்கில் தரிசிக்கலாம். அறுபத்து மூவர் உற்சவத்தை 29.04.2007 ஞாயிறன்று மாலை காணலாம்.

இனி திருக்கோயிலுக்குள் செல்வோம்.

முதலில் ராஜகோபுரம். திருக்காரணீஸ்வரம் என்ற பெயர் தாங்கிய அந்த வானளாவிய ராஜகோபுரம் நம்மை 'வா, வா!' என்று அழைக்கிறது. ராஜகோபுரத்தை அண்ணாந்து பார்த்தவாறே 'சிவ சிவ' என்ற மகாகாரண பஞ்சாக்கரத்தை உச்சரித்துக்கொண்டு உள்ளே நுழைகிறோம். கோபுரவாயில் வழியே உள் நுழைகையில், நேர் எதிரில் நடராஜரின் உருவச்சிலை. கோபுர நுழைவாயிலின் உள் வாயிற்படியில், இருவர் வணங்குவது போன்ற
உருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதைக் காண்கிறோம். அது ஆதொண்ட சக்ரவர்த்தியும், அவரது துணைவியாரும் என்று கூறுகிறார்கள். இச்சக்ரவர்த்தியே காரணீஸ்வரருக்கு விதிப்படி கர்ப்பக்கிரகம், அந்தராளம், அர்த்தமண்டபம் மற்றும் மகாமண்டபங்களைக் கட்டியதோடு, சுற்று மதில்களையும் எழுப்பினாராம். மேலும், மற்ற திருப்பணிகளான கோபதி சரஸின் கரைகளைப் புதுப்பித்தும், நித்திய உற்சவ நைவேத்தியாதிகளை நியமித்தும் பூஜித்து வந்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது.

ராஜகோபுரத்தின் வழியே உள்ளே சென்று வலப்பக்கமாகச் சென்றால், கொடிமரத்தை அடையலாம். கொடி மரத்தின் கீழே வடக்குப் பக்கமாகப் பார்த்து நமஸ்கரித்து இடப்பக்கம் பார்வையைத் திருப்பினால், கொடிமர விநாயகர் அமர்ந்த நிலையில் அருள்பாலிப்பதைக் காணலாம். அவரை வணங்கி மேற்குப் புறமாகக் சென்றால், கன்னி மூலையிலும் ஒரு விநாயகர். அவரை வணங்கி வலம் வந்து, அதையொட்டினாற்போன்று காணப்படும்
மண்டபத்தின் வழியே உள்ளே நுழைந்தால், கோபுர வாயில் வழியாக வந்தபோது தரிசித்த நடராஜர் இப்போது மிக அருகில் காட்சி தருகிறார்.

அந்த நடராஜர் அமைந்திருக்கும் உள் மண்டப வழியே நுழைந்தால், இடப்பக்கம் கிழக்கு திசையை நோக்கியவண்ணம் லிங்க வடிவில் காரணீஸ்வரர், தம்மை நாடிவரும் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். அவரை வணங்குவதற்கு முன்பாக, வாயிற்காப்பாளர்களாக விளங்கும் துவார பாலகர்களிடம் இறைவனை வணங்குவதற்கு அனுமதி தாருங்கள் என்று வேண்டி, பின்னர் காரணீஸ்வரரை வணங்குகிறோம். இந்திரனுக்கு வாக்களித்தபடி, 'உன்னை நாடி வந்திருக்கும் எங்களுக்கும் நித்தியானந்த வாழ்வைத் தாருமய்யா!' என வேண்டி உட்பிரகாரத்தை வலம் வருகிறோம். உட்பிராகாரத்தை வலம் வருகையில், 63 நாயன்மார்களின் திருவுருவச் சிலைகளையும், தட்சிணாமூர்த்தியையும், நாராயணரையும், பிரும்மாவையும், சண்டிகேஸ்வரரையும், சந்திரசேகரரையும், ஆறுமுகக் கடவுளையும், பிட்சாடன மூர்த்தி, துர்க்கை, நடராஜர் மற்றும் பைரவ மூர்த்தியின் திருவுருவச் சிலைகளையும் கண்டு
வணங்குகிறோம். சிவ தியானத்திலேயே இருக்கும் சண்டிகேஸ்வரருக்கு அருகில் வரும்போது, அவரிடம் கை தட்டி தொந்தரவு செய்யாமல், சொடக்கு போட்டு அவமதிக்காமல், அவர்மேல் நீங்கள் அணிந்திருக்கும் ஆடையின் நூலைப் பிய்த்துப் போடாமல், அமைதியாக அவரருகே சென்று சிவ தரிசனப் பலனைத் தந்தருளுமாறு வேண்டுகிறோம்.

பின்னர், பைரவரை அடுத்து உட்பிரகாரத்திலேயேயுள்ள அருள்மிகு காரணீஸ்வரர் உடனுறையும் சொர்ணாம்பிகையைத் தரிசிக்கிறோம். அபய வரத முத்திரைகளோடு நின்ற கோலத்தில் திகழும் சொர்ணாம்பிகையின் திருக்கோலம் நம் உள்ளத்தை நெகிழ வைக்கிறது. 'சின்னஞ்சிறு பெண்போலே' என்ற பாடல்வரிகளுக்கு ஏற்றாற்போலவே அம்பிகையின் திருவுருவம் அழகுற அமைந்துள்ளது. அந்த அழகுத் தோற்றத்தில் மனம் லயித்து, நம் பாவ
மனத்தைத் தொலைத்து வெளிவருகையில், அம்பிகையின் உட்பிரகாரத்திலேயே சூரியனுக்கும் சிலை அமைத்துள்ளதைக் காண்கிறோம்.

சொர்ணாம்பிகையைத் தரிசித்து கொடிமரம் நோக்கி வெளியேறும் வழியில், பக்கத்தில் சுப்பிரமணியரின் சிலையையும் காண்கிறோம். சுப்பிரமணியரின் சிலையைக் கடந்தவுடன் உள்ளடங்கியிருக்கும் வேதகிரீஸ்வரர் உடனுறை திரிபுர சுந்தரியின் தெவிட்டாத திருவுருவங்களும் நம் மனத்தை கொள்ளை கொள்கின்றன.

கொடிமரத்தினைப் பிரதானமாகக் கொண்டு வெளிப்பிராகாரத்தை வலம் வருகையில் பழனி ஆண்டவர், ஆஞ்சனேயர், நவகிரகங்கள், அகோர வீரபத்திரர், வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணியர் மற்றும் சனீஸ்வரருக்கும் தனித்தனி ஆலயங்கள் இருப்பதைக் காண்கிறோம். அவர்களையும் மனம் ஒன்றி வணங்குகிறோம்.

கொடிமரத்துக்கு நேர் எதிரே நந்தவனமும், அருகிலுள்ள பிரதான மண்டபத்தில் காரணீஸ்வரர் உடனுறை சொர்ணாம்பிகையின் உற்சவச் சிலைகளைக் கண்டு வணங்குகிறோம்.

இந்திரனாலும் பிரம்மனாலும் பூஜிக்கப்பெற்ற இத்தல ஈஸ்வரர், மகாபாரதப் போரினால் அர்ச்சுனனுக்கு ஏற்பட்ட அத்தி தோஷங்களையும் நீக்கியவர்.மேலும், சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் கன்னட தேசத்திலே விப்பிரர் குலத்திலே அவதரித்து சிறுவயது முதலே சிவ சிந்தனையில் இருந்துவந்த குருலிங்க சுவாமிகளுக்கும் தன் அருளை வழங்கியவர். அவரை இத்தலத்துக்கு வரவழைத்த ஈசன், அவரது சிவத்தொண்டில் மகிழ்ந்து அவர் கையிலேயே லிங்கமாகி அவரை ஆட்கொண்டருளினார் என்றும் கூறுவர்.

குருலிங்க சுவாமிகளின் சமாதி, காரணீஸ்வரர் கோயில் அமைந்துள்ள அதே காரணீஸ்வரர் தெருவில் மகாத்மா காந்தி நூல் நிலையத்தை அடுத்து அமைந்துள்ளது. ஈசனைத் தரிசிக்கவரும் பக்தர்கள் அவரது அடியாரையும் அவசியம் தரிசனம் செய்தல் நலம்.

Tuesday, April 17, 2007

சமயபுரம் மாரியம்மன் தேர்த் திருவிழா - 17/04/2007.


கண்ணனூர், கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றெல்லாம் அழைக்கப்படும் சமயபுரம் ஸ்ரீமாரியம்மனுக்கு சித்திரை பிரம்மோற்சவ விழாவில் இன்று திருத்தேர் விழா. ஆடிமாதம், தைமாதம், நவராத்திரி இவைகளெல்லாம் விசேஷமெனில் மாசி மாதம் வரும் பூச்சொரிதல் விழாவோ அம்மனுக்கு மிகமிக விசேஷமானது.

சக்தி வழிபாட்டிற்குரிய ஸ்தலங்கள் பலவற்றில் தமிழகத்திலே 'சாய்ஞ்சா கண்ணபுரம், சாதிச்சா சமயபுரம்' எனும் வாக்கிற்கிணங்க பிரத்யட்ச தெய்வமாக தன் கண்ணசைவினாலேயே லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்த்தவண்ணம் காவிரி நதி பாயும் சோழ நாட்டிலே திருச்சியிலிருந்து வடக்கே 6 கி.மீ. தொலைவிலுள்ள கண்ணபுரம் எனப்படும் சமயபுரத்திலே அமர்ந்த நிலையிலுள்ள எழிற்கோலத்திலே அழகுறக் காட்சி தருகிறாள் சமயபுரம் ஸ்ரீமாரியம்மன்.

'சாதிச்சா சமயபுரம்' எனும் பெருவாக்கிற்கிணங்க, சமயபுரத்திலே தனக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஸ்ரீமாரியம்மனின் லீலா வினோதத்தைச் சற்றே காண்போமா!

விஜயநகர அரசுக்குத் தளர்ச்சி நேர்ந்தபோது விஜயநகர மன்னர்களால் வழிபாடு செய்யப்பெற்றுவந்த ஸ்ரீமாரியம்மன் உற்சவர் சிலையைத் தங்கப் பல்லக்கில் தூக்கிக்கொண்டு ஊர்வலமாக வந்தனராம். அவ்விதம் ஊர்வலமாக வந்தவர்கள் உணவு உட்கொள்ள வேண்டி சமயபுரத்தில் ஸ்ரீமாரியம்மனை இருத்தினர். உணவு உட்கொண்ட பின்னர் மாரியம்மனைத் தூக்க முயன்று முடியாமற்போகவே வருந்தினராம். தனக்குரிய இடம் இதுவே என்று அன்னையே சமயபுரத்தில் நிலைத்த பின்னர் விஜயரெங்க சொக்கநாத நாயக்கர் (கி.பி.1706-1732) அவரது காலத்தில்தான் அன்னைக்குத் தனிக்கோயில் அமைத்துப் பிரதிஷ்டை செய்தாரென்றும் சொல்லப்படுகிறது.

இந்த விஜயரெங்க சொக்கநாத நாயக்கரிடம்தான் மௌனகுருவை குருவாகக் கொண்டு வாழ்ந்த தாயுமான சுவாமிகள் கணக்கராக இருந்தார். பின்னர் துறவு பூண்டார்.

விஜயரெங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில்தான் விறலிவிடு தூது, கூளப்ப நாயக்கன் காதலை இயற்றிய சுப்ரதீபக் கவிராயர் வாழ்ந்தார். சுப்ரதீபக் கவிராயரிடம்தான் வீரமா முனிவர் தமிழ் பயின்றார்.

தமிழ்ப் புலவர்களை ஆதரிக்காது தெலுங்கு மொழிக்கே ஆதரவு தந்து வந்த நாயக்க மன்னர்கள் வாழ்ந்த அந்த காலகட்டத்தில் தமிழ்மொழியை நிலைநாட்ட தாயுமான சுவாமிகள் போன்றோரை தோற்றுவித்தும், சமயத்தை நிலைநாட்ட இதுதான் சமயம் என்று(ம்) சமயபுரத்திலே அமர்ந்திட்ட மாரியம்மனின் லீலா விநோதத்தை என்னவென்று சொல்வது?

கண்ணனூர், கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றெல்லாம் அழைக்கப்படும் சமயபுரம் ஸ்ரீமாரியம்மனுக்கு ஆடிமாதம், தைமாதம், நவராத்திரி இவைகளெல்லாம் விசேஷமெனில் மாசி மாதம் வரும் பூச்சொரிதல் விழாவோ மிகமிக விசேஷமானது. இப்பூச்சொரிதல் விழாவின்போது லட்சக்கணக்கான மக்கள் திரளாக வந்திருந்து ஸ்ரீமாரியம்மனின் மேல் பூவைச் சொரிந்து அம்மனை வழிபடுவர்.

மாசி மாதம் கடைசி ஞாயிறன்று பூச்சொரிதல் உற்சவம் நடைபெறுகிறது. பூச்சொரிதல் நாள் முதல் பங்குனி மாதம் வரை ஒவ்வொரு ஞாயிறன்றும் பூச்சொரிதல் விழா நடைபெறுமாம். பூச்சொரிதல் நாள் முதல் நான்கு வாரங்களுக்கு ஸ்ரீமாரியம்மனுக்குப் பச்சைப் பட்டினி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறதாம்.

பூச்சொரிதல் விழாவின் தாத்பர்யம்: ஊரெங்கும் 'மாரி' போடும் சமயங்களிலே உடம்பில் ஏற்படும் முத்துக்களைத் தானே ஏற்று அந்தப் பூ முத்துக்களை பூப்போல ஸ்ரீமாரியம்மன் உதிர்த்து விடுதலால் உள்ளத்தில் எழும் அந்த நன்றியுணர்வை பக்தர்கள் அந்த மாரியம்மனுக்கு வௌதக்காட்டும் செயலின் வௌதப்பாடே பூச்சொரிதல் விழா.

பூச்சொரிதல் விழாவில் முதல் பூ திருவரங்கம் ஸ்ரீஅரங்கநாதரிடமிருந்து வந்து சொரியப்பட்ட பின்னரே எல்லா ஊர்களிலிருந்தும் வரும் பூக்கள் அம்மனுக்கு பூச்சொரியப்படுகிறது. பூச்சொரிதலுக்கு உதிரிப் பூக்களே பயன்படுத்தப்படுகிறது. சென்னை சிம்சனிலிருந்தும் சமயபுரம் ஸ்ரீமாரியம்மனுக்கு லாரியில் பூக்கள் பூச்சொரிதலுக்கு அனுப்பப்படுகிறதாம். பூச்சொரிதல் உற்சவம் காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை நடைபெறுமாம்.

பூச்சொரிதலில் சொரியப்படும் பூவானது ஸ்ரீமாரியம்மனின் சிரசிலிருந்து போடப்படும். இவ்விழாவில் ஸ்ரீமாரியம்மனின் திருமுகத்தை மட்டுமே காண்பிக்கும் அளவுக்கு அம்மன் பூக்குவியலில் மூழ்கித் திளைப்பாள்.

பூச்சொரிதல் விழாவில் சமயபுரம் ஸ்ரீமாரியம்மனுடன் உடன்பிறந்த சகோதரிகள் அறுவரில் முதல் பூ சமயபுரம் ஸ்ரீமாரியம்மனுக்கே. ஏனெனில் பெரியம்மை போடும் மூத்தவளுக்கு அதை எடுக்கத் தெரியாதாம். சமயபுரம் ஸ்ரீமாரியம்மனே அந்த முத்துக்களை உதிர்த்தலால் முதல் மரியாதை இந்த மாரியம்மனுக்கு என்று சொல்லப்படுகிறது. அடுத்து இரண்டாவது பூ அம்பிலூர் மாரியம்மனுக்கும், மூன்றாவது பூ நார்த்தாமலை மாரியம்மனுக்கும்
கடைசி பூ பெரியம்மை போடும் பெரியவளான பாலக்காடு மாரியம்மனுக்கு என்று சொல்லப்படுகிறது.

இப்பூச்சொரிதல் விழா ஆரம்பமான பின்னர்தான் ஊரெங்கிலுமுள்ள வேம்பு மரங்களிலே வேப்பம்பூவானது அரும்பு கட்ட ஆரம்பிக்குமாம்.

பூச்சொரிதல் விழாவின் முடிவில் சமயபுரம் ஸ்ரீ மாரியம்மனுக்கு சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமையில் தேரோட்டமும், அதற்கடுத்து வரும் வௌ஢ளிக்கிழமையில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. சித்திரை மாதக் கடைசியில் வசந்த விழாவும், வைகாசி மாதம் முதல் தேதியில் பஞ்சபிரகார உற்சவமும் நடைபெறுகிறது.

சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் ஆதிதேவதையான செல்லாயி அம்மன் இங்கு காக்கும் தெய்வமாக ஆதிமுதலே உறைந்திருக்கிறாள். அடுத்து இங்குள்ள குதிரை வீரன் உற்சவர் விழாக் காலங்களில் ஊருக்குள் செல்லு முன்பு குதிரையில் சென்று அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு வருவார்.

வேம்பு மரத்தை ஸ்தல விருட்சமாகக் கொண்டு விளங்கும் இக்கோவிலின் தீர்த்தம் மாரி தீர்த்தம்.

இப்போது சமயபுரம் ஸ்ரீ மாரியம்மனை காண்கிறோம். புன்னகை தவழும் மதிமுகம். தலையில் கிரீடம் தாங்கி ராஜ தோரணையில் ஒரு காலை கீழே இறக்கியும் ஒரு காலை மடித்து வைத்தும் ராஜ ராஜேஸ்வரி போன்று காட்சி தருகிறாள். அவள் காலடியிலோ தோற்றுத் துவண்ட அரக்கர்களின் தலைகள். மடித்து வைத்திருக்கும் காலின் கீழோ அர்க்கர்களின் தலைகளை மாலையாகக் காண்கிறோம். தாயுமான சுவாமிகள் அன்னையை 'மலைவளர் காதலி'யாக

பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி
புராந்தகி த்ரியம்பகியெழிற்
புங்கவி விளங்குசிவ சங்கரி சகஸ்ரதள
புட்பமிசை வீற்றிருக்கும்
நாரணி மனாதீத நாயகி குணாதீத
நாதாந்த சத்தியென்றுள்
னாமமே யுச்சரித் திருமடியர் நாமமே
நானுச்சரிக்க வசமோ
வாரணி சடைக்கடவு ளாரணி யெனப் புகழ
வகிலாண்ட கோடியீன்ற
வன்னையே பின்னையுங் கன்னியென மறைபேசு
மானந்த ரூபமயிலே
வாரணியு மிருகொங்கை மாதர்மகிழ் கங்கை புகழ்
வள மருவு தேவையரசே
வரைராஜ னுக்கிருகண் மணியா யுதித்தமலை
வளர்கா தலிப்பெணுமையே


என்று அவர் உணர்ந்தவாறு பாடுகிறார். பாரதியாரோ,

விண்டு ரைக்க அறிய அரியதாய்
விரிந்த வான வௌதயென நின்றனை;
அண்ட கோடிகள் வானில் அமைத்தனை,
அவற்றில் எண்ணற்ற வேகஞ் சமைத்தனை;
மண்ட லத்தை அணு வணு வாக்கினால்,
வருவ தெத்தனை அத்தனை யோசனை;
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை;
கோல மே! நினைக் காளியென் றேத்துவேன்


என அன்னையை அணுவியக்கமாகவே காண்கிறார். நாமும் அன்னையின் அருள் வேண்டுவோம்.