Saturday, April 21, 2007
கருணை மழை பொழியும் காரணீஸ்வரர்!
சித்திரைப் பெருவிழா 22.04.2007 - 01.05.2007
அறுபத்து மூவர் உற்சவம் 29.04.2007 ஞாயிறன்று மாலை நடைபெற உள்ளது.
'தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!' என்ற வாக்கிற்கிணங்க, அந்த காருண்ய ஈசன் திருக்காரணி என அழைக்கப்படும் ஸ்தலத்திலே, ஜீவர்களாகிய நம்மை சிவமேயாக்கும் பொருட்டு, தொண்டை நாட்டில் சைதாப்பேட்டை என்றழைக்கப்பெறும் சைதை எனும் ஊரிலே நடுநாயகமாக காரணீஸ்வரர் என்ற நாமம் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இறைவனின் ஒவ்வொரு நாமங்களும் ஒவ்வொரு தனிச்சிறப்பைக் கொண்டவை. 'காரணீஸ்வரர்' என்ற நாமத்திற்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. அச்சிறப்பை இக்கோயிலின் ஸ்தல வரலாறு விளக்குவதுடன், மேலும் சில சுவையான புராணச் செய்திகளையும் சொல்கிறது. அதனைக் காண்போம்.
காமதேனு என்ற தெய்வப் பசுவை, இந்திரன் வசிஷ்டருக்காக ஒரு மண்டல காலத்திற்கு அதை அவருடன் அனுப்பிவைத்திருந்தான். ஒரு மண்டலம் கடந்தும் அப்பசு வரவில்லை. எனவே, இந்திரன் வருத்தமுற்றான். தன் சபையிலுள்ள மூத்தோர்களிடம் தன் வருத்தத்தைக் கூற, அதில் ஒரு முனிவர் இந்திரனை நோக்கி, 'மன்னா! உமது காமதேனு வசிஷ்டரின் பூஜைக்கு இடையூறு விளைவித்ததால், அவர் கோபமுற்று நீ காட்டிற் சென்று சஞ்சரித்து என் பூஜைக்கு இடையூறு விளைவித்ததால், நீ காட்டுப் பசுவாகப் போ!' எனச் சபித்துவிட்டார். அதனால்தான் காமதேனு இங்கு திரும்பவில்லை. அது இப்போது, காட்டுப் பசுவாக சஞ்சரித்து வருகிறது எனத் தெரிவிக்க, இந்திரன் அம்முனிவரிடமே அதை தான் மீண்டும் அடைவதற்கான வழிமுறைகளைக் கேட்டான்.
அம்முனிவரும் இந்திரனிடம், பூலோகத்தில் வெகுவாகக் கொண்டாடத்தக்க தொண்டை மண்டலத்துள், மயிலை மாநகர எல்லைக்கும் திருவான்மியூர் எல்லைக்கும் நடுமத்தியில், மேற்கே சில கடிகை தூரத்தில் 'நீ சோலை ஒன்றை உண்டாக்கி அச்சோலைக்குள் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருவாயானால் உனது காமதேனுவை அடையலாம்!' என்று வழிகூறி அருளினார்.
அம்முனிவர் கூறியவாறே, இந்திரன் தன் வாகனமாகிய மேகங்களை அழைத்து, அவற்றிடம் அந்த முனிவர் குறிப்பிட்ட இடத்திலே அணிதிரண்டு மழையைப் பெய்வித்து அந்த இடத்தை குளுமைப்படுத்துமாறு கட்டளையிட்டான். மேகங்கள் (கார் - மேகம்) அணி (அணி - ஒன்றுதிரண்டு) திரண்டு, அக்குறிப்பிட்ட இடத்திலே மழையைப் பெய்வித்து அவ்விடத்தைச் சோலையாக்கின. அதன்பின்னர், இந்திரன் அச்சோலைக்குள் தங்கி சிவலிங்கத்தை நிறுவி, அதற்கு மேற்குப் புறத்திலே தடாகம் ஒன்றை உண்டாக்கி, நாள்தோறும் காலம் தவறாமல் பூஜை செய்துவந்தான். அப்பூஜையில் நெகிழ்ந்த ஈசன், இந்திரன் முன் தோன்றி, 'நீ விரும்பியவண்ணமே காட்டுப் பசுவாக மாறியுள்ள காமதேனுவை, காமதேனுவாக மாற்றி உம்மிடம் அனுப்பி வைப்போம்' என்று கூற, பரவசப்பட்ட இந்திரன் அவரைப் பலவாறாகத் தோத்தரித்து வணங்கினான்.
ஈசன் இந்திரனிடம், 'மேகங்களைத் திரளச்செய்து இங்கு என்னைப் பிரதிஷ்டித்து வணங்கியபடியால், இத்தலம் 'காரணி' என எக்காலத்தும் வழங்கப்படும். நீ நிர்மாணித்த இந்த தீர்த்தத்திற்கு 'கோபதி சரஸ்' என்ற பெயரால் சிறப்பு பெறும்!' என ஆசீர்வதிக்க, மனமகிழ்ந்த
இந்திரன்இறைவனிடம், 'இத்தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, கிரமப்படி உன்னை அர்ச்சித்து வணங்குபவர்களுக்கு அஷ்ட ஐஸ்வரியங்களையும் தந்து நித்தியானந்த வாழ்க்கையை அருளவேண்டும்!' என வேண்டினான். 'அவ்விதமே தருகிறோம்!' என ஈசன் வரமளித்தார்.
காரணீஸ்வரரிடம், பிரம்மா தனது சிருஷ்டி தண்டத்தைப் பெற்ற கதையையும் இத்தல வரலாறு விவரிக்கிறது. அதையும் காண்போம்.
முன்பொரு சமயம், ஸ்ரீதேவிக்கும் சரஸ்வதி தேவிக்கும் இடையில் உலகத்தில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் அதிகம் கருணை புரிபவர்கள் யார் என்ற வாக்குவாதம் நிகழ்ந்தது. இதற்குத் தீர்வு காண இருவரும் தேவர் தலைவன் இந்திரனிடம் செல்ல, தேவேந்திரனோ 'ஸ்ரீதேவிதான் கருணை புரிவதில் சிறந்தவர்!' என்று கூறினான். இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி இந்திரனை நோக்கி, 'உன்னிடமிருக்கும் சங்கநிதி பதுமநிதி எல்லாவற்றையும் இழந்து மதயானையாக மாறித் திரிவாய்!' என்று சபித்தாள். இதனால் மனம் நொந்த இந்திரன் ஸ்ரீதேவியிடம், 'உம்மைப் புகழ்ந்ததனால் அல்லவோ எனக்கு இந்த நிலை!' என்று வேதனைப்பட்டான். அதற்கு ஸ்ரீதேவி இந்திரனிடம், 'நீ, பூலோகத்திலுள்ள காஞ்சி நகருக்குச்
சென்று தவம் செய்! ஸ்ரீமந் நாராயணமூர்த்தியின் அருளால், இழந்த எல்லாவற்றையும் நீ திரும்பப் பெறுவாய்! என திருவாய் மலர்ந்தருளினாள்.
இந்திரன் தந்த தீர்ப்பில் நிறைவுறாத சரஸ்வதி, 'வா, சத்தியலோகம் போவோம்! அங்கு என்ன தீர்ப்பு கிடைக்கிறது எனப் பார்ப்போம்!' எனக் கூறி, சத்தியலோகத்திலிருக்கும் பிரம்மதேவரின் தீர்ப்பை நாடிச் சென்றாள். அங்கும் பிரம்மதேவர், 'ஸ்ரீதேவிதான், கருணை புரிவதில் தலைசிறந்தவள்!' என்று கூறிவிட, மீண்டும் கோபம் கொண்டாள் சரஸ்வதி. பிரம்மன் அவள் கணவன். ஆதலால், 'உம்மை யான் சபிக்க நியாயமில்லை!' என்று கூறி,
படைப்பின் அம்ஸமான பிரம்மாவின் சிருஷ்டி தண்டத்தைப் பிடுங்கிக்கொண்டு பூலோகத்துக்குச் சென்றுவிட்டாள்.
பிரம்மா ஸ்ரீதேவியிடம், 'உண்மையை எடுத்துரைத்ததால், நான் என் தண்டத்தை இழக்க நேர்ந்தது. எனவே, நீங்களே அதைப் பெறுவதற்கான வழியைக் கூறி அருளவேண்டும்!' எனத் திருமகளிடம் வேண்டினார். ஸ்ரீதேவியும் பிரம்மாவிடம், 'இந்திரனால் ஸ்தாபித்து பூஜிக்கப்பட்ட காரணீஸ்வரரை, நீங்கள் பூலோகத்துக்குச் சென்று பூஜித்து வாருங்கள். உமது சிருஷ்டி தண்டம் மீண்டும் உங்களுக்குக் கிடைக்கும்!' எனக் கூற, அதன்படியே பிரம்மாவும் இத்தலத்திற்கு வந்து நிலத்தை சீர்ப்படுத்தி, காரணீஸ்வரருக்கு கிரமப்படி பத்து நாள் உற்சவ கைங்கரியம் செய்தார். பிரம்மாவின் வழிபாட்டில் மனம் மகிழ்ந்த காரணீஸ்வரர் அவர்முன் தோன்றி, 'நீவீர், காஞ்சி நதி தீரத்தை அடைந்து யாகம் ஒன்றை செய்தீர்களானால், ஸ்ரீமந்
நாராயணமூர்த்தியின் அருளால் உங்களது சிருஷ்டி தண்டத்தைப் பெறுவீர்கள்!' என வரமருளினார்.
பிரம்மனால் பூஜிக்கப்பட்ட அந்த பத்து நாள் உற்சவ கைங்கர்யமே, பிரதி வருடம் சித்திரை மாத சுக்கில பட்ச பஞ்சமி திதியில் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் உற்சவம் ஆரம்பித்து, சதுர்த்தசி திதியில் பூர்த்தியாகும்.
இவ்வருட சித்திரைப் பெருவிழா 22.04.2007 அன்று கொடியேற்றத்தோடு தொடங்குகிறது. இவ்விழாவில் மிக முக்கியமாகப் பார்க்கவேண்டியவை வெள்ளி ரிஷப வாகனக் காட்சியும், அறுபத்து மூவர் உற்சவமும். வெள்ளி ரிஷப வாகனக் காட்சியை 26.04.2007 அன்று இரவு 12 மணி வாக்கில் தரிசிக்கலாம். அறுபத்து மூவர் உற்சவத்தை 29.04.2007 ஞாயிறன்று மாலை காணலாம்.
இனி திருக்கோயிலுக்குள் செல்வோம்.
முதலில் ராஜகோபுரம். திருக்காரணீஸ்வரம் என்ற பெயர் தாங்கிய அந்த வானளாவிய ராஜகோபுரம் நம்மை 'வா, வா!' என்று அழைக்கிறது. ராஜகோபுரத்தை அண்ணாந்து பார்த்தவாறே 'சிவ சிவ' என்ற மகாகாரண பஞ்சாக்கரத்தை உச்சரித்துக்கொண்டு உள்ளே நுழைகிறோம். கோபுரவாயில் வழியே உள் நுழைகையில், நேர் எதிரில் நடராஜரின் உருவச்சிலை. கோபுர நுழைவாயிலின் உள் வாயிற்படியில், இருவர் வணங்குவது போன்ற
உருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதைக் காண்கிறோம். அது ஆதொண்ட சக்ரவர்த்தியும், அவரது துணைவியாரும் என்று கூறுகிறார்கள். இச்சக்ரவர்த்தியே காரணீஸ்வரருக்கு விதிப்படி கர்ப்பக்கிரகம், அந்தராளம், அர்த்தமண்டபம் மற்றும் மகாமண்டபங்களைக் கட்டியதோடு, சுற்று மதில்களையும் எழுப்பினாராம். மேலும், மற்ற திருப்பணிகளான கோபதி சரஸின் கரைகளைப் புதுப்பித்தும், நித்திய உற்சவ நைவேத்தியாதிகளை நியமித்தும் பூஜித்து வந்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
ராஜகோபுரத்தின் வழியே உள்ளே சென்று வலப்பக்கமாகச் சென்றால், கொடிமரத்தை அடையலாம். கொடி மரத்தின் கீழே வடக்குப் பக்கமாகப் பார்த்து நமஸ்கரித்து இடப்பக்கம் பார்வையைத் திருப்பினால், கொடிமர விநாயகர் அமர்ந்த நிலையில் அருள்பாலிப்பதைக் காணலாம். அவரை வணங்கி மேற்குப் புறமாகக் சென்றால், கன்னி மூலையிலும் ஒரு விநாயகர். அவரை வணங்கி வலம் வந்து, அதையொட்டினாற்போன்று காணப்படும்
மண்டபத்தின் வழியே உள்ளே நுழைந்தால், கோபுர வாயில் வழியாக வந்தபோது தரிசித்த நடராஜர் இப்போது மிக அருகில் காட்சி தருகிறார்.
அந்த நடராஜர் அமைந்திருக்கும் உள் மண்டப வழியே நுழைந்தால், இடப்பக்கம் கிழக்கு திசையை நோக்கியவண்ணம் லிங்க வடிவில் காரணீஸ்வரர், தம்மை நாடிவரும் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். அவரை வணங்குவதற்கு முன்பாக, வாயிற்காப்பாளர்களாக விளங்கும் துவார பாலகர்களிடம் இறைவனை வணங்குவதற்கு அனுமதி தாருங்கள் என்று வேண்டி, பின்னர் காரணீஸ்வரரை வணங்குகிறோம். இந்திரனுக்கு வாக்களித்தபடி, 'உன்னை நாடி வந்திருக்கும் எங்களுக்கும் நித்தியானந்த வாழ்வைத் தாருமய்யா!' என வேண்டி உட்பிரகாரத்தை வலம் வருகிறோம். உட்பிராகாரத்தை வலம் வருகையில், 63 நாயன்மார்களின் திருவுருவச் சிலைகளையும், தட்சிணாமூர்த்தியையும், நாராயணரையும், பிரும்மாவையும், சண்டிகேஸ்வரரையும், சந்திரசேகரரையும், ஆறுமுகக் கடவுளையும், பிட்சாடன மூர்த்தி, துர்க்கை, நடராஜர் மற்றும் பைரவ மூர்த்தியின் திருவுருவச் சிலைகளையும் கண்டு
வணங்குகிறோம். சிவ தியானத்திலேயே இருக்கும் சண்டிகேஸ்வரருக்கு அருகில் வரும்போது, அவரிடம் கை தட்டி தொந்தரவு செய்யாமல், சொடக்கு போட்டு அவமதிக்காமல், அவர்மேல் நீங்கள் அணிந்திருக்கும் ஆடையின் நூலைப் பிய்த்துப் போடாமல், அமைதியாக அவரருகே சென்று சிவ தரிசனப் பலனைத் தந்தருளுமாறு வேண்டுகிறோம்.
பின்னர், பைரவரை அடுத்து உட்பிரகாரத்திலேயேயுள்ள அருள்மிகு காரணீஸ்வரர் உடனுறையும் சொர்ணாம்பிகையைத் தரிசிக்கிறோம். அபய வரத முத்திரைகளோடு நின்ற கோலத்தில் திகழும் சொர்ணாம்பிகையின் திருக்கோலம் நம் உள்ளத்தை நெகிழ வைக்கிறது. 'சின்னஞ்சிறு பெண்போலே' என்ற பாடல்வரிகளுக்கு ஏற்றாற்போலவே அம்பிகையின் திருவுருவம் அழகுற அமைந்துள்ளது. அந்த அழகுத் தோற்றத்தில் மனம் லயித்து, நம் பாவ
மனத்தைத் தொலைத்து வெளிவருகையில், அம்பிகையின் உட்பிரகாரத்திலேயே சூரியனுக்கும் சிலை அமைத்துள்ளதைக் காண்கிறோம்.
சொர்ணாம்பிகையைத் தரிசித்து கொடிமரம் நோக்கி வெளியேறும் வழியில், பக்கத்தில் சுப்பிரமணியரின் சிலையையும் காண்கிறோம். சுப்பிரமணியரின் சிலையைக் கடந்தவுடன் உள்ளடங்கியிருக்கும் வேதகிரீஸ்வரர் உடனுறை திரிபுர சுந்தரியின் தெவிட்டாத திருவுருவங்களும் நம் மனத்தை கொள்ளை கொள்கின்றன.
கொடிமரத்தினைப் பிரதானமாகக் கொண்டு வெளிப்பிராகாரத்தை வலம் வருகையில் பழனி ஆண்டவர், ஆஞ்சனேயர், நவகிரகங்கள், அகோர வீரபத்திரர், வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணியர் மற்றும் சனீஸ்வரருக்கும் தனித்தனி ஆலயங்கள் இருப்பதைக் காண்கிறோம். அவர்களையும் மனம் ஒன்றி வணங்குகிறோம்.
கொடிமரத்துக்கு நேர் எதிரே நந்தவனமும், அருகிலுள்ள பிரதான மண்டபத்தில் காரணீஸ்வரர் உடனுறை சொர்ணாம்பிகையின் உற்சவச் சிலைகளைக் கண்டு வணங்குகிறோம்.
இந்திரனாலும் பிரம்மனாலும் பூஜிக்கப்பெற்ற இத்தல ஈஸ்வரர், மகாபாரதப் போரினால் அர்ச்சுனனுக்கு ஏற்பட்ட அத்தி தோஷங்களையும் நீக்கியவர்.
மேலும், சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் கன்னட தேசத்திலே விப்பிரர் குலத்திலே அவதரித்து சிறுவயது முதலே சிவ சிந்தனையில் இருந்துவந்த குருலிங்க சுவாமிகளுக்கும் தன் அருளை வழங்கியவர். அவரை இத்தலத்துக்கு வரவழைத்த ஈசன், அவரது சிவத்தொண்டில் மகிழ்ந்து அவர் கையிலேயே லிங்கமாகி அவரை ஆட்கொண்டருளினார் என்றும் கூறுவர்.
குருலிங்க சுவாமிகளின் சமாதி, காரணீஸ்வரர் கோயில் அமைந்துள்ள அதே காரணீஸ்வரர் தெருவில் மகாத்மா காந்தி நூல் நிலையத்தை அடுத்து அமைந்துள்ளது. ஈசனைத் தரிசிக்கவரும் பக்தர்கள் அவரது அடியாரையும் அவசியம் தரிசனம் செய்தல் நலம்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Thanks for letting us 'see' him!
சைதை முரளி,
அன்னமாச்சார்யா கிருதிகள் உங்களுக்கு மிகவும் விருப்பம் போலும்...
இதுவரை தமிழில் இவற்றை மொழி பெயர்த்ததில்லை...விரைவில் முயற்சி செய்கிறேன்.
இவ்விடத்தில் அன்னமாச்சார்யரின் கிருதிகள் கேட்கவும், தரவிறக்கவும் கிடைக்கும்.
Post a Comment