கர்த்தாவின் - இறைவனின் - ஆணையால் பலன் கிடைக்கின்றது. கர்மம் சுய இரக்கமற்ற ஜடம். ஆகையால், கர்மமே கடவுளாகிவிட முடியாது.
நமக்கு மேலாக ஒரு சக்தி உண்டு என்பதை என்றைக்கு ஒருவர் தமது இருதயத்தில் இருத்தி வைக்கிறாரோ அப்பொழுதே அவருடைய அகங்காரம் மெதுவாகக் கரையத் தொடங்குகிறது. அகங்காரம் வருகின்றபொழுது இறைநினைவு நமக்கு இருக்காது. இறைநினைவு இருந்தால் அகங்காரம் இருக்காது. எனவே, சதா நேரமும் எந்தக் காரியம் செய்தாலும் இறைவனை நினைக்கவேண்டும். அவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
நாம் இறைவனுக்கு இன்றைக்கு நன்றியா சொல்கிறோம்? ப்ரார்த்தனை என்றாலே அளிப்பதுதான். ஆனால், இன்றைக்கு நாம் ப்ரார்த்தனையில் இறைவனுக்கு அளிக்கிறோமா?
இறைவனிடம் குறைகூறிக் கொண்டும் புலம்பிக்கொண்டும் யாசித்துக்கொண்டும்தான் இருக்கிறோம். நாம் இப்பொழுது இருக்கின்ற நிலைக்கு யாரும் இறைவனுக்கு நன்றி சொல்வது கிடையாது. நீங்கள் நன்றி சொல்லாமல் இன்னும் எனக்கு வேண்டும், வேண்டும் எனக் கேட்டால், உங்களுக்குத் தரித்திரம்தான் அதிகமாகும்.
கர்த்தாவினுடைய ஆக்ஞையினால்தான் உங்களுக்குப் பலன் கிடைக்கிறது. அதெப்படி? நான்தானே கர்மா செய்கிறேன் என நீங்கள் எண்ணலாம். நீங்கள் கர்மா வேண்டுமெனில் செய்யலாம். ஆனால், பலன் வருவது உங்கள் கையில் கிடையாது. அனைத்து நிகழ்ச்சிகளுமே ஒரு சங்கிலித் தொடர்போல என்பதை உணருங்கள். எல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறது. இந்த சரீரத்தில் இந்த விரலைப் பிடித்துக் கிள்ளினால் கண்ணில் நீர் வழிகிறது.
உண்மையில் அனைத்தும் ஒன்றுதான்.
இங்கே சுண்டுவிரலைக் கிள்ளினால், அங்கே என்னென்னவோ ஆகிறது. ஏனெனில், இது ஒரு முழுமை. அதுபோல்தான் இந்த உலகமும். ஜீவனுக்கு எப்படி இந்த சரீரமோ, அதுபோல உலகம் முழுமையுமே இறைவனுடைய சரீரம்தான். ஆகையினால், எங்கேயாவது ஓர் ஓரத்தில் ஏதாவது நடந்தாலும்கூட, அது உங்களுடைய பலனில் சம்பந்தப்படும். அங்கே சந்திரனில் சாட்டிலைட் இறங்கினால், சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உங்கள் தட்டு கொஞ்சம் அதிரும். இங்கே புல்லை அசைத்தால், அங்கே சந்திரனில் ஏதோ ஓர் அசைவு ஏற்படும். ஒரு நட்சத்திரத்தில் ஏதோ லேசாக நேர்ந்தால், இங்கு பூமியில் அதன் எதிரொலி ஏற்படும். இப்படி அனைத்திலும் ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளது.
கர்மம் ஜடமே! கர்மாவையே பிரதானமாக நினைத்து சதாகாலமும் உங்களுடைய வாழ்நாளை கர்மாவிலேயே கழித்து விடாதீர்கள். கர்மா பெரியதா? கர்த்தா பெரியதா? கர்த்தாதான். கர்த்தாவை யார் நினைக்கிறார்கள்? ஒரு அம்பு எய்தால், அந்த அம்பு மிகவும் வேகமாகப் பாய்கிறது. அந்த அம்புக்கு எங்கிருந்து வந்தது சக்தி? எய்தவனிடமிருந்து அந்த சக்தி வந்திருக்கிறது.
இறைவனை பொருள்களுக்கும் செல்வத்துக்கும் மற்ற விவகாரங்களுக்கெல்லாம் இழுக்கவே கூடாது. அவர்தான் ஏற்கெனவே அனைத்தையும் படைத்து நமக்குக் கொடுத்துள்ளார். புத்தி கொடுத்துள்ளார். நாம் காரியம் செய்து, அடைய வேண்டியதை அடைய வேண்டும். இறைவனை நாம் நம்முடைய அந்தக்கரண சுத்திக்காக அழைக்க வேண்டும். நம்முடைய அகங்காரம் போக, நம்முடைய கீழான குணங்கள் எல்லாம் நம்மைவிட்டு விலக, இறைவனை அழைக்கவேண்டும்.
ரமண மகரிஷியிடம் ஒருவர் சென்று, 'இறைவன் எங்கு இருக்கிறார்? காண்பியுங்கள்!' எனக் கேட்டாராம். அதற்கு ரமண மகரிஷி, 'இறைவனைப் பற்றி எல்லாம் எனக்குத் தெரியாது. பெரிய கேள்வி எல்லாம் என்னைக் கேட்காதீர்கள். நான் ஒன்றும் தெரியாத அப்பாவி. இந்த விரல் எப்படி அசைகிறது என்பதை மட்டும் எனக்குக் கொஞ்சம் சொல்லுங்களேன்!' என்று சொன்னாராம்.
கர்மபலன் நிலையற்றது. இந்த சம்சார சாகரத்தில் இருந்து மீளாமல் மூழ்கியே இருக்கும் நிலைக்கும் எது காரணமெனில், இந்த கர்மாதான்.
நாம் என்ன பலனை எதிர்பார்த்து கர்மா செய்தாலும் பலன் கிடைத்தாலும், அந்தப் பலன் நிரந்தரம் அல்ல. இலட்சியத்தை அடைவதற்குத் தடையாக இருக்கிற விஷயம்தான் கர்மா. அதுவும் கர்மாவை சரியான பாவத்தோடு செய்யவில்லையெனில், அது இன்னும் பெரிய பந்தம். கர்மாவை பாவத்தோடு செய்யும்பொழுது அது கர்மயோகமாக மாறிவிடும்.
அது என்ன பாவம்? செய்யும் கர்மா அனைத்துக்கும் கிடைக்கும் பலன்களை ஈஸ்வரப் பிரசாதமாக ஏற்றுக்கொள்கிற பாவத்தோடு கர்மாவைச் செய்தால் அது கர்மயோகமாக மாறிவிடுகிறது. நாம் செய்கின்ற கர்மாக்களுக்கு வருகின்ற பலன் நிரந்தரமான பலனா? ஏதோ அருகம்புல் சாறு சாப்பிட்டு, புடலங்காய் சாப்பிட்டு, பூசணிக்காய் சாப்பிட்டு ஆரோக்கியம் கிடைக்கிறது. அந்த ஆரோக்கியம் என்ன நிரந்தரமா? ஆரோக்யம் இரு நோய்களுக்கிடையிலுள்ள இடைவெளியே!
யார் ஒருவர் தன்னில் நிலைத்திருக்கிறாரோ அந்த நிலைதான் ஆரோக்யம். எவரொருவர் இறைவனை இறுகப் பிடித்துக்கொண்டு அவரோடு ஒன்றியிருக்கிறார்களோ அவர்களுக்கு ஆரோக்கியம் உத்தரவாதம். எனவே, எது கிடைத்தாலும் பிரசாதம் என்று ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் உங்களுக்குள் இழையோடிக் கொண்டிருக்க வேண்டும்.
No comments:
Post a Comment