Friday, February 25, 2011

காதலர் தினத்தன்று காதலோடு (கிழக்கு அதிரடி புத்தகத் திருவிழா)





ஒரு பத்து தினங்களுக்கு முன்பு நண்பர் முத்துராமனிடமிருந்து ஒரு போன் வந்தது. எப்படியிருக்கிறீர்கள் என்ற குசல விசாரிப்புகளுக்குப் பிறகு, கிழக்கு பதிப்பகத்தின் க்ளியரன்ஸ் ஸேல் (அதிரடி புத்தகத் திருவிழா) நடக்கிறது சென்று பார்த்தீர்களா என்று விசாரித்துவிட்டு, உங்கள் புத்தகங்களும் அதில் உள்ளன, தேவையானதைச் சென்று வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறினார். அன்று மாலையே தி.நகர் சிவா விஷ்ணு கோயில் எதிரில் எல்.ஆர்.ஸ்வாமி ஹாலில் நடைபெறும் புத்தக விற்பனை இடத்துக்குச் சென்றேன்.





அன்று என் கையில் இருந்த தொகை வெறும் ரூ.150 மட்டுமே. அந்தத் தொகைக்கு மட்டும் முதலில் புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்தேன். காதலர் தினத்தன்றும் காதலோடு சென்று சில புத்தகங்களை வாங்கி வந்தேன். அதன்பின் விசாரித்ததில் 21-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்றார்கள். இதன்பின் இரண்டு முறை நண்பர்களிடம் பணம் கடன் வாங்கிக்கொண்டு ரூ900 வரை புத்தகங்கள் வாங்கிவந்தேன். பின்னர் 28-ஆம் தேதிவரை என்றார்கள். நேற்றும் ரூபாய் 150-க்குள் புத்தகங்கள் நண்பருடன் சென்று வாங்கினேன்.





நண்பருக்கு நான் பலமுறை, கிழக்கின் பல புத்தகங்களை அலுவலக ஊழியன் என்ற முறையில் அதற்கான சலுகை விலையில் வாங்கித் தந்திருக்கிறேன். அவரோ இப்போது விற்கும் அதிரடிக் குறைப்பு விலையைப் பார்த்துவிட்டு, முன்னரே இப்படி வரும் என்று தெரியாமல் கிழக்கின் 70 சதவிகிதப் புத்தகங்களை வாங்கிவிட்டேனே என்று வருத்தப்பட்டார். முன்னரே இப்படி வரும் என்று சொல்லக்கூடாதா என்று என்னிடம் வேறு கோபித்துக்கொண்டார். யாருக்குத் தெரியும், கிழக்கு இப்படி ஒரு அதிரடி புத்தகத் திருவிழாவைக் கொண்டாடுமென்று?







புத்தகம் வாங்க வந்திருந்த ஒரு சிலரும், கிழக்கு இப்படி விற்பதைப் பார்த்து பல பதிப்பாளர்கள் கோபம் கொண்டாலும் கொள்ளலாம் பாருங்கள் என்றனர். உடன் நான், இதைப் பார்த்து பல பதிப்பகங்களும் ஏன் இப்படிக் கொண்டுவரக் கூடாது? அப்படிக் கொண்டுவந்தால் நல்லதுதானே? அதற்கு முன்னுதாரணமாக இதைக் கொள்ளுங்களேன் என்றேன். இதற்குப் பதிலாக அந்த நபர், இரண்டு மூன்று முறை பதிப்புகள் போட்டு நன்றாக விற்பனையாகி, அதன்பின் விற்பனையாகாமல் தேங்குபவற்றை வேண்டுமானால் இப்படிப் போடலாம். முதல் பதிப்பு போட்டவற்றையே இப்படிப் போடும்போதுதான் சங்கடமாக இருக்கிறது என்றார். இப்படிச் சொன்னபோதுதான் எனக்கும் ஓர் எண்ணம் தோன்றியது.








சமீபத்திய புத்தகக் கண்காட்சியில் ஜெயமோகனின் ஒரு நூலை ரூ100 விலையில் 600 பிரதிகள் போட்டு அவை விற்றுத் தீர்ந்த வேகத்தைப் பார்த்து, மேலும் ஐயாயிரம் பிரதிகளை பாதிக்குப் பாதி விலையான ரூ50 விலையில் அச்சிட்டிருக்கிறோம் என பத்ரி அவர்கள் குறிப்பிட்டிருந்தார். இதுபோன்று, முதலில் அச்சிடும் ஒவ்வொரு புத்தகத்தையுமே அவற்றின் தரத்துக்கேற்ப குறைந்த விலையில் அச்சிட்டால், இப்படி ஒரு நிலை பின்னர் ஏற்படாதிருக்குமே என்ற எண்ணமே அது.




எது எப்படியோ, அச்சடித்தவைகளையெல்லாம் அவை விற்கும்போது விற்கட்டும் என்ற காத்திருப்பில் செல்லரிக்க விடாமல், குறைந்த விலையிலாவது (எண்பது சதவிகிதம் வரை தள்ளுபடி - புத்தகங்களுக்குத் தகுந்தாற்போல்) அவற்றை மக்கள் வாங்கிச் சென்று படிக்கட்டும் என்ற பத்ரியின் உண்மையான அக்கறைக்கு ஒரு ராயல் சல்யூட் வைத்தே ஆக வேண்டும். அவர் கடை விரித்திருக்கிறார், நீங்கள் கொள்ளத் தயாராகுங்கள். தி.நகரில் என் கேமராவில் க்ளிக்கியவையே இங்கு உங்கள் பார்வைக்கு விருந்தாக்கியிருக்கிறேன். இதனுடன் என் வீட்டு லைப்ரரி படங்களும் உண்டு.





இன்றோடு சேர்த்து இன்னும் மூன்றே நாட்கள்தான் இந்த விற்பனை. விற்பனை நடைபெறும் இடங்கள் கீழே.

இடம் 1:
மைலாப்பூர் குளம் எதிரில்.
தொலைபேசி எண் : 9500045643

இடம் 2:

L.R. சுவாமி ஹால்
சிவா விஷ்ணு கோயில் எதிரில்
சங்கர பாண்டியன் ஸ்டோர் அருகில்
தி. நகர்,சென்னை
தொலைபேசி எண் : 9500045608

தேதி:
பிப்ரவரி 28 வரை.

-சைதை முரளி.

No comments: